மும்பை, அக். 14- மகாராட்டிர மேனாள் அமைச்சர் பாபா சித்திக் (66) மும்பையில் 12.10.2024 அன்று இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.
பீகார் தலைநகர் பாட்னாவை சேர்ந்தவர் பாபா சித்திக். இவர் சிறுவனாக இருக்கும்போது இவரது குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. கடந்த 1977ஆம் ஆண்டு மும்பை யில் உள்ள கல்லூரியில் படித்த போது காங்கிரஸின் மாணவர் அமைப்பில் இணைந்தார். கடந்த 1998ஆம் ஆண்டில் மும்பை இளைஞர் காங்கிரஸ் தலைவராக பதவி யேற்றார். கடந்த 1993ஆம் ஆண்டில் மும்பை மாநகராட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 1999ஆம் ஆண்டில் பாந்தரா மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெ டுக்கப்பட்டார். கடந்த 2014 வரை இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். கடந்த 2004 முதல் 2008ஆம் ஆண்டு வரை மகாராஷ்டிராவின் உணவு, தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் காங்கிரஸில் இருந்து விலகிய பாபா சித்திக், அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸில் இணைந்தார். அவர் மகா ராட்டிர வீட்டு வசதி ஆணையத்தின் தலைவராக பதவி வகித்தார். மும்பை நிழல் உலக தாதாக்களுக்கும் பாலிவுட் திரையுலகத்துக்கும் இடையே அவர் பாலமாக செயல்பட்டு வந்ததாகக் கூறப் படுகிறது. இந்த சூழலில் மும்பை பாந்தரா கிழக்குப் பகுதியில் 12.10.2024 அன்று இரவு பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து மும்பை காவல்துறையினர் கூறியதாவது: பாபா சித்திக்கின் மகன் ஜீஷான் சித்திக், பாந்தரா கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு மகனின் அலுவலகத்தில் இருந்து பாபா சித்திக் வெளியே வந்து தனது காரில் ஏறினார். அப்போது 3 நபர்கள், அவரை குறி வைத்து கைத்துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் 3 குண்டுகள் பாபா சித்திக்கின் உடலை துளைத் தன. உடனடியாக அவர் லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.
துருக்கியில் தயாரிக்கப்பட்ட ஜிகானா கைத்துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த துப்பாக்கிகளை பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் இந்தியாவுக்கு கடத்தி வந்திருப்பதாக சந்தேகிக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மகாராட்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறும்போது, “துப்பாக்கி சூட்டில் பாபா சித்திக் உயிரிழந்தது கெட்ட வாய்ப்பாகும். இந்த கொலை தொடர்பாக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த குர்மைல் பல்ஜித் சிங், அரியானாவை சேர்ந்த தர்மராஜ் ராஜேஷ் காஷ்யப் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த சிவ குமார் என்ற 3ஆவது நபரை காவல் துறையினர் தேடுகின்றனர். வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மரியாதையுடன் பாபாசித்திக்கின் இறுதிச் சடங்கு நடத்தப் படும்.
இதுகுறித்து லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சமூக வலைதளத்தில் நேற்று (13.10.2024) வெளியிட்டுள்ள பதிவில், “நடிகர் சல்மான்கான், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் உடனான தொடர்பு காரணமாக பாபா சித்திக்கை கொலை செய்துள்ளோம். சல்மான் கான், தாவூத் இப்ராகிமுக்கு யார் உதவி செய்தாலும் அவர்களை பழிவாங் குவோம்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சல்மானின் நிகழ்ச்சிகள் ரத்து: பாபா சித்திக் கொலையை தொடர்ந்து நடிகர் சல்மான் கானின் மும்பை வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நடிகர் சல்மான் தற்போது இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்புகள், அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.