கவிஞர் கலி.பூங்குன்றன்
கையில் ஒரு தொழில் இருந்தால் கவலையே இல்லை…’ என்பதற்கு உதாரண மாக, கோவிந்தசாமி என்ற ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார் லென்ஸ் மாமா. ‘கோவிந்தசாமி ஒரு, ‘இன்ட்ரஸ்டிங் கேரக்டர்’ என் வீட்டில் மரம் ஏறி தேங்காய் பறித்துப் போடுவது அவர் தான்…’ எனக் கூறினார் லென்ஸ் மாமா.
கோவிந்தசாமியிடம் பேச்சுக் கொடுத்தேன்…
‘திருவொற்றியூர் தாங்க என் சொந்த ஊர். திருவொற்றியூரில் ஒரு கம்பெனியில தொழிலாளியா வேலை பாத்தேங்க… அந்த கம்பெனிய, 1990இல் மூடிட்டாங்க. ‘அதப்பத்தி எல்லாம் நான் கவலைப்படல… படிக்கும் போதே எங்கப்பாகிட்டே இருந்து, தென்னை மரம் ஏற கத்துக் கிட்டேன். இப்போ எனக்கு, 45 வயசு; ரெண்டு பையனும், ரெண்டு பொண்ணுங்களும் இருக்காங்க. கம்பெனிய மூடுனதும், எங்கப்பா விட்டுப் போன மரம் ஏறும் சாமான்களை எடுத்து இடுப்பில் கட்டிக் கிட்டேன். சென்னையில் உள்ள பங்களாக் களில், தேங்காய் பறிக்கும் வேலய இப்போ செஞ்சுகிட்டு இருக்கேன். கம்பெனியில வாங்கின சம்பளத்துக்கு குறையாமல் வரும்படி வருது; இப்ப என் பெண்ணோட கல்யாணத்துக்கு வரன் பார்த்துக்கிட்டு இருக்கேன்.
‘என்னோட ரெண்டு பசங்களும் லேத், டர்னிங் தொழில்களை பத்தி படிக்கிறாங்க; என் கடைசி மகளை மட்டும் பள்ளிக் கூடத்துக்கு அனுப்புறேன். என் கையில் தொழில் இருக்கு… எதுக்கும் கவலை இல்லே…’ என்று சந்தோஷமாக கோவிந்த சாமி சொல்லி முடித்தபோது, லென்ஸ் மாமா ஆரம்பித்தார்…
‘அப்போது, ராஜாஜி சென்னை ராஜ தானியில், (பின், ஆந்திரம் பிரிந்தது.) முதல்வராக இருந்தார்; சுதந்திர நாட்டில் கல்வி கற்க நிறைய பள்ளிகள் தேவைப் பட்டன. செங்கல் கட்டடத்திற்கும், மர பெஞ்சுகளுக்கும் நிறைய செலவிடுவதற்கு பதில், இருக்கும் பள்ளிகளில், ‘ஷிப்ட்’ முறையை கொண்டு வரலாம் என்றார் ராஜாஜி. ‘மிச்ச நேரத்தில் மாணவர்கள் என்ன செய்வர்…’ என்று, ‘ஷிப்ட்’ முறையை எதிர்த்தவர்கள் கேட்டனர். ‘தகப்பனார் செய்யும் தொழிலை செய்யட்டும்; பல பெற்றோர், தங்கள் தொழிலுக்கு பிள்ளைகளின் உதவி தேவை என்பதால், பிள்ளை களை பள்ளிக்கு அனுப்ப மறுக்கின்றனர். இம்முறை யால் கல்வியும் கற்கலாம்; தகப்பன் தொழிலுக்கும் உதவ முடியும்…’ என்று கூறினார் ராஜாஜி. அதற்கு பயங்கர எதிர்ப்பு மூண்டது. ராஜாஜி, முதல்வர் பதவியை துறக்க, இதுவும் ஒரு காரணமாகி விட்டது. ‘கோவிந்தசாமி இன்னைக்கு கூறும் அறி வுரையை ராஜாஜி, 60 வரு டங்களுக்கு முன்பே எண்ணிப் பார்த் துள்ளார்…’ என்றார் லென்ஸ் மாமா.
– கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்ள, நாமும் ஏற்பாடு செய்து கொள் வோமா?
– இப்படி எழுதும் ஏடு – தினமலரைத் தவிர வேறு எதுவாகத் தானிருக்க முடியும்? (26.10.2014 பக்.8).
யாரோ ஒரு கோவிந்தசாமியாம் – தான் பார்த்த வேலை பறி போய் விட்டதாம் அவரின் அப்பன் தொழில் அவர் கைவசம் இருந்ததாம்! அப்பன் தொழில் என்றால் வேறு ஒன்றும் இல்லை; மரம் ஏறும் தொழிலாம் அதை வைத்துக் கொண்டு பிழைத்துக் கொண்டாராம்.
அதோடு நிறுத்தியிருந்தால் கூடப் பரவா யில்லை. ராஜாஜி 1952இல் சென்னை மாநில முதல் அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்தாரே; அரை நாள் பள்ளிக் கூடம் வந்து படித்தால் போதும்; மீதி அரை நேரத்தை மாணவர்கள் அவர்களின் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்று ஒரு திட்டத்தை அறிவித்தாரே – அந்தத் திட்டத்தின் ஆணி வேருக்கே சென்று அங்கமச்ச அடையாளங்களை யெல்லாம் அவதானித்து, அந்தத் திட்டம் வேறு ஒன்றும் இல்லை அசல் வருணாசிரம திட்டம் அப்பன் தொழிலை பிள்ளைகள் செய்யும் நவீன குலக் கல்வித் திட்டம் என்று தந்தை பெரியார் அம்பலப்படுத்தினாரே – அந்த ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தோடு திருவொற்றியூர் கோவிந்த சாமியைக் கொண்டு வந்து முடிச்சுப் போடுகிறது தினமலர் ஏடு. முடிச்சுப் போடுவதிலும் முடிச்ச விழ்ப்பதிலும் கை தேர்ந்த முப்புரி கூட்டமாயிற்றே! சும்மா இருக்குமா?
இந்தக் கூட்டத்திற்கு மிகவும் நன்றாகவே தெரியும்.
1952இல் கொல்லைப்புற மாக ஆட்சியைப் பிடித்து நாற்காலியில் அமர்ந்த கீழ்ப் பாக்க முனிவர் ஆச்சாரியார்; அவர் அறிமுகப் படுத்திய ஆரிய குலக் கல்வித் திட் டமே அவரின் அரசியல் வாழ்வுக்குக் குழியைப் பறித்தது! அந்தக் குழியைப் பறித்து அத்தோடு ஆச்சாரி யாரின் அரசியல் வாழ்வை அஸ்தமனிக்கச் செய்த தலைவர் தந்தை பெரியார்அல்லவா!
அந்த ஆத்திர அலை 60 ஆண்டு களுக்குப் பிறகும்கூட அவர்களுக்கு அடங்கவில்லை; உடம்பெல்லாம் மூளை என்று ஆச்சாரியாரை ஆகாயத்தில் ஊஞ்சல் கட்டி ஆராரோ பாடினோமே – அந்த சாணக்கியரையே அரசியல் அனாதை ஆக்கி விட்டதே இந்த சுனா மானா கூட்டம் – ஈரோடு ராமசாமி நாயக்கர் கூட்டம் என்ற எரிச்சல் 72 ஆண்டுகளுக்கு பிறகும் எகிறி குதிக்கிறது என்றால் – பார்ப்பனர் நயவஞ்சகத்தை கன்னத்தில் அடைத்து வைத்து காலம் வரும் பொழுது கக்கும் ஆலகால நஞ்சை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட் டத்தை எதிர்த்து அந்த ஈரோட்டுச்சிங்கம் தலைமை தாங்கியது உண்மைதான். கருஞ்சட்டைப் படை வரிசை தீப்பந்தம், தீப்பெட்டி சகிதமாக தலைவரின் நாள் குறிப்பை எதிர்பார்த்து அணிவகுத்ததும் உண்மையே!
அதே நேரத்தில் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, இந்து ஏடுகூட எதிர்த்து எழுதியது என்ற உண்மை தெரியுமா தினமலருக்கு? காங்கிரசுக்குள்ளேயே கனல் மூண்டது; அதற்கான காரணத்தை ஆராய்ந்ததா தினமலர்?
1952இல் மட்டுமல்ல 1937இல் சென்னை மாநிலத்தின் பிரதமராக (Premier) இதே சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) ஆட்சிக்கு வந்த போதுகூட 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினாரே!
அப்பொழுது இருந்த பள்ளிகளின் எண்ணிக்கையே குறைவு; அதுவும் கிராமங்களில் கேட்கவே வேண்டாம். அந்தச் சூழ்நிலையிலேயே 2500 பள்ளி களை மூடினார் என்றால் அதன் பொருள் என்ன?
1952இல் ஆட்சிக்கு வந்தபோதுகூட அரைநேரம் படிப்பு – அரை நேரம் அப்பன் தொழில் குலத்தொழில் என்று ஆணை பிறப்பித்தபோதும் மறக்காமல் அவருக்கே உரிய இன்னொரு வேலையாக குல்லூக பட்டர் ஆச்சாரியார் 6000 பள்ளிகளை இழுத்து மூடினார். பள்ளிகளைத் திறப்பது தான் முதல மைச்சரின் பணி என்ற பொது விதி இருந் தாலும், அதனை முறியடித்து மூடுவதற் கென்று வந்த முதலாவது முதல் அமைச்சர் ராஜாஜிதான் – உடல் முழுவதும் மூளை உள்ளவராயிற்றே – சாதாரணமா?
ஒரு மக்கள் நல அரசின் முதற்கடமை மக் களுக்குக் கல்வியைக் கொடுப்பதே – கண்களைத் திறப்பதே – ஆனால் உள்ள கண்ணையும் நொள்ளைக் கண்ணாக்குவதற்கு ஒரு முதல் அமைச்சரா என்ற கேள்வி எழலாம்.
அப்படி கேள்வி எழுப்புவதுகூட பாமரத் தனமானதுதான் ஆச்சாரியார் ஒன்றும் விவரம் தெரியாத பேர்வழியல்லர் – எல்லாம் அறிந்தவர்தான் – தெரிந்தவர்தான்!
அப்படி இருக்க் கூடிய ஒருவர் இதை ஏன் செய்தார் என்று கேட்டால் அதுதான் அர்த்தமுள்ள கேள்வியாகும்.
சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதுதானே பார்ப்பன தர்மம் – மனுதர்மம் – வேத தர்மம்?
அதனைச் செயல்படுத்திக் காட்ட வேண்டியது ஒவ்வொரு பார்ப்பனரின் தர்மமாகவே ஆகி விட்டது. 20ஆம் நூற்றாண்டிலும் 21ஆம் நூற்றாண் டிலும் தீண்டாமை க்ஷேமகரமானது என்று சங்கராச்சாரியார்கள் சொல்ல வில்லையா?
இது வெகு மக்களை வெகுண்டெழச் செய்யும் என்பதை அவர்கள் அறிய மாட்டார்களா?
முதல் அமைச்சர் பதவி போனாலும் பரவா யில்லை – தமது தர்மம் முக்கியமானது என்று அரசியல் ஆச்சாரியார் உறுதியாக நிற்கிறார். தீண்டாமை க்ஷேமமானது என்று சொல்லுவதால் கூட்டம் போட்டு நார் நாராகக் கிழிப்பார்கள்; சங்கரமடத்தைக் கடுமையாக விமர்சனம் செய்வார்கள். ஏன் கொடும்பாவிகூட எரிப்பார்கள் என்று சங்கராச்சாரியார் அறிய மாட்டாரா?
அதைப்பற்றிக் கவலை இல்லை; நமது ஆத்மார்த்தம் ஆன்மீகம் தான் முக்கியம் – அதனை நிலை நிறுத்துவதே நமது தர்மம் என்பதில் சங்கராச்சாரியார்கள் உறுதியா கவே இருக்கிறார்கள்.
அரசியல் ஆச்சாரியராக இருந்தாலும் சரி, ஆன்மிக ஆச்சாரியராக இருந்தாலும் சரி, அவர்கள் மனுதர்ம வழியில் நிற்பதில், வேத வழியைக் கடைப்பிடிப்பதில், நிலை நிறுத் துவதில் எவ்வளவு உறுதியாக இருக் கிறார்கள் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியதாகும்.
தர்மம் கெட்டுப் போனால் அதர்மத் தினாலாவது இதைத்தடுக்க முயலுவது ஒரு தர்மமாகும் என்று பேசினாரே ராஜாஜி (சென்னை கோகலே மண்டபத்தில் சுதேசமித்திரன் 16.2.1964).
குலக் கல்வியைக் குழி தோண்டிப் புதைத்து, அதன் காரணமாக ஆச்சாரியார் அரசியல் அனாதை ஆக்கப்பட்டு அரை நூற்றாண்டு கடந்த பிறகும், அதனை நியாயப்படுத்த தினமலர்கள், கல்கிகள். துக்ளக்குகள் இன்றும் ‘அவதாரம்’ எடுத்து, ஆயிரம் தலை ஆதிசேஷனாக படம் எடுத்து ஆடுவதையும், கொத்துவதையும் கவனிக்க வேண்டும் – அந்த இதழ்களைக் காசு கொடுத்து வாங்கும் பரிதாபத்துக்குரிய நமது தமிழர்கள்.
“மாணவர்கள் வெறும் ஏட்டுக் கல்வி கற்பதோடு நின்றுவிடாமல், ஏதாவது ஒரு தொழிலையும் ஓரளவு கற்றுக் கொள்ள வேண்டும் என்று ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது முடிவு செய்தார்.
ஒரு மாணவனுடைய பெற்றோர் எந்தத் தொழில் செய்கிறார்களோ, அந்தத் தொழிலை அவனுக்கும் கற்பித்தால், அவனுடைய பெற்றோர்க்கும் அது உதவியாக இருக்கும்; பார்த்துப் பழக்கம் இருக்கும் என்பதால், அவனுக்கும் அது எளிதாக வரும் – என்ற முறையில் அவர் சிந்தனை ஓடியது. முடிவைப் பொறுத்த வரை நல்ல எண்ணத் தோடு செய்யப்பட்ட முடிவுதான். அச்சத்தின் காரணமாக அதை மாற்றாத உறுதியும் ராஜாஜி யிடம் இருந்தது. செயல்படுத்தக் கூடிய துணிவும் இருந்தது.
ஆயினும் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தபோது அவர் பதவியைத் துறக்க வேண்டியதாயிற்று. தனது கட்சியை அவர் கலந்து ஆலோசிக்க வில்லை. குலக்கல்வி எனப் பேச்சு வந்த போது, அந்தத் திட்டத்தைக் கொண்டு வருவதில் தனக்கு இருந்த நோக்கம், நல்லெண்ணம் போன்றவற்றை எடுத்துக் கூறி மற்றவர்களும் அதை ஏற்குமாறு செய்வதற்கு ராஜாஜி முனையவில்லை.
கட்சிக்குச் சற்றே வளைந்து கொடுத்து, மற்றவர்களும் அதை ஏற்குமாறு செய்து, சிலரைச் சமாதானப்படுத்தி, பெயருக்குக் சில மாற்றங்களைச் செய்து, மக்களிடையே நின்று, திட்டத்தின் நன்மைகளை விளக்கிச் செயலாற்றும் அளவுக்கு இறங்கி வர அவர் தயாராக இல்லை. அதனால் அவரும் பதவியை விட்டுப் போனார். திட்டமும் போயிற்று. அதை எதிர்த்துப் புரளி கிளப் பியவர்களின் பேச்சு எடுபட்டது. ராஜாஜியின் நல்லெண்ணம் அடிபட்டது.”
(துக்ளக் 15.7.1988)
“ராஜாஜி ஒரு வேளை படிப்பு, ஒரு வேளை தொழில் என்றார். அவர் திட்டம், இருக்கிற பள்ளிகளையும், ஆசிரியர்களை யும் வைத்துக் கொண்டே இரட்டிப்பு எண்ணிக்கையில் நவீன கல்வி போதிக்க வழி வகுத்தது. அதே நேரத்தில் உடல் உழைப்பின் மகத்துவத்தை அவர்களுக்கு உணர்த்தியது. தொழில் அறிவையும், ஆர்வத்தையும் பெருக்கியது.
எந்தத் தொழிலானாலும் அது இழி வில்லை என அறிவுறுத்தியது. குமாஸ்தா மனப்பான்மையை விரட்டி அடிப்பது, தொழில் உற்பத்திக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுவது, வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவது. தொழிற் கல்வித் திட்டத்தைக் குலக்கல்வித் திட்டம் என்று பெயர் சூட்டி ஒதுக்கியது அன்றைய பொறாமை அரசியலுக்கு வசதியாக இருந்தது. அவ்வளவுதான்” என்று கல்கி எழுதுகிறது 26 ஆண்டுக்குப் பிறகு.
(கல்கி 1980 ஜூலை).
ஆச்சாரியாரின் குலக்கல்வி – தொழிற் கல்வியாம்; மலம் எடுப்பவன் மகன் மலம் எடுக்கும் தொழிலைச் செய்ய வேண்டும். பார்ப்பனர்கள்தான் பெரும்பாலும் படிப் பாளிகள். உத்தியோகம் பார்ப்பவர்கள் (1950_களைக் கணக்கில் கொள்ள வேண் டும்). வழக்குரைஞர்களாக, மருத்துவர்களாக, இருப்பார்கள். பொறியாளர்களாக இருப் பார்கள். அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் பிற்பகலில் என்ன தொழிலைச் செய் வார்கள்? புள்ளி விவரம் வாரியாக இதுவரை இந்த வினாக்களுக்குப் பதிலிறுத்ததுண்டா பார்ப்பன வகையறாக்கள்?
தினமலர் என்ன சொல்லுகிறது?
கேள்வி: இன்றைய இளைய சமுதாயத் தினருக்கு பல்கலைக் கழகங்கள் கல்வி கற்றுத் தருவதை விட ஏதாவது கைத் தொழில் கற்றுத் தந்தால் என்ன? பட்டத்தை வைத்துக் கொண்டு ரோடு ரோடாக அலைந்து திரிவதை விட, கைத்தொழில் ஒன்றைக் கற்றுத் தொழில் செய்யலாமே?
பதில்: கற்றுத் தருவதைவிட – என்பதை விட – நீங்கள் கூறும் திட்டத்தையும், அன்றைய முதல்வர் ராஜாஜி அமல்படுத் தினாராம். (படித்து, கேட்டுத் தெரிந்து கொண்டதால் ராம் போட்டுள்ளேன்). அப்போது இந்தத் திராவிடக் கட்சிகள் குய்யோ முறையோ எனக் கத்தி பைசா பெறாத காரணங்களைக் கூறி, ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு, இக்கல்வி முறையை (காலையில் ஏட்டுக் கல்வி- மாலையில் தொழிற்கல்வி) தொடரவிடாமல் தடுத்துள்ளனர். பலனை
இன்று அனுபவிக்கிறோம். – (தினமலர் -வார மலர் 4-4-2010)
இப்படி இவர்கள் தொடர்ந்து ஆச் சாரியாரின் குலக்கல்வி திட்டத்தை விட்டுக் கொடுக்காமல் தோளில் சுமந்து திரி கிறார்கள். இப்பொழுது அந்தக் கும்பலோடு, உச்சநீதிமன்றத்தின் மேனாள் நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜூவும் ஆலிங்கனம் செய்து கொண்டுள்ளார்.
ஜாதிய அமைப்பு இந்தியாவிற்கு மிகப் பெரும் கேடு செய்ததாக பலர் நினைக் கின்றனர் – இன்றைய இந்தியாவில் இது உண்மையாக இருந்தாலும், மத்திய காலத்தில் தொழில் முறையில் இருந்த ஜாதிய அமைப்பு நாட்டின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது. அன்றைய காலத்தில் தாழ்த்தப் பட்ட மக்கள் கேவலமாக நடத்தப்பட்டனர் என்பது ஒரு கற்பனையே!
ஆங்கிலேயர்கள் வரும் வரை இந்த ஜாதியினர், ஏதோ ஒரு வகையான கைவினைத் தொழிலை செய்து வந்தனர். அதன் பின்னரே வேலை இழந்து ஏழைகள் ஆயினர். ஏழை ஆகிவிட்டதால் சமுதாயம் அவர்களை மதிக்கவில்லை.
உதாரணமாக சாமர் (தோல் தைக்கும் தொழில் செய்யும் சமூகம் அதாவது செருப்புத் தைப்பவர்கள்) எனப்படுபவர்கள் பாட்டா (Bata) போன்ற பெரு நிறுவனங் களின் வருகைக்குப் பின்னரே தொழில் இழந்து சமூகத்தில் கீழ் நிலைக்குச் சென் றனர். அவ்வாறே மற்ற கைவினைத் தொழில் செய்த ஜாதியினரும், ஆங்கி லேயர்களின் இயந்திர ஆலை காரணமாக வேலை இழந்து ஏழையாக மாறி, சமூகத்தில் மதிப்பிழந்து கீழ் நிலைக்குத் தள்ளப் பட்டனர் உச்சநீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூதான். (வலைத்தள முகவரியில்) இப்படி எழுதுகிறார் என்பதை கவனிக்க வேண்டும். கட்ஜூ சொல்லு வதைப் பார்த்தால் தாழ்த்தப்பட்டவர்கள் ஏழையாக ஆனது அவர்கள் குலத் தொழிலை விட்டதால் என்பதுதானே!
ஆங்கிலேயர்களின் இயந்திர ஆலை காரணமாக வேலை இழந்து ஏழையாக மாறி, சமூகத்தில் மதிப்பிழந்து கீழ் நிலைக் குத் தள்ளப்பட்டனர் என்கிறாரே உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி; ஏழைகளாக இருப்பதுதான் தாழ்த்தப்பட்டவர்கள் கீழ்நிலைக்கு ஆளானதற்குக் காரணமாம்; அப்படியானால் பார்ப்பனர்களில் ஏழைகளாக இருப்பவர்கள் ஏன் கீழ்நிலைக்கு ஆளாக்கப்படவில்லை? தீண்டாதார் என்று ஊரில் ஒரு கடைக்கோடிக்கு விரட்டப் படவில்லை?
வெள்ளைக்காரன் ஆலை ஏற்படுத் தியது எப்பொழுது? மனுவும், வேதமும் தோன்றியது எப்பொழுது? நான்கு வருணத் துக்குள்ளும் வைக்காமல் புற ஜாதியினராக (Out Caste) என்று தாழ்த்தப்பட்டவர்கள் ஒதுக்கப்பட்டனரே அது எப்படி?
பணக்கார தாழ்த்தப்பட்டவராக இருந் தாலும் அவர் தாழ்த்தப்பட்டவர் – தீண்டத்தகாதவர் என்பதுதானே இந்து மதத்தின் நிலை!
மெத்தப் படித்த இந்த மேதாவிக்குத் தெரியாதா? ஆயிரம் இருந்தாலும் அவர் கட்ஜூ ஆயிற்றே! அந்தத் தன்மையிலிருந்து வெளியேற முடியுமா?
கடைசியாக தொடங்கிய முதல் இடத்திற்கு வருவோம் தினமலர் எழுதும் அந்த திருவெற்றியூர் தோழர் கோவிந்த சாமி வேலை வாய்ப்பை இழந்ததால் மரம் ஏறிப் பிழைத்தார் அல்லவா! கோவிந்த சாமிக்குப் பதில் கோவிந்தம்மாளாக இருந்தால் குலத் தொழில் என்று மரம் ஏறிப் பிழைக்கும் சூழல் அவருக்கு உண்டா?
கோவிந்தசாமிக்கு பதில் கோவிந்தச்சாரியாராக இருந்தால் அவர் என்ன செய்திருப்பார்? அதைப்பற்றி எல்லாம் தினமலர் ஏடு எழுதாது, ஏன் சிந்திக்கவும் கூடச் செய்யாது.
அரசியல் பார்ப்பனராக இருந்தாலும் ஆன்மிக சங்கராச்சாரியாராக இருந்தாலும், உச்சநீதிமன்ற பார்ப்பனராக இருந்தாலும், பத்திரிகைப் பார்ப்பனனாக இருந்தாலும், உஞ்சி விருத்திப் பார்ப்பனனாக இருந்தாலும் சரி, எப்படிஒரே மாதிரியாக சிந்திக்கிறார்கள்? ஒரே நேர்கோட்டில் நிற்கிறார்கள்? ஒரே புள்ளியில் இணைகிறார்கள்? விடை தெரியவில்லையா? ஈரோட்டுக் கண்ணா டியைப் போட்டுப் பாருங்கள் புரியும் – துல்லியமாகவே தெரியும்.
இன்றைக்கு விஸ்வகர்மா யோஜனா என்ற திட்டத்தை (18 ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு) திணிக்கத் துடிக்கிறதே மனுவழி வந்த ஒன்றிய பிஜேபி அரசு – இவற்றை எல்லாம் உள்வாங்கிக் கொண்டால்தான், பார்ப்பனர்கள் நகர்த்தும் ஒவ்வொரு காய்க்குள்ளுமிருக்கும் சூட்சம நஞ்சைப் புரிந்து கொள்ள முடியும்.
சிந்து சமவெளி நாகரிகத்தைப் புதிதாக ஆய்வு செய்யப் போகிறார்களாம் – 17 பேர் கொண்ட குழுவாம் – அதில் 14 பேர்கள் பார்ப்பனர்கள், மூன்று பேர் அரசு அதிகாரிகள் கீழடி ஆய்வை முடக்க நினைத்தவர்கள் நினைவிருக்கட்டும்!
(வளரும்)