ஜெய்ப்பூர், அக். 13- ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் அருகே வசித்து வந்த மூத்த இணையர்கள், தங்களது சொத்துக்காக பிள்ளைகள் கொடுமைப் படுத்தியதால், விபரீத முடிவெடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
70 வயது ஹசாரிராம் பிஷ்னோய் மற்றும் அவரது 68 வயது மனைவி சாவாலி தேவி ஆகியோர், வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இவர்கள் இறப்பதற்கு முன்பு, வீட்டின் சுவரில் ஒரு போஸ்டரை ஒட்டியிருக்கிறார்கள். அதில், தங்களை பிள்ளைகள் எவ்வாறெல்லாம் அடித்துத் துன்புறுத்தினார்கள், கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்கள் என்பது குறித்து அவர்களே விவரித்துள்ளனர்.
பல முறை, தங்களை பிள்ளை களும் மருமகள்களும் அடித்துத் துன்புறுத்தியதாகவும், அதோடு மட்டுமல்லாமல், அவர்கள் எங்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி, எங்களுக்கு உணவளிப்பதை நிறுத்தி விட்ட தாகவும், ஒரு தட்டை எடுத்துக்கொண்டு பிச்சை எடுங்கள் என்று எங்களை கூறியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள் இருவரும். இந்த இணையர்களுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர்.
இரண்டு பக்கங்களில் கைப்பட எழுதிய தற்கொலைக் கடிதத்தை அவர்கள் சுவரில் ஒட்டியிருக்கிறார்கள். எங்களது நிலையை யாருக்காவது சொன்னால், உறங்கிக் கொண்டிருக்கும்போதே கொன்றுவிடுவோம் என்று மகன்களும் மகள்களும் மிரட்டியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த தற்கொலைக் கடிதத்தில், அவர்களது பிள்ளைகள், மருமகள்கள், மகள்கள் மற்றும் சில உறவினர்களின பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், எங்கள் பெயர்களில் இருக்கும் அனைத்து சொத்துகளையும் அவர்கள் பிடுங்கிக் கொள்ள முடிவெடுத்து தங்களை அடித்துத் துன்புறுத்தியதாகவும், இதற்கு சில உறவினர்களும் உடந்தையாக இருந்ததாகவும் கூறியிருக்கிறார்கள்.