பெங்களூரு, அக்.13 கருநாடகாவில் பெண்ணின் உடையை விமர்சித்த வாலிபர், ‘ஒழுங்காக உடை அணியாவிட்டால் ஆசிட் வீசுவேன்’ என மிரட்டல் விடுத்த நிலையில், அவர் பணிபுரிந்து வந்த நிறுவனம், வேலையில் இருந்து அந்த நபரை நீக்கியுள்ளது.
கருநாடக மாநிலம் பெங்களூருவில், ‘எடியாஸ் டிஜிட்டல் சொல்யூஷன்ஸ்’ என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு, நிகித் ஷெட்டி என்பவர் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர், பெண் ஒருவரின் ஆடைத் தேர்வு குறித்து சமீபத்தில் விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக, அந்த பெண்ணுக்கு தொடர்ந்து தொல்லை தந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணின் கணவரும், பத்திரிகையாளருமான ஷாபாஸ் அன்சாருக்கு சமூக வலைதளம் வாயிலாக அனுப்பிய பதிவில், ‘உன் மனைவியை ஒழுங்காக ஆடை அணியச் சொல். இல்லை என்றால், அவள் முகத்தில் ஆசிட் வீசுவேன்’ என சமீபத்தில் மிரட்டல் விடுத்திருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஷாபாஸ், நிகித் ஷெட்டியின் இந்த பதிவை சமூக வலைதளத்தில் மறுபதிவேற்றினார்.
அதில், ‘இந்த நபர் என் மனைவியின் ஆடை தேர்வு விஷயத்தில் தலையிட்டு, அவர் மீது ஆசிட் வீசுவேன் என மிரட்டுகிறார். ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் முன், இவர் மீது நடவடிக்கை எடுக்கவும்’ என பதிவிட்டிருந்தார். கருநாடகா காவல்துறை தலைமை இயக்குநர் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவகுமார் ஆகியோரை இந்த பதிவில் அவர் டேக் செய்திருந்தார். இதையடுத்து, நிகித் ஷெட்டி மீது நடவடிக்கை எடுத்த எடியாஸ் நிறுவனம், அவரை வேலையை விட்டு நீக்கியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்த நிகித், மற்றொரு நபரின் ஆடை தேர்வு குறித்து அச்சுறுத்தும் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
‘இது எங்கள் நிறுவனத்தின் கொள்கைகளுக்கு எதிரானது. பாதுகாப்பான சூழலை வளர்ப்பதில் உறுதியாக உள்ள நாங்கள், இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளோம். ‘அய்ந்து ஆண்டுகளுக்கு நிகித்தின் வேலை பறிக்கப் பட்டுள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செய் துள்ளோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.