லக்னோ, அக்.13 ஜாதி ரீதியில் மக்களை பிளவுபடுத்துகிறது பா.ஜ.க. என்று சமாஜ்வாதி
தலைவா் அகிலேஷ் குற்றஞ்சாட்டினாா்.
சோஷலிச தலைவா் ராம் மனோகா் லோஹியாவின் 57 ஆவது நினைவு நாளையொட்டி, உத்தர பிரதேச மாநிலம், லக்னோ நேற்று (12.10.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் அகிலேஷ் பங்கேற்று பேசியதாவது:
பாஜகவின் கொள்கைகள் அனைத்தும் அழிவுகரமானவை. அரசமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட அனைத்தையும் தலைகீழாக புரட்டிப் போடுவதே அவா்களின் விருப்பம். வெறுப்பு ணா்வு அரசியலில் ஈடுபடும் அவா்கள், பாகுபாட்டை ஊக்கு விக்கின்றனா். ஜாதி, மத ரீதியில் மோதலைத் தூண்டி, தங்களின் அரசியலை நடத்துகின்றனா்.
ஒவ்வொரு நிலையிலும் பாகு பாட்டை எதிா்த்தவா் லோஹியா. அவரால் முன்னெடுக்கப்பட்ட சோஷலிச சித்தாந்தத்தின் மூலமே வறுமையை ஒழிக்க முடியும். வறுமை ஒழிப்புக்கு மட்டுமன்றி விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தவும் லோஹியாவின் விலை நிா்ணயக் கொள்கை முக்கியமானது. தனது ‘ஏழாவது புரட்சியின்’ மூலம் சமூகத்தின் வளமைக்கான பாதையைக் காட்டியவா்.
நாட்டின் பண மதிப்பு வீழ்ச்சி, பொருளாதார வீழ்ச்சியின் அடையாளமாகும். பொய்யான தரவுகளால் இதை மூடிமறைக்க அரசு முயன்றாலும் உண்மை வெளிப்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரம் வளா்ச்சிப் பாதையில் பயணிப்பதாக அரசு கூறுவது உண்மையென்றால், எண்ணற்ற மக்கள் பட்டினி நிலைக்கு தள்ளப்பட்டது ஏன்? உலகளாவிய பட்டினிக் குறியீட்டில் இந்தியா 105-ஆவது இடத்துக்கு பின்தங்கியது ஏன்? என்று அவா் கேள்வியெழுப்பினாா்.