தாராசுரம், டிசம்பர்,13
தாராசுரம் பஞ்சாயத்து கோர்ட்டு மெம்பரும், உஷார் சங்க கமிட்டி பிரசிடெண்டும், சமூக சீர்திருத்த நடிகர் சபையின் பொக்கிஷதாரும், பிரபல எண்ணெய் வியாபாரியுமான தோழர் வி.ஜி. சக்ரபாணி அவர்களின் சகோதரர் சுயமரியாதை வீரர் தோழர் வி.ஜி.வரதராஜன் அவர்களுக்கும், காரைக்கால் தோழர் என். இரத்தினசாமி செல்வி தோழர் புனிதவல்லி அவர்களுக்கும் 13.12.1936 ஞயிற்றுக்கிழமை அமாவாசையன்று காலை 9:00 மணிக்கு மணமகன் இல்லத்தில் தோழர் கே.கே.நீலமேகம் அவர்களின் தலைமையில் சீர்திருத்தத் திருமணம் சுயமரியாதைக் கொள்கைப்படி ஒரே நாளில் யாதொரு சடங்கும் இன்றி நடைபெற்றது. அவ்வமயம் 500-600 பேர் ஆண்களும், பெண்களும் ஜாதி மத பேத மன்னியில் விஜயம் செய்திருந்தார்கள். தோழர் கே.கே.நீலமேகம் அவர்கள் வந்திருந்த ஜனங்களுக்கு மணமக்களை அறிமுகப்படுத்திய அன்னவரின் தோழர்கள் அளித்த திருமண வாழ்த்துப் பத்திரம் வாசிக்கப்பட்டது.
தோழர் கே.கே.நீலமேகம் புரோகித மணத்தின் அடிமை நிலைமையும், பழமையும், கற்பனையென வந்துள்ளோர் அறியும் முறையில் பேசிய பின் இத்திருமணம் செய்துகொள்ள இசைந்த மணமக்களைப் பாராட்டுவதாகவும் கூறினார்.
பின் தோழர்கள், மூவலூர் ராமாமிர்தம் பொட்டுக்கட்டும் மூட பழக்கத்தைப் பற்றியும், சீர்திருத்த திருமண ஒப்பந்தத்தைப் பற்றியும் பேசியபின் தோழர்கள்: ஜி. சுப்பிரமணியம், நூருதீன், கும்பகோணம் சப் மாஜிஸ்டிரேட் ஆபிஸ் கிளர்க்கு முதலியோர்கள் சீர்திருத்த திருமணத்தைப் பற்றி பேசி மணமக்களைப் பாராட்டினார்கள். தாராசுரம் யூஜின் சாண்டோ உடற்பயிற்சி நிலையத்தார்கள் இத்திருமணத்தை நடத்திக் காட்ட பெருமுயற்சி எடுத்து கொண்டார்கள், பின் வந்திருந்த யாவருக்கும் வந்தனோபசாரம் கூறி சந்தன தாம்பூலம் பெப்பர் மின்ட் வழங்கியபின், ஒரு சமபந்தி போஜனம் 600 பேருக்கு மேற் செய்விக்கப்பட்டு திருமணம் இனிது முடிவடைந்தது.
– ‘விடுதலை’ 19.12.1936