“தான் கணித்த கருத்துக் கணிப்பு தவறானது” என்று கதறி அழுது நாடகமாடும் பிரதீப் குப்தா
பாணன்
மோடி ஆட்சியில் மழுங்கிப்போன கருத்துக்கணிப்பு வியூகங்கள். 2014ஆம் ஆண்டிலிருந்து தேர்தலுக்கு முன்பும், தேர்தல் முடிந்த அன்றும் எடுத்து வெளியிடப்படும் கருத்துக்கணிப்பு என்பது மோசடிகளின் ஒட்டுமொத்த உருவகமாக மாறிக்கொண்டு கடைசியில் நாளிதழ் ஆசிரியர் குழு அறையில் இன்றைய நாள் எப்படி என்று எழுத பழைய முடிவுகளை எல்லாம் வெட்டி எடுத்து போடும் ராசிபலன் போல் ஆகிவிட்டது.
கருத்துக்கணிப்பு என்றால் என்ன?
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை `எக்ஸிட்போல்’ என்று குறிப்பிடுவது வழக்கம். `வெளியேறுதல்’ என்று பொருள். அந்த வார்த்தையே அந்த கருத்துக்கணிப்பு எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதை கூறிவிடுகிறது.
ஒரு வாக்காளர் தேர்தலில் வாக்களித்துவிட்டு வாக்குப்பதிவு மய்யத்தில் இருந்து வெளியே வரும்போது, அவர்களிடம் எந்தக் கட்சி அல்லது எந்த வேட்பாளருக்கு வாக்களித்துள்ளார் என்பதை கேட்பார்கள். அவர்கள் சொல்ல விரும்பும் பட்சத்தில் அவரின் கருத்து பதிவு செய்யப்படும். இது தான் கருத்துக்கணிப்பு.
கருத்துக்கணிப்பு நடத்தும் முகமைகள் தங்கள் ஊழியர்களை வாக்குச் சாவடிக்கு வெளியே நிற்க வைக்கின்றன. வாக்களித்துவிட்டு வெளியே வரும் வாக்காளர்களிடம், `யாருக்கு வாக்களித்தீர்கள்?’ என்று கேட்கப்படுகிறது.
பொதுவாக, ஒரு வாக்குச் சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியேறும் ஒவ்வொரு பத்தாவது வாக்காளரிடமும் அல்லது வாக்குச்சாவடி பெரியதாக இருக்கும்பட்சத்தில் ஒவ்வொரு இருபதாவது வாக்காளரிடமும் கேள்விகள் கேட்கப்படும். வாக்காளர்களிடம் இருந்து பெறப்படும் தகவல்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியாவில் சி வோட்டர் அக்ஸிஸ், மை இந்தியா. சிஎன் எக்ஸ் ஆகியவை தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்தும் சில முக்கிய முகமைகள். தேர்தல் நேரத்தில் பல புதிய நிறுவனங்களும் கருத்துக்கணிப்புகள் செய்கின்றன. அவை தேர்தல் முடிந்தவுடன் காணாமல் போய்விடும்.
கருத்துக்கணிப்பு தொடர்பான விதிகள்
மற்றும் கட்டுப்பாடுகள்
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951இன் பிரிவு 126A இன் கீழ் கருத்துக் கணிப்புகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. (Representation of the People Act). இந்தியாவில் கருத்துக் கணிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையம் சில விதிகளை வகுத்துள்ளது. இந்த விதிகளின் முக்கிய நோக்கம், தேர்தலில் கருத்துக்கணிப்புகள் எந்த வகையிலும் செல்வாக்கு செலுத்த அனுமதிக்கக் கூடாது என்பதே.
தேர்தல் ஆணையம் அவ்வப்போது கருத்துக்கணிப்பு தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிடுகிறது. கருத்துக் கணிப்புகளை நடத்துவதற்கான நடைமுறையை இது விளக்குகிறது. கருத்துக்கணிப்பு முடிவுகளை வாக்குப்பதிவு நாளில் வெளியிடக் கூடாது என்பது பொதுவான விதி.
தேர்தல் செயல்முறை தொடங்கியது முதல் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு முடிந்து அரை மணிநேரம் வரை கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடக்கூடாது. இதுதவிர, வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்.
கருத்துக்கணிப்புகளில் மோசடிகள்
கருத்துக் கணிப்புகள் இரண்டு விடயங்களைக் கணிக்கின்றன.
வாக்கு சதவீதத்தை மதிப்பிடுகிறது
வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் கட்சிகளுக்கு கிடைக்கும் இடங்களை மதிப்பிடுகின்றன. “2004 தேர்தலில். வாஜ்பேயி அரசு மீண்டும் அமையும் என்று அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் கூறப்பட்டது. ஆனால் அந்தத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. கருத்துக் கணிப்புகள் பொய்யாயின.
கருத்துக்கணிப்பு செய்யும் முகமைகள் வெவ்வேறு மாதிரி (sampling) அல்லது களப்பணிகளை வெவ்வேறு வழிகளில் செய்வதே இதற்குக் காரணம். சில முகமைகள் தொலைபேசி வழியாக தரவுகளைச் சேகரிக்கின்றன, மற்றவர்கள் தங்கள் ஊழியர்களை களத்திற்கு அனுப்புகிறார்கள்.
முதல் முறை கருத்துக்கணிப்பு
1957இல் இந்தியாவில் இரண்டாவது பொதுத் தேர்தலின் போது, `இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பப்ளிக் ஒபினியன்’ தனது முதல் தேர்தல் கருத்துக்கணிப்பை நடத்தியது.
அதன் தலைவர் எரிக் டி கோஸ்டா ஒரு தேர்தல் கருத்துக்கணிப்புக்கு தலைமை தாங்கினர், ஆனால் அதை முழுமையாக `எக்ஸிட் போல்’ என்று கூற முடியாது.
அதன்பிறகு, 1980இல், டாக்டர் பிரணாய் ராய் முதல் முறையாக கருத்துக் கணிப்பு நடத்தினார். அவர் 1984 தேர்தலிலும் கருத்துக்கணிப்பு நடத்தினார்.
ஒன்றிய அரசு தொலைக்காட்சியான `தூர்தர்ஷன்’ 1996இல் கருத்துக்கணிப்பை நடத்தியது. இது பத்திரிகையாளர் நளினி சிங் என்பவரால் நடத்தப்பட்டது, ஆனால் களப்பணியாற்றி தரவுகளை சேகரிக்கும் பணியை CSDS ஆய்வு மய்யம் மேற்கொண்டது.
இதனையடுத்து ஒவ்வொரு தேர்தலின் போதும் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளும் போக்கு தொடர்ந்தது. ஆனால் முன்பு ஒன்று அல்லது இரண்டு கருத்துக் கணிப்பு முகமைகள் மட்டுமே இருந்தன. தற்போது டஜன்கணக்கான `எக்ஸிட் போல்’ முடிவுகள் வெளியாகின்றன.
உலகின் பிற நாடுகளிலும் தேர்தல்
கருத்துக் கணிப்புகள் நடத்தப்படுகிறதா?
இந்தியாவுக்கு முன்பே, பல நாடுகளில் கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன. அமெரிக்கா, தென் அமெரிக்கா, அய்ரோப்பா, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து நடத்தப்படுகிறது.
முதல் கருத்துக் கணிப்பு அமெரிக்காவில் 1936 இல் நடத்தப்பட்டது. ஜார்ஜ் கேலப் மற்றும் கிளாட் ராபின்சன் ஆகியோர் நியூயார்க் நகரில் தேர்தல் கருத்துக்கணிப்பு மேற்கொண்டனர். அப்போது வாக்குப்பதிவு செய்து விட்டு வெளியேறிய வாக்காளர்களிடம் `எந்த அதிபர் வேட்பாளருக்கு வாக்களித்தீர்கள்?’ என்று கேட்கப்பட்டது.
இவ்வாறு பெறப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்ததன் மூலம், தேர்தலில் பிராங்க்ளின் டி.ரூஸ்வெல்ட் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டது.
கணிப்புகளின் படி ரூஸ்வெல்ட் தேர்தலில் வெற்றி பெற்றார். இதன் பிறகு, மற்ற நாடுகளிலும் கருத்துக் கணிப்பு செயல்முறை பிரபலமாகின. 1937 இல், பிரிட்டனில் முதல் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 1938 இல், பிரான்சில் முதல் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
2016ஆம் ஆண்டிலிருந்தே மாநிலத்தேர்தல்களின் கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் சறுக்கல்களாகவே இருந்து. புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது தேர்தல் தொடர்பாக கூறிய பார்வைகொண்டவர்கள். இந்த கருத்து கணிப்புகள் ஏதோ சக்தியால் ஆட்டுவிக்கப் படுகிறது.
களத்தில் இருந்து எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகளைக் கூட இறுதி நேரத்தில் வேறாக வெளியிடச் சொல்லி உத்தரவிடும் சக்திதான் கருத்துக்கணிப்பின் உண்மையான முகம்.
உத்தரப்பிரதேச தேர்தல். சத்தீஸ்கர், ஜார்கண்ட், கருநாடகா, மேற்குவங்கம், ராஜஸ்தான், உத்தராகண்ட், இமாச்சல் பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலத்தேர்தல் கருத்துக்கணிப்புகள் தேர்தல் முடிவுகளுக்கு இவர்கள் வெளியிடும் கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு பலத்த வேறுபாடுகளோடுதான் இருந்து வந்தது.
ஆனால், இது பெரிதாக பேசப்படவில்லை. காரணம் வெளியிடும் நிறுவனம் இதர பிரச்சினைகளைக் கூறி மடை மாற்றிவும் செய்தனர். ஆகையால், இந்த கருத்துக்கணிப்பு மோசடிகள் வெளியே தெரியாமல் போய்விட்டது.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு தேர்தல் கருத்துக் கணிப்பு மோசடிகளை வெளியே கொண்டு வந்துவிட்டது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலில் 400 இடங்களை நிச்சயம் வெல்லும் என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டது ’ஆக்சிஸ் மை இந்தியா’.
350-400 தொகுதிகள்: இந்நிறுவனம் மட்டுமின்றி இந்தத் தேர்தல் குறித்து ’இந்தியா டுடே’, ‘ரிபப்ளிக் டிவி’ உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350-400 தொகுதிகள் வரை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை வகிக்கும் என்றே அறுதியிட்டுக் கூறின. ஆனால், தேர்தல் முடிவுகள் இதனுடன் ஒத்துப் போகவில்லை. பாஜக கூட்டணியால் 294 இடங்களைத் தாண்ட முடியவில்லை. இண்டியா கூட்டணி சற்றும் எதிர்பாராத வகையில் 232 இடங்களை வென்றுள்ளது.
அதாவது ஒட்டுமொத்த கருத்துக் கணிப்பு பல்லிழித்து விட்டது. இந்த மோசடிகள் எப்படி வெளியேவந்தது என்றால் எப்போதும் ’மோடி புகழ்பாடும் மோடியாக்கள்’ கூறியதை விட சற்று குறைந்தோ அதிகமோ இருக்கும். உடனே விவாத நிகழ்ச்சியில் சால்ஜாப்பு கூறி மடைமாற்றுவார்கள்.
ஆனால், தேர்தல் முடிவுகள் பாஜக தனிப்பெரும்பான்மை பெறாமல் போனது. இரண்டு ‘பாபு’க்களின் தயவில் தான் இந்த ஆட்சியே ஓடும் நிலை உருவாகவே.. எதிர்கட்சிகளின் காட்டமான கேள்விக்கு பதில் அளிக்க திணறி நேரலையில் அக்ஸிஸ் மை இந்தியா என்ற கருத்துக்கணிப்பு எடுக்கும் முகமையில் தலைவர் பிரதீப் குப்தா கண்ணீர் விட்டு அழுதார்.
இதற்கு முன்பு நடந்த கருத்துக்கணிப்பு பொய்த்தபோது அழாதவர்கள் இந்தமுறை அழுததற்கு காரணம் தலைமையிடம்(தாங்கள் கூறிய பொய் அம்பலப்பட்டு விட்டதே என்பதுதான்.
2022ஆம் ஆண்டு நடந்த இமாச்சலப் பிரதேச தேர்தலில் பெரும்பாலான முகமைகள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாஜக முன்னிலை வகிக்கும் என்று குறிப்பிட்டன. . தேர்தல் முடிவுகள் வந்தபோது, 68 இடங்கள் கொண்ட சட்டமன்றத்தில் காங்கிரஸ் 40 தொகுதிகளை வென்று ஆட்சி அமைத்தது. பாஜக 25 தொகுதிகளை மட்டுமே பெற முடிந்தது.
கடந்த ஆண்டு நடந்துமுடிந்த கருநாடக தேர்தலில் பாஜக காங்கிரஸ் இரண்டுமே சமபலத்தில் இருக்கும் – தொங்கு சட்டமன்றம் என்று எல்லாம் கருத்துக்கணிப்புகளில் எழுதினார்கள் ஆனால், கடந்த முப்பது ஆண்டுகளில் இந்த மாநிலத்தில் காங்கிரசுக்குக் கிடைக்காத மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது.
சத்தீஸ்கர் – கருத்துக்கணிப்பு நடத்திய முகமைகள் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே நெருங்கிய போட்டி இருக்கும் என கணித்தன. சில கணிப்புகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. 90 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில் காங்கிரசுக்கு 40 இடங்களுக்கும் குறைவாகவே கிடைக்கும் என்று எந்த முகமையும் கணிக்க வில்லை. பாஜகவுக்கு 25 முதல் 48 இடங்கள் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டது.
ஆனால், தேர்தல் முடிவுகள் வந்தபோது, பாஜக 54 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் 35 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப்பெற்றது.
மத்தியப் பிரதேசத்தில் 230 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கருத்துக் கணிப்புகளில் பாஜக 88 முதல் 163 தொகுதிகளில் வெற்றிப் பெறும் என மதிப்பிடப்பட்டது. அதே சமயம் காங்கிரஸ் குறைந்தபட்சம் 62 மற்றும் அதிகபட்சமாக 137 இடங்களைப் பெறும் என மதிப்பிடப்பட்டது.
தேர்தல் முடிவுகள் வெளியானபோது, பாஜக 163 தொகுதிகளில் வென்றது, காங்கிரஸ் 66 தொகுதிகளில் வென்றது.
ஏபிபி நியூஸ்-சி (ABP News-C) வாக்காளர் கருத்துக் கணிப்பில் பாஜக முன்னிலை வகித்தது. ராஜஸ்தானில் பாஜக குறைந்தபட்சம் 77 இடங்களையும் அதிகபட்சமாக 128 இடங்களையும் பெறும் என மதிப்பிடப்பட்டது. அதேசமயம் ஆளும் காங்கிரஸ் குறைந்தபட்சம் 56 மற்றும் அதிகபட்சமாக 113 தொகுதிகளைப் பெறும் என மதிப்பிடப்பட்டது.
ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான போது பாஜக 115 தொகுதிகளையும், காங்கிரஸ் 69 தொகுதிகளையும் கைப்பற்றியது. மற்ற சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 15 இடங்களில் வெற்றி பெற்றன.