புதுடில்லி, அக்.11- அரியானா மாநில தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நேற்று (10.10.2024) ஆய்வு செய்தனர்.
அரியானாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று 3-ஆவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. மொத்தமுள்ள 90 இடங்களில் 48 இடங்களை முதல் முறையாக அந்த கட்சி அள்ளியது.
அங்கு 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் கட்சி 37 இடங்களை மட்டுமே பிடித்தது. இது காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர் களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.
இந்த வாக்கு எண்ணிக் கையில் பல குளறுபடிகள் நடந்ததாக கட்சியினர் புகார் கூறியுள்ளனர். தங்கள் வெற்றியை பறித்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ள அவர்கள், தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது எனவும் அறிவித் துள்ளனர். மேலும் வாக்கு எண்ணிக்கையில் நடந்த குளறுபடிகளை விசாரிக்குமாறு தேர்தல் ஆணையத்தில் நேற்று முன்தினம் புகாரும் அளித்தனர்.
தலைவர்கள் ஆலோசனை
இந்நிலையில் அரியானா தேர்தல் முடிவுகள் குறித்து நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆய்வு செய்தனர். காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் கே.சி. வேணு கோபால், மற்றும் அசோக் கெலாட், அஜய் மக்கான் உள்பட மூத்த தலைவர்கள் பலரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். ஆன்லைன் மூலம் நடந்த இந்த கூட்டத்தில் அரியானா மாநில நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் அரியானா தேர்தலில் ஏற் பட்ட தோல்விக்கான கார ணங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக உள்கட்சி பூசல்கள், போட்டி வேட்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது.
கூட்டத்துக்குப்பின் செய்தி யாளர்களை சந்தித்த அஜய் மக்கான் கூறியதாவது:- அரி யானா தேர்தல் முடிவுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தோம். தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகள் உங்களுக்கு தெரியும். ஆனால் முடிவுகள் எதிர்பாராதவை. கருத்துக் கணிப்புகளுக்கும் உண்மையான முடிவுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தது. அதற்கான காரணங்கள் குறித்து விவாதித்தோம். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்போம்.
தேர்தல் ஆணையம் முதல் உள்கட்சி பூசல்கள் வரை பல காரணங்கள் குறித்து விவாதித் தோம். எனினும் 1 அல்லது 1/2 மணி நேரத்தில் அனைத்தையும் விவாதிக்க முடியாது. இவ்வாறு அஜய் மக்கான் கூறினார்.