6.10.2024 அன்று சென்னையில் கூடிய திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுள் ஒன்று – ஒன்றிய பிஜேபி அரசு தமிழ்நாட்டிற்கு வஞ்சனை செய்து வருவது பற்றியதாகும்.
குறிப்பாக தமிழ்நாட்டுக்குரிய கல்வி நிதியைத் தராமல் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசு சட்ட விரோதமாக நிறுத்தி வைக்கும் முறைகேடு பற்றிய தீர்மானம் குறிப்பிடத் தகுந்த ஒன்று.
‘‘புதிய கல்விக்கொள்கையின் அங்கமான பி.எம்.சிறீ பள்ளிகள் திட்டத்தை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்க முடியும்’’ எனத் தெரிவித்து தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய நிதியைக் கொடுக்க மறுத்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
நடப்பாண்டில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட நிதியாக தமிழ்நாட்டிற்கு ரூ.3,586 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ.1,434 கோடியாகும். மீதமுள்ள ரூ.2,152 கோடி நிதி ஒன்றிய அரசால் வழங்கப்படும். இந்தத் தொகை 4 தவணைகளாக வழங்கப்பட வேண் டும். அதன்படி நடப்பாண்டு, முதல் தவணையாக ரூ.573 கோடி கடந்த ஜூன் மாதமே வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை நிதியைத் தராமல் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இதனால் 8 லட்சம் மாணவர்கள் படிக்கிற மாநில கல்வித் துறை கடும் பொருளாதார மற்றும் நிர்வாக நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. ஏறத்தாழ 15,000 ஆசிரியர்களுக்கு வருகிற மாதத்திற்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அதேபோல, கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவிகித ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேருகிற ஏழை,எளிய மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் பி.எம்சிறீ பள்ளிகளை தமிழ்நாடு அரசு திறக்க வேண்டும்; அவற்றில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்; தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் 10+2+3 கல்வி முறைக்கு மாறாக, 5+3+3+4 கல்வி முறையை கடைப்பிடிக்க வேண்டும்; தொழில்கல்வியை அறிமுகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை செயல்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு சார்பில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த நிபந்தனைகள் இல்லாமல் பி.எம்.சிறீ பள்ளிகள் திட்டத்தை செயல்படுத்துவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்த யோசனையை ஏற்க ஒன்றிய அரசு மறுத்து விட்டது.
‘‘ஒன்றிய அரசின் ‘பிஎம்சிறீ’ திட்டத்தில் தேர்ந்தெடுக் கப்படும் பள்ளிகள் மட்டும் அனைத்து வசதிகளுடன் ஆகச்சிறந்தப் பள்ளிகளாக்கப்படுமாம்; மற்றப் பள்ளிக ளெல்லாம் சாதாரணப் பள்ளிகளாகவே இருக்குமாம்! இது எவ்வளவு பெரிய அநீதி! இரண்டு வகைப் பள்ளிகளுமே மக்களின் வரிப்பணத்தில் இயங்கும்போது, ஒரு பள்ளிக்கு எல்லாமும், மற்ற பள்ளிக்கு எதுவுமே கொடுக்காமல் இருப்பது – குழந்தைகளின் உரிமையைப் பறிக்கக்கூடிய நயவஞ்சக வேலையே! இப்படி பாகுபாடு காட்டுவது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கே எதிரானது. இது வெறுமனே ஹிந்தித் திணிப்பு, மும்மொழிக்கொள்கைக்காக மட்டுமே எதிர்க்கவில்லை. பள்ளிகளிடையே பாகுபாட்டையும் மாணவர்களிடையே சமத்துவமற்ற கல்வியை புகுத்துவ தாலும்தான் எதிர்க்கிறோம்!’’ என கல்வியாளர்கள் எதிர்த்து உள்ளனர்.
நாங்கள் ‘சமக்ர சிக்ஷா’வையும், ‘பிஎம்சிறீ’ பள்ளிகளையும் இன்டர்லிங்க் செய்துவிட்டோம். நீங்கள் பிஎம்சிறீ பள்ளிகள் திட்டத்தையும் ஏற்றுக்கொண்டால்தான் மீதமுள்ள நிதியைத் தருவோம்’ என ஒன்றிய அரசு கூறுவது, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது – சீர்குலைப்பதாகும்.
கல்வி மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்ற திராவிடர் இயக்கத்தின் கோரிக்கைக்கு மேலும் அழுத்தம் தர வேண்டிய கட்டாயத்தை ஒன்றிய அரசு ஏற்படுத்தியுள்ளது.’’
இது தன்னிலை விளக்கம் கொண்ட தீர்மானமே. மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி – நெருக்கடி காலத்தில் ஒத்திசைவுப் பட்டியலுக்குக் (Concurrent List) கொண்டு செல்லப்பட்டது.
மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கல்வி கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையும், உரத்த குரலும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
ஒத்திசைவுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றாலும், ஒன்றிய அரசு தானடித்த மூப்பாக நடந்து கொள்ளலாம் என்று பொருள்ளல்ல!
ஒத்திசைவுப் பட்டியல் என்று வருகிறபோது, மாநில அரசுகளின் பங்கும் அதற்குள் அடங்கியிருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.
அந்த வகையில் கல்வி தொடர்பான எந்த முடிவை, திட்டத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டாலும் மாநில அரசின் கருத்தும் கேட்கப்பட வேண்டும் என்பது சொல்லாமலே விளங்கக் கூடியதாகும்.
ஆனால் இன்றைய ஒன்றிய பிஜேபி அரசு ஜனநாயகம் என்ற போர்வையில் தனது தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸின் கொள்கையை உள்வாங்கி, அவற்றை செயல்படுத்தும் வகையில் மாநிலங்களை ஒரு பொருட்டாகக் கருதாமல் தன்னிச்சையாகவே செயல்பட்டு வருகிறது என்பது நாடறிந்த பச்சையான உண்மையாகும்.
தேசிய அளவில் ஒரு கல்வி என்பதே நடைமுறையில் சாத்தியமாற்றது. பல மொழிகள், பல இனங்கள், பல பண்பாடுகள் வரலாறுகள், பல்வேறு தட்ப வெப்ப நிலைகள், உற்பத்திகள் வேறுபட்டு நிற்கும் நிலையில் பி.எம்.சிறீ. பள்ளிகள் திட்டத்தை ஏற்றுக் கொண்டால்தான் மாநிலங்களுக்கு நிதி தர முடியும் என்று முரட்டுப் பிடிவாதம் பிடிப்பது எந்த வகையில் சரியானதாகவும் ஜனநாயக முறையாகவும் இருக்க முடியும்?
பி.எம்.சிறீ. திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் பள்ளிகள் பல்வேறு வசதிகளுடன் கோலாகலமாகப் பளிச்சிடும் என்றால், மற்ற பள்ளிகளின் நிலை என்ன? ஒற்றைக் கண்ணில் வெண்ணெய் மற்ற கண்ணில் சுண்ணாம்பா?
கல்விக் கூடங்களில்கூட வருணாசிரமம் பார்வையா? வருணாசிரமம் தானே பா.ஜ.க.வின் பார்வை. எதிலும் அந்தக் கண்ணோட்டம் முந்துறுவதால் தான் இதுபோன்ற திட்டங்கள் அவர்களின் மூளைப்புதர்களிலிருந்து முளைக்கி்ன்றன.’’
இந்தக் கல்வித் திட்டத்தை உருவாக்குவோர் யார் என்பது முக்கிய கேள்வியாகும். கல்வியாளர்களால் தயாரிக்கப்பட்டதல்ல. ஆர்.எஸ்.எஸ்.
சித்தாந்தத்துக்கு யார் நெருக்கமாக இருக்கிறார்களோ அவர்களைக் கொண்டது எப்படி ஒரு கல்விக் குழுவாக இருக்க முடியும்?
‘இஸ்ரோ’ வளர்ச்சிக்கான திட்டக் குழுவில் அத்துறை சார்ந்த அறிவியலாளர்கள், பொறியாளர்கள், தொழில் நுட்பத்தைச் சார்ந்தவர்களாகத்தானே இருக்க முடியும்! அதில் கொண்டு போய் காதி வாரியத்தைச் சேர்ந்தவர்களைத் திணிக்க முடியுமா?
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை என்பது சட்ட ரீதியானது. இந்த நிலையில் மூன்றாவது மொழியாக ஹிந்தி அல்லது சமஸ்கிருதத்தைக் கட்டாயம் படிக்க வேண்டும் என்று திணிப்பது சட்ட விரோதம் அல்லவா!
ஆக ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஹிந்தியை நேரிடையாக தமிழ்நாட்டில் திணிக்க முடியாது என்பதை உறுதியாக, அறுதியிட்டு உணர்ந்த ஒன்றிய பிஜேபி ஆர்.எஸ்.எஸ். அரசு பி.எம்.சிறீ என்ற போர்வையில் ஒரு கல்வி திட்டத்தைக் கொண்டு வருகிறது.
பகுத்தறிவுச் சிந்தனை என்னும் கூர்மையான பயிரை வளர்த்த தந்தை பெரியார் பிறந்த திராவிடப் பூமி இது. இதனை ஏற்காது.
இன்னும் சொல்லப் போனால் திராவிட சித்தாந்த பார்வை கொண்ட தமிழ்நாடு – அதன் அரசு கொடுக்கும் குரல், பாய்ச்சும் ஒளியும், ஒலியும் இந்தியத் துணைக் கண்டத்திலேயே தாக்கத்தை உண்டாக்கக் கூடியதாகும்.
இதுகுறித்து மக்கள் மத்தியில் பெரு வெளியில் பிரச்சாரத்தையும் திராவிடர் கழகமும், முற்போக்கு சக்திகளும் மேற்கொள்ளும் – ‘திராவிட மாடல்’ அரசு என்பது இதில் உறுதியாக நிற்பது என்பது – மிகச் சிறந்ததாகும்.