டெஹராடூன், அக்.9 உத்தராகண்டில் பொது சிவில் சட்ட வரைவு மசோதா தயாராகிவிட்டது.இது வரும் நவ.9-க்குள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டிலேயே முதல் மாநிலமாக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பாஜக ஆளும் உத்த ராகண்ட் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு மசோதாவை தயாரிக்க முன்னாள் தலைமைச் செயலாளர் சத்ருகன் சிங் தலைமையில் கடந்த பிப்ரவரியில் குழு அமைக்கப்பட்டது. 9 உறுப்பினர்களை உள்ளடக்கிய இக்குழு வரைவு மசோதாவை தயாரித்து அச்சுக்கு அனுப்பியுள்ளது.
இதுகுறித்து சத்ருகன் சிங் கூறும்போது, “பொது சிவில் சட்டத்தை மாநில நிறுவன நாளான நவ.9-க்குள் அமல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இவை அச்சிடப்பட்டதும் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியிடம் சமர்ப் பிக்கப்படும்” என்றார்.
இதுகுறித்து வரைவு மசோதா தயாரிப்பு குழுவின் உறுப்பினர் மனு கவுர் கூறும்போது, “திருமணம், சொத்து உயில் பதிவுக்காக பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது. திருமணமான 6 மாதங்களுக்குள் இணைய வழியி லேயே பதிவு செய்து கொள் ளலாம்” என்றார்.உத்தராகண்ட் அரசு வட்டாரம் கூறியதாவது: உத்தராகண்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்த பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் கணவன், மனைவி போல சேர்ந்து வாழுபவர்களும் தம்பதியரும் பதிவுத் துறையில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண் டும். அவ்வாறு பதிவு செய்யவில்லை என்றால் 6 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றால், அந்த குழந்தையை வளர்க்கும் பொறுப்பை அவர்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும். கணவன் அல்லது மனைவி உயிரோடு இருக்கும்போது 2-ஆவது திருமணம் செய்தால் சட்டவிரோதமாக கருதப்படும். கணவன், மனைவி ஒருமித்த கருத்துடன் விவாகரத்து கோரினால் மட்டுமே, விவாகரத்து வழங்கப்படும். ஒருவர் மட்டும் விவாகரத்து கோரினால் நிராகரிக்கப்படும். மகன்கள், மகள்களுக்கு சரிசமமாக சொத்துகள் பிரித்து வழங்கப்படும். இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது.