சென்னை, அக்.9- மக்களவைத் தேர்தலின்போது, ரயிலில் பிடிபட்ட 4 கோடி ரூபாய் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து, பா.ஜ., நிர்வாகி கேசவ விநாயகனிடம், சி.பி.சி.அய்.டி., காவல் துறையினர் இரண்டாவது முறையாக விசாரித்து வாக்குமூலம் பெற்றனர்.
மக்களவைத் தேர்தலில், திருநெல்வேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிட்டார். அப்போது, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் நடத்திய சோதனையில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட 4 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை எடுத்துச் சென்ற, நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் மற்றும் உறவினரும் சிக்கினர்.
இதுகுறித்து, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின், இந்த வழக்கு, சி.பி.சி.அய்.டி., காவல் துறையினரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர்கள், பா.ஜ., நிர்வாகிகளான எஸ்.ஆர்.சேகர், கேசவ விநாயகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரிடம் விசாரித்துள்ளனர். இதற்கிடையே, ரயில்வே கேன்டீன் உரிமையாளர் முஸ்தபா, பணத்திற்கு உரிமை கோரினார். அவரின் வங்கி கணக்கு, வரவு செலவு விபரங்களை ஆய்வு செய்த சி.பி.சி.அய்.டி., காவல் துறையினர், பணம் முஸ்தபாவுக்கு சொந்தமானது இல்லை என்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, அவருக்கு ‘அழைப்பணை’ அனுப்பி உள்ளனர்.அதேபோல், எழும்பூரில் உள்ள சி.பி.சி.அய்.டி., தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என, கேசவ விநாயகனுக்கும், ‘அழைப்பாணை’ அனுப்பினர். அதன்படி அவர், 7.10.2024 அன்று காலை 11:00 மணியளவில் விசாரணைக்கு ஆஜரானார்.
அகில இந்திய அளவில் பளு தூக்கும் போட்டி தமிழ்நாடு காவல்துறைக்கு 14 பதக்கங்கள்
வெற்றியாளர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர் பாராட்டு!
சென்னை, அக். 9- அகில இந்திய அளவில் நடைபெற்ற காவல் துறையினருக்கான பளுதூக்கும் போட்டியில் தமிழ்நாடு அணியினர் 14 பதக்கங்களை வென்று அசத்தினர். வெற்றியாளர்களை நேற்று (8.10.2024) நேரில் அழைத்து காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் பாராட்டினார்.
முதலாவது அகில இந்திய காவல்துறை பளுதூக்கும் குழு போட்டிகள் (2024) கடந்த மாதம் 23 முதல் 27ஆம் தேதி வரை சத்தீஸ்கர் மாநிலம் பிளாய் மாவட்டத்தின் துர்க் நகரில் நடைபெற்றது. இப்போட்டியை சத்தீஸ்கர் மாநில காவல்துறை நடத்தியது. இதில், தமிழ்நாடு காவல்துறை பளு தூக்கும் குழு (பளு தூக்குதல், வலு தூக்குதல், யோகா) சார்பில் 75 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
முடிவில் தமிழ்நாடு காவல்துறை அணி ஒரு தங்கம், 3 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 14 பதக் கங்கள் பெற்று தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாடு காவல்துறைக்கும் பெருமைசேர்த்தது.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற தமிழ்நாட்டு காவல் துறையினரை, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் நேற்று நேரில் அழைத்து பாராட்டி னார். இந்நிகழ்வின்போது, கடலோர காவல் குழும கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் சஞ்சய் குமார், சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைவர் சிறீநாதா, ஆயுதப்படை காவல்துறை கண்காணிப்பாளர் முத்தமிழ் ஆகியோர் இருந்தனர்.
இதுதான் கடவுள் சக்தியோ!சாமி சிலை திருட்டு
காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் விசாரணை!
காஞ்சிபுரம், அக். 9- வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் மற்றும் பழங்கால கலை பொருட்கள் குறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான சோமாஸ்கந்தர் உலோகச் சிலை, அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டு இருப்பதாக காவல் துறையினர் கண்டறிந்தனர்.
இச்சிலையின் பீடத்தில், நான்கு வரியில் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டு இருப்பது பற்றி, கல்வெட்டு வல்லுநர்கள் உதவியுடன் ஆய்வு செய்தபோது, தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த வெங்கட் ராமநாயனி இச்சிலையை, ஏகாம்பரநாதர் கோவிலுக்கு பரிசாக வழங்கி இருப்பதை உறுதி செய்தனர். தற்போது, சோமாஸ்கந்தர் சிலை, அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ ஆசியன் ஆர்ட் ஆப் மியூசியத்தில் உள்ளதாக கருதப்படுகிறது.
இதன் பன்னாட்டு சந்தை மதிப்பு, எட்டு கோடி ரூபாய். இச்சிலை கடத்தல் தொடர்பாக, மாநில சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் நேற்று (8.10.2024), காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் விசாரணை நடத்தினர்.
அய்ந்து பேர் குழுவினர், காலை 9:00 மணிக்கு வந்து மதியம் 2:00 மணி வரை விசாரணை நடத்தினர். கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, அர்ச்சகர்கள், கோவில் ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி சென்றனர்.
கோவில் அலுவலகத்தில் கோப்புகளை பார்வை யிட்டனர். கோவிலில் உள்ள மாவடி கந்தர், நாயன்மார்கள், கால பைரவர் ஆகிய உற்சவர் சிலைகளையும் ஆய்வு செய்தனர். தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த வெங்கட்ராமநாயனி பரிசாக வழங்கிய பிற சிலைகள் எத்தனை உள்ளது எனவும், அதன் தற்போதைய நிலை பற்றி காவல் துறையினர் விசாரித்ததாக கோவில் வட்டாரங்கள் தெரிவித்தன.