ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம், எங்கள் கல்லூரியின் தமிழ்த்துறை மாணவர்கள் கடந்த 27.09.2024 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க விடுதலை ஏட்டின் அலுவலகம் மற்றும் அச்சுக்கூடம் இயங்குவதைப் பார்வையிட அனுமதி வழங்கியமைக்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் வரலாற்றுப் போக்கை மாற்றியமைத்த தந்தை பெரியார் திடலில் மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் உறைவிடத்தோடு உணவும் வழங்கிய தங்கள் கொடையுள்ளம் கேட்டு நெகிழ்ச்சி அடைந்தேன்.
பல்வேறு சமூகப்பணிகளுக்கிடையில் மாணவர்களோடு வாஞ்சையாக தாங்கள் உரையாடியதையும் அவர்களுக்கு நூல்கள் வழங்கி சிறப்பு செய்த தையும் மாணவர்களும் பேராசிரியர்களும் உருக்கமாகச் சொன்னார்கள்.
சமூகநீதிக் களத்தில் தந்தை பெரியாரோடு இணைந்தே பயணித்தவர் எங்கள் கல்லூரியின் நிறுவனர் தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்கள். அந்தப் பாதை மாறாமல் தங்களோடு இணைந்தே பயணித்தவர் மேனாள் செயலாளர் மறைந்த செம்மொழிவேளிர் இராமநாதன் அவர்கள்.
இந்தக் கொள்கை உறவு என்றும் நீடிக்கும். நீடிக்க வேண்டும் என்பதே எங்கள் அவா!
நன்றி அய்யா.
– இரா. இராசாமணி
முதல்வர், தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி, தஞ்சாவூர் – 613002