புனே, அக்.9 மகாராட்டிர மாநிலம் சக்கான்நகரில் நவராத்திரி விழாவையொட்டி தாண்டியா, கார்பா நடன நிகழ்ச்சிகள் நேற்று (8.10.2024) நடத்தப்பட்டன.
இதில், புனே ‘கார்பா கிங்’ என்றுஅழைக்கப்படும் 50 வயதான அசோக் மாலி தனது மகன்பவேஷுடன் கலந்து கொண்டார். அப்போது இருவரும் உற்சாகத்துடன் நடனமாடினர்.
இதனை கூடியிருந்த கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரத்துடன் ரசித்தனர். அப்போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கால் இடறி மயங்கி விழுந்த அசோக் மாலியை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அசோக் மாலி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
கேரள நிதியமைச்சருக்கு முஸ்லிம் மாணவி கை கொடுத்ததால் சர்ச்சை
எந்த மத நம்பிக்கையும் அரசமைப்பு சட்டத்தை விட உயர்ந்தது அல்ல
கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
திருவனந்தபுரம், அக்.9 கடந்த சில மாதங்களுக்கு முன் கோழிக்கோட்டில் ஒரு தனியார் சட்டக் கல்லூரியில் நடந்த விழாவில் கேரள நிதியமைச்சர் பாலகோபால் கலந்து கொண்டார். அப்போது முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒரு மாணவி அவருக்கு கை கொடுத்தார். இது ஷரியத் சட்டத்திற்கும், முஸ்லிம் மத நம்பிக்கைக்கும் எதிரானது என்று கூறி மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பகுதியைச் சேர்ந்த அப்துல் நவ்ஷாத் (37) என்பவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இது குறித்து அறிந்த அந்த மாணவி, நவ்ஷாத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோழிக்கோடு குந்தமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து கலகத்தை ஏற்படுத்த முயற்சித்தது உள்ளிட்ட பிரிவுகளில் நவ்ஷாத் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நவ்ஷாத் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி குஞ்சிகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நவ்ஷாத் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.தொடர்ந்து நீதிபதி கூறுகையில், எந்த மத நம்பிக்கையும் இந்திய அரசமைப்பு சட்டத்தை விட உயர்ந்தது அல்ல என்று தெரிவித்தார்.