மும்பை, அக்.8 மகாராட்டிர மாநிலம் கோலாப்பூரில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அஜய் துக்காராம் சனதே. அவரது மனைவி அஞ்சனா. இவர்களது வீட்டுக்கு காங்கிரஸ் உறுப்பினரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி திடீரென சென்று அவர்களுடன் கலந்துரை யாடியபடி வீட்டில் உணவு சமைத்து சாப்பிட்டுள்ளார்.
அஜய் வீட்டில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வழக்கமாக பாரம்பரிய முறைப்படி தயாரிக்கும் உணவை ராகுல் சமைத்துள்ளார். அஜய் மற்றும் அவரது மனைவியிடம் எப்படி சமைப்பது என்று கேட்டு சமைத்துள்ளார். கத்தரிக்காய், கீரை, துவரம் பருப்பு போட்டு ‘ஹர்பர் யாச்சி பாஜி’ என்ற உணவை அஜய் குடும்பத்தாருடன் சேர்ந்து ராகுல் சமைத்துள்ளார். பின்னர் அவர்களுடைய உணவு பழக்க வழக்கங்களை கேட்டறிந்தார். இது குறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் 7.10.2024 அன்று ராகுல் வெளியிட்ட பதிவில், ‘‘தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் என்ன சாப்பிடுகிறார்கள் என்பது யாருக் கும் தெரியாது’’ என்று சமூக ஆர்வலர் ஷாஹு கூறிய கருத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி மேலும் கூறியிருப்பதாவது: தனது வீட்டுக்கு வரவேண் டும் என்று அஜய் மிகுந்த மரியாதையுடன் என்னை அழைத்தார். அவரது அழைப்பை ஏற்று நான் சென்றேன். என்னை அன்புடன் வர வேற்றார். அத்துடன் சமைக்கவும் என்னை அனுமதித்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் என்பதால் புறக்கணிப்பு போன்ற பல்வேறு அனுபவங்களை அஜய் குடும்பத்தாரிடம் கேட்டறிந்தேன். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.