புதுடில்லி, அக் 08 ரயில்வேயில் பணி வழங்க நிலங்களை லஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டு வழக்கில் மேனாள் ஒன்றிய அமைச்சா் லாலு பிரசாத், அவரது இரு மகன்கள் உள்பட 9 பேருக்கு பிணை வழங்கி டில்லி ரவுஸ் அவென்யூ நீதிமன்றம் நேற்று (7.10.2024) உத்தரவிட்டுள்ளது. கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய மண்டலத்தில் குரூப்-டி பணிகளுக்கு பல்வேறு நபா்கள் நியமிக்கப்பட்டனா். இவா்களை பணியமா்த்த அப்போதைய ரயில்வே அமைச்சரான லாலு பிரசாத் யாதவும், அவரது குடும்பத்தினரும் நிலங்களை லஞ்சமாகப் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், மேற்குறிப்பிட்ட இந்த வழக்கில் பிணை கோரி மேனாள் ஒன்றிய அமைச்சா் லாலு பிரசாத் யாதவ் உள்பட மொத்தம் 9 போ் மனு தாக்கல் செய்திருந்தனா்.
இந்த நிலையில், இந்த வழக்கானது டில்லி ரவுஸ் அவென்யூவின் சிபிஅய் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று (7.10.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின் அடிப்படையில் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி மற்றும் தேஜ் பிரதாப் அகியோா் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினா். இதையடுத்து, உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், ‘இந்த வழக்கில் தொடா்புடைய லாலு பிரசாத் உள்பட மொத்தம் 9 பேருக்கும் நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கியது.