புதுடில்லி, அக். 8- தலைநகர் டில்லியில் ராம்லீலா நிகழ்ச்சியில் ராமன் வேடமிட்டவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டில்லியின் விஸ்வகர்மா நகரில் ராம்லீலா நிகழ்ச்சியில் சுஷில் கவுசிக் (45) என்பவர் ராமன் வேடமிட்டு நடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
மேடையில் நடித்துக்கொண்டிக்கும்போதே இதை உணர்ந்த அவர் நெஞ்சில் கை வைத்தபடியே மேடையை விட்டு இறங்கினார்.
உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மரணமடைந்த சுஷில் கவுசிக் சொத்து இடைத்தரகராக பணிபுரிந்து வந்தார் என்று மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார். ஜனவரியில் இதேபோன்ற ஒரு நிகழ்வில், அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில், ராம்லீலா நிகழ்ச்சியின்போது ஹனுமானாக நடித்தவர், ராமனைப் போல் சித்தரித்த நபரின் காலில் விழுந்து மேடையிலேயே இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தரமில்லாத உணவு
50க்கும் மேற்பட்ட மாணவிகள்
உடல் நிலை சீர்கேடு!
மும்பை, அக். 8- மகாராட்டிரத்தில் உள்ள அரசு கல்லூரி விடுதியில் சாப்பிட்ட 50 மாணவிகள் வாந்தி எடுத்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மகாராட்டிரத்தில் உள்ள புரன்மல் லஹோட்டி அரசு தொழில்நுட்பக் கல்லூரியின் விடுதியில் 324 மாணவிகள் தங்கியுள்ளனர். விடுதியில் 5.10.2024 அன்று இரவு உணவாக சோறு, சப்பாத்தி, வெண்டைக்காய் குழம்பு, பருப்பு சூப் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இரவு 7 மணியளவில் உணவருந்திய மாணவிகளுக்கு இரவு 8.30 மணியளவில் வாந்தி வருவதுபோல இருந்துள்ளது; சிலர் வாந்தியும் எடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக கல்லூரி முதலமைச்சருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 50 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 20 பேருக்கு குணமாகிய நிலையில், 6.10.2024 அன்று காலையில் மருத்துவமனையிலிருந்து குணமாகிச் சென்றனர். இருப்பினும், 30 பேர் தொடர் சிகிச்சையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், எவரும் மோசமான நிலையில் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.