அகமதாபாத், அக்.7- “அந்த தர்கா மற்ற மதத் தலங்களைப் போலவே புனிதமானது. குறைந்தது ஆறு தர்காக்களும், எனது முன்னோர்களது கல்லறைகள் சிலவும் அழிக்கப்பட்டுள்ளன.”
இவை 40 வயதான இஸ்மாயில் மன்சூரியின் வார்த்தைகள்.
28.9.2024 அன்று அதிகாலை நடந்த ‘மெகா இடிப்பு இயக்கத்தின்’ ஒரு பகுதியாக, குஜராத்தின் சோம்நாத் கோவில் அருகே சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டபோது அவர் ‘எல்லாவற்றையும்’ இழந்ததாகத் தெரிகிறது.
இடிப்பு நடவடிக்கை தொடங்கியபோது அவரது குடும்பத்தினர் அவசரமாக வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக மன்சூரி கூறுகிறார். அவர்களால் தங்கள் சாமான்களைக் கூட எடுத்துச் செல்ல முடியவில்லை.
“இப்போது உடுத்துவதற்குப் போதுமான ஆடைகள் மட்டுமே எங்களிடம் உள்ளன. எங்களது மற்ற உடைமைகள் அனைத்தும் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டுவிட்டன, அல்லது எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன,” என்று இடிப்பு செயல்முறையால் ஏற்பட்ட அழிவைப் பற்றிப் பேசுகிறார் மன்சூரி.
இது நடந்த குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள பிரபாஸ் படான் பகுதியில் உள்ள ‘பாபா ஹாஜி மங்ரோலி ஷா’ தர்காவை அவரது குடும்பத்தினர் பராமரித்து வந்தனர். இந்த தர்கா பல நூற்றாண்டுகள் பழைமையானது என்றும் இந்தியத் தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், இந்தக் கூற்றை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
இதுகுறித்து இந்தியத் தொல்லியல் துறையின் (ஏ.எஸ்.அய்) வதோதரா வட்ட அலுவலகத்தில் இருந்து கூடுதல் தகவல்களைப் பெற முயன்றும், ஏ.எஸ்.அய்-இடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
28.9.2024 அன்று இந்த இடிப்புச் செயல்பாடு குஜராத் உட்பட இந்தியா முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இப்பகுதியின் நிர்வாகம் வழங்கிய தகவல்களின்படி, இந்த நடவடிக்கையின் போது, ஒன்பது பெரிய மத தலங்கள், மூன்று சிறிய மத தலங்கள், மற்றும் இரண்டு கி.மீ எல்லைக்குள் மசூதிகள் உட்பட 45 வீடுகள் அகற்றப்பட்டுள்ளன.