கவிஞர் கலி.பூங்குன்றன்
சிந்து சமவெளி பற்றிய வரலாற்று ஆய்வுக் குழு உறுப்பினர்கள் 17 பேர்களில் 14 பேர் பார்ப்பனர்கள், மூன்று பேர் அரசு அதிகாரிகள் – இவர்கள் கையில் இந்த பொறுப்பை ஒப்படைப்பது வரலாற்றைத் திரிப்பதற்கே!
இதற்கொரு எடுத்துக்காட்டு இதோ:
இந்தியாவில் முஸ்லீம் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் பார்ப்பனர்கள் தான் அவர்களை ஆட்டிப் படைத்திருக்கிறார்கள். திப்பு சுல்தான் காலத்திலும் இதுதான் நிலைமை. ஆனால் திப்பு சுல்தான், இஸ்லாம் மார்க்கத்தில் சேருமாறு கட்டாயப்படுத்திய தால், 3000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்துகொண் டார்கள் என்று டாக்டர் ஹர் பிரசாத் சாஸ்திரி என்ற பார்ப்பன வரலாற்று ஆசி ரியர் உண்மைக்கு மாறான தகவலை எழுதினார். இது எந்த ஆதாரமும் இல்லாத ஒரு புரட்டு என்பது – பிறகு ஆதாரத்துடன் தெரிய வந்தது.
திப்பு சுல்தான் என்ற முஸ்லீம் மன்னர் காலத்திலும் பார்ப்பனர்களே ஆட்சியை ஆட்டிப்படைத் தார்கள் என்பதையும், அந்த ஆட்சியில் 3000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப் படும் வரலாற்றுப் புரட்டை யும், பி. என். பாண்டே எனும் வரலாற்று அறிஞர் அம்பலப்படுத்தியிருக்கிறார்.
இந்த சுவையான தகவல் ‘முஸ்லீம் இந்தியா ‘ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.
செய்தி விவரம்:
ஒடிசா மாநில ஆளுநராக இருந்தவர் பி. என். பாண்டே – வரலாற்று அறிஞர், நூலாசிரியர், மேனாள் எம்.பி யும் கூட, 1986 டிசம்பர் 19இல் “குதாபக் ஷ் நினைவுச் சொற்பொழிவு” நிகழ்த்தினார். முஸ்லிம் மன்னர்களைப் பற்றி அவதூறுகள், பொய்யுரைகள், கற்பனை கள், துவேஷக் கருத்துக்கள் எவ்வளவு எழுதப்படுகின்றன; திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன என்பதை தகுந்த ஆதாரங்களுடன் விளக்கி உள்ளார். அவரின் சொற்பொழிவில் திப்பு சுல் தான்’ பற்றிய ஒரு வரலாற்றுப் புரட்டு விளக்கப்பட்டுள்ளது.
1928இல் அலகாபாத் தில் ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தேன். என் ஆய்வுக்குரிய பொருள் திப்பு சுல்தான்! ஆங்கிலோ-பெங்காளி மாணவர் பேரவையினர் என்னை அணுகி, சரித்திரப் பேரவையைத் தொடங்கி வைத்து உரையாற்ற வேண்டுமென வேண்டினர்.
கல்லூரியில் இருந்து வந்த மாணவர்கள் வரலாற்றுப் புத்தகங்களு டன் இருந்தனர். அவர்களி டத்தில் உள்ள சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன். திப்புசுல்தான் பற்றி அதில் எழுதப்பட்டி ருந்ததைப் பார்த்ததும் மிகவும் கவர்ந்தது. படித்தேன் என் மனம் பெரும் பாதிப் புக்கு உள்ளாகியது.
‘மக்கள் வலுக்கட்டாய மாக இஸ்லாம் மார்க்கத்திற்கு மத மாற்றம் செய்யப்பட்டதால் 3000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்து கொண் டனர்.”
திப்பு சுல்தான் இதைச் செய்தார் என்று எழுதப்பட்டிருந்தது.
அந்தசரித்திர பாடப் புத்தகத்தை எழுதியவர் மகா மஹோபாத்தியாயா டாக்டர் ஹர் பிரசாத்சாஸ்திரி – அவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத் துறைத் தலைவராக இருப்பவர்.
ஆதாரம் என்ன?
திப்புவைப் பற்றியஇந்தச் செய்தியைப் பார்த்த நான், சாஸ்திரிக்கு உடனே கடிதம் எழுதினேன். இந்த மத மாற்றம், தற்கொலை பற்றிய செய்திக்கு ஆதாரம் எங்கே கண்டீர்கள் என்று கேட்டு பலமுறை கடிதம் எழுதிய பிறகு பதில் வந்தது. அதில் மைசூர் கெஜட்டீயர் ஆதார நூல் என்று கூறப்பட்டது.
மைசூர் கெஜட்டீயரை அலகாபாத்திலோ – கல்கத்தாவில் உள்ள இம்பீரியல் நூலகத்திலோ காண முடியவில்லை. மைசூர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் சர் பிரிஜ்ஜேந்திர நாத்சீல் அவர்களுக்கு எழுதி, சாஸ் திரியாரின் கூற்றுக்கு மைசூர் கெஜட்டீயரில் ஆதாரமிருக்கிறதா? எனக் கேட்டேன். துணைவேந்தர் அவர்கள் என் கடிதத்தை பேராசிரியர் சிறீ கரந்தையா அவர்களிடம் அனுப்பினார். காரணம் அவர் தான் மைசூர் கெஜட்டியரின் மறு பதிப்பு அச்சிடும் பணியில் ஈடுபட்டிருந் தார்.
பேராசிரியர் சிறீ கரந்தையா எனக்கு எழுதிய கடிதத்தில், 3000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மைசூர் கெஜட்டீயரில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லையே என எழுதினார். அதோடு அவர் மைசூர் வரலாற்றை ஆய்வு செய்தவரும் ஆவார். அப்படியொரு சம் பவம் மைசூர் வரலாற்றில் நிகழ்ந்ததே இல்லை என்று தீர்க்கமாகக் கூற முடியும் என்றும் எழுதி இருந்தார்.
பார்ப்பன ஆதிக்கம்
அவர் மேலும் எழுதி இருந்ததாவது:
திப்பு சுல்தானின் பிரதம மந்திரி ஒரு பார்ப்பனர்தான். அவர் பெயர் பூர்ணியா. அவரின் சேனாதிபதியும் ஒரு பார்ப்பனரே. அவரின் பெயர் கிருஷ்ணாராவ். (இந்த இடத்தில் ஓர் உண்மையைத் தெரிந்துக்கொள்வது நல்லது. மைசூரில் வாழ்ந்த ராவ்களுக்கு ‘ஆல மென் ” என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. திப்பு சுல்தான் ஆட்சியில், ”அல் அமீன்’ என்ற அரபிப் பதத்தின் சிதைவானதே ‘ஆலமென்’ ஆகும். அதாவது திப்பு சுல்தானின் ‘நம்பிக்கைக்கு உரியவர்கள் ஆகக் கருதப்பட்டு, நம்பப்பட்டவர்கள் பர்ப்பனர்கள் ஆவர். அந்த நம்பிக்கைக்கு உரியவர்களாக அவர்கள் வாழ்ந்து வரலாறு படைத்தார்கள? என்பது கேள்விக் குறியாகும். இருப்பினும் திப்புசுல்தான் பார்ப்பனர்களை முழுமையாக நம்பி யிருந்தார் என்பது தான் உண்மை வரலாறு – (ஆசிரியர் குறிப்பு)
சங்கராச்சாரி உறவு
அதோடு வேறு சில தக வல்களையும் எனக்கு அனுப்பி இருந்தார். ஆண்டு தோறும் மான்யங்கள் வழங் கப்பட்டு வந்த 156 கோயில்களின் பட்டியல் வந்தது. சிருங்கேரி நாத் ஜகத்குரு சங்கராச்சாரியார் அவர்களுடன் திப்புசுல்தான் மிக அணுக்கமான உறவு கொண்டிருந்தார். ஆச்சாரியாருக்கு சுல்தான் எழுதிய 30 கடிதங்களின் போட்டோ நகல்களும் வந்தன.
மைசூர் மன்னர்களிடையே ஒரு பழக்கமிருந்தது. ரங்கநாதா கோவிலுக்கு காலை உணவுக்கு முன் சென்றுபார்வை யிட்டு வருவது ஒவ்வொரு அரசரின் வழக்கமாகும். அதே பழக்கத்தை திப்புவும் மேற்கொண்டிருந்தார்.
பேராசிரியர் சிறீ கரந்தையா ஒரு அனுமானத்தையும் கூறி இருந்தார். கர்னல் மைரிஸ் என்பவர் ஹிஸ்டரி ஆப் மைசூர் எனும் நூல் எழுதி இருக்கிறார். அதில் தப்பும், தவறும் ஏராளமுண்டு. ஒரு வேளை டாக்டர் சாஸ்திரி அந்தப் புத்தகத்தைப் பார்த்து எழுதி இருந்தாலும் இருக்கலாம்’ என்று எழுதி இருந்தார்.
கைல்ஸ் எழுதிய புத்தகம் திப்பு சுல்தான் வரலாறு ‘ என்னும் பாரசீ புத்தகத்தை ஆதாரமாகக் கொண்டதெனவும், அந்நூல் விக்டோரியா மகா ராணியின் சொந்த நூலகத்தில் உள்ளதென்றும் கூறப்பட்டது. அதையும் விசாரித்துப் பார்த்ததில் விக்டோரியா மகாராணி நூலகத்தில் அப்படியொரு நூலோ, அதன் கையேட்டுப் பிரதியோ கிடையாது என்று தெரியவந்தது.
ஆனால் விந்தை என்னவென்றால் டாக்டர் சாஸ்திரி எழுதிய வரலாற்றுப் புத்தகம், வங்காளம், அசாம், பீகார், ஒடிசா, உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதே சம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள உயர் நிலை பள்ளிக்கூடங்களில் சரித்திரப் பாடப்புத்தகமாக பிரசுரிக்கப்பட்டிருந்தது.
கல்கத்தா பல்கலைக்கழக துணைவேந்தர் சர் அசு கோஸ் சவுத்திரிக்கு எல்லா விவரங்களையும் எழுதினேன். டாக்டர் சாஸ் திரி, மைசூர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் சர், பிரஜேந்திர நாத் சிங், பேராசிரியர் சிறீகரந்தையா ஆகியோருடன் கொண்ட தொடர்புகளின் நகல்களையும் அனுப்பி வைத்தேன், டாக்டர் சாஸ் திரியின் சரித்திரப் பாடப் புத்தகத்தில் உள்ள சரித்திரப் புரட்டு நீக்கப்படுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.
சாஸ்திரியின் பாடப் புத் தகத்தை பாட நூலாக ஏற் றதை நீக்கி, அதைப்போதிக் கக்கூடாது என்று உத்தரவு போடப்பட்டதாக சர் அஷு கோஷ் சவுத்திரி உடனே பதில் எழுதினார்.
ஆனால் இந்த பார்ப்பன தற்கொலை பொய்யுரை இன்றுங்கூட சில பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருப்பதைக் காணும்போது எனக்கு பேராச்சரியம் ஏற்படுகிறது!
இவ்வாறு பி. என். பாண்டே தனது சொற் பொழிவில் குறிப்பிட்டுள் ளார்.
-இந்தியாவில் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் எல்லாம், மன்னர்களை ஆட்டிப் படைக்கும் அதிகாரத்தில் இருந்தவர்கள் பார்ப்பனர்களாகவே இருந்திருக்கிறார்கள்.
‘மலை எலி’ என்று வர்ணிக்கப்படும் சிவாஜி மன்னன்- தான் முடி சூட்டுவதற்குக்கூட பார்ப்பனர்களைத் தான் நம்பினான்! முடி சூட்டு விழாவுக்காக பார்ப்பனர்களுக்கு எல்லாவற்றையும் அள்ளிக் கொடுத்து, கஜானாவையே காலி செய்தான்! அதன் விளைவு ஆட்சியே ஒழிந்தது!’
இதைத்தான் தந்தை பெரியார் புராண காலம் தொட்டு நடந்து வந்த அரசியல் போராட்டங்கள் சமுதாய அடிப்படையிலே நடந்து – இறுதியில் பார்ப்பனர்களுக்கு சாதகமாகவே முடிந்து வந்துள்ளதை தெளிவாக விளக்கினார்.
பிரிட்டிஷ்காரர்கள் வரும் வரை இந்த நாட்டில் நடந்த மன்னர் ஆட்சிகள் பார்ப்பனர்களுக்கு சாதகமானதாகவே இருந்து வந்திருக்கின்றன. இடையே புத்தர், களப்பிரர் காலத்தில் பார்ப்பனீயத்துக்கு சவால்கள் தோன்றினாலும் அதைப் பிறகு பார்ப்பனியம் ஜீரணித்துக் கொண்டது.
மன்னர்கள் ஆட்சியில் இருந்தாலும் ஆட்சி அதிகாரம் பார்ப்பனர்களிடம் நான் இருந்தது! மனு தர்மம்தான் ஆட்சி சட்டமாக இருந்தது.
எந்தெந்த ஜாதியினர், எந்தெந்த தொழிலில் ஈடுபடுவது என்பதையும், எந்த இடத்தில் குடியிருப்பது என்பதையும், எந்த உடையை உடுத்துவது என்பதையும் நிர்ணயிப்பவர்கள் பார்ப்பனர்களாகவே இருந்தனர்.
சமுதாய அரங்கின் ஆதிக்க சக்தியாக விளங்கியவர்கள் பார்ப்பனர்கள்.
வரலாற்றை எப்படி எல்லாம் பார்ப்பனப் போக்கில் திரித்து எழுதயுள்ளனர் என்பதற்கு இந்தச் சான்று ஒன்று போதாதா?
இத்தகைய வன்மம் கொண்ட பார்ப்பனர்கள் கையில் சிந்து சமவெளி நாகரிகம் குறித்து ஆய்வு நடத்திட பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறதாம்.
நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைப்பது என்பது இதுதான்.
குறிப்பு: வரலாற்று ஆசிரியர் பி.என்.பாண்டேயின் ஆதாரப்பூர்வமான வரலாற்று உண்மையை பல முக்கிய நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்தியவர் விடுதலை ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்களேயாவார்.
(வளரும்)