மும்பை, அக்.7- மகாராட்டிர மாநிலம், மும்பையில் கடைகளுடன் கூடிய இரண்டுமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 சிறார்கள் உள்பட 7 போ் உயிரிழந்தனா்.
செம்பூா் பகுதியில் உள்ள சித்தார்த் காலனியில் அதிகாலை 5.20 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தார்.
விபத்து ஏற்பட்ட இரண்டு மாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் கடைகள் இயங்கி வருகின்றன. அதன் மேல் பகுதி வசிப்பிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடா்பாக தீயணைப்புத் துறை அதிகாரி மேலும் கூறுகையில்,‘கடைகளில் உள்ள மின்சார வயா்களில் தீப்பற்றி எரிந்து, அது மேலே உள்ள குடியிருப்புகளுக்கும் பரவியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 3 சிறார்கள் உள்பட 7 பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கே அவா்கள் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா். தீயணைப்புத் துறை வாகனங்கள், தண்ணீா் லாரிகள் மற்றும் பிற உபகரணங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினா் காலை 9.15 மணியளவில் தீயை அணைத்தனா்’ என்றார்.
தீ விபத்து ஏற்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்ட மகாராட்டிர முதலமைச்சா் ஏக்நாத் ஷிண்டே, இந்த நிகழ்வு தொடா்பாக விசாரிக்க உயா்நிலைக் குழு அமைக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும், விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும். காயமடைந்தவா்களுக்கான சிகிச்சை செலவை மாநில அரசே ஏற்கும் எனவும் கூறினார்.