பிரதமர் மோடியை தாக்கிய ராகுல்காந்தி
மும்பை, அக்.6 அரசமைப்பை அழித்துவிட்டு சத்ரபதி சிவாஜி முன் பணிந்து பலனில்லை என்று பிரதமர் மோடியை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மராட்டியத்தில் உள்ள கோலாப்பூரில் அமைக்கப்பட்டு இருக்கும் சத்ரபதி சிவாஜி சிலையை ராகுல் காந்தி திறந்து வைத்தார். இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.இதைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, நாட்டில் 2 சித்தாந்தங்கள் உள்ளதாகவும். ஒன்று அரசமைப்பை அழிப்பது, மற்றொன்று அதனை பாதுகாப்பது என்றார். இதில் அரசியலமைப்புச் சட்டத்தை அழிக்கும் வேலையை பாஜக செய்து வருவதாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.
மேலும் விழாவில் பேசிய ராகுல் காந்தி, “சத்ரபதி சிவாஜியின் சிலை இன்று திறக்கப்பட்டது. ஒருவரின் சித்தாந்தத்தையும் அவரது செயல்களையும் நாம் முழு மனதுடன் ஆதரிக்கும்போது ஒரு சிலை உருவாகிறது. நாடு அனைவருக்கும் சொந்தமானது, அனைவரையும் அழைத்துச் செல்ல வேண்டும், யாருக்கும் அநீதி இழைக்கப்படக்கூடாது என்ற செய்தியை சத்ரபதி சிவாஜி வழங்கினார். சத்ரபதி சிவாஜி தனது வாழ்நாள் முழுவதும் அநீதிக்கு எதிராக, நீதிக்கான போரை நடத்தினார்.
சத்தியத்தின் பாதையைப் பின்பற்றக் கற்றுக் கொடுத்தார். அவரது வழியைப் பின்பற்றி, மக்களின் நீதிக்கான உரிமைக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.பாஜக அமைத்த சத்ரபதி சிவாஜியின் சிலை, சில நாட்களிலேயே உடைந்தது. சிவாஜிக்கு சிலை வைத்தால் போதாது, அவரது சித்தாந்தமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் அதில் உள்ள செய்தி,” இவ்வாறு தெரிவித்தார்.