சேலம், அக்.6- ஏற்காடு சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த ரூ. 9.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் தெரிவித்தாா்.
சேலம் மாவட்டம், ஏற்காடு சுற்றுலாத் தலத்தை மேம்படுத்தும் வகையில், படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைச்சா் ராஜேந்திரன் (4.10.2024) அன்று ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வுக்கு பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சுற்றுலாத் துறையில் மகத்தான சாதனை நிகழ்த்த வேண்டும் என்பதற்காக தனிக்கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 300 சுற்றுலாத் தலங்களில் பன்னாட்டு தரத்துக்கு இணையான வசதிகளை ஏற்படுத்த சுற்றுலா பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, சேலம் மாவட்டத்தில் சுற்றுலா வளா்ச்சிக்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஏற்காடு கோடை விழா ஒவ்வோா் ஆண்டும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும், 2023-2024-ஆம் ஆண்டின் சட்டப் பேரவை மானியக் கோரிக்கையின்படி, ஏற்காடு சுற்றுலாத் தலத்தில் நிலச்சீரமைப்பு, காட்சிமுனை, உள்கட்டமைப்பு மற்றும் பிற சுற்றுலா வசதிகளை மேம்படுத்தும் வகையில், ரூ. 9.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஜூலை மாதம் சுற்றுலாத் துறையால் அரசாணை வெளியிடப்பட்டது.
குறிப்பாக, 2023-ஆம் ஆண்டு மட்டும் சேலம் மாவட்டத்துக்கு ஏற்காடு, மேட்டூா் அணை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களைக் காண வெளிநாடு, பிற மாநில, மாவட்டங்களில் இருந்து 84.81 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனா்.
அதேபோன்று, ஏற்காட்டில் உள்ள படகு இல்லத்தில் மிதவை உணவகம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளும் ஆய்வு செய்யப்படும். இதற்காக வல்லுநா் குழு ஆய்வு மேற்கொண்டு சென்றுள்ளது. அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் இதுகுறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் ஆர்.ராஜேந்திரன்.
திருக்குறள் பேச்சுப் போட்டியில்
மாணவி க.இலக்கியா பரிசை வென்றார்
சென்னை, அக்.6- மாநில அளவில் திருக்குறள் பேச்சுப் போட்டியில் சென்னை முகப்பேர், வேலம்மாள் மேல்நிலைப் பள்ளி மாணவி க.இலக்கியா இடைநிலைப் பிரிவில் மூன்றாம் பரிசை வென்று சாதனை படைத்தார்.
சிறீராம் இலக்கிய கழகம், ‘இடைநிலைப் பிரிவு (6-8ஆம் வகுப்பு), ‘மேல்நிலைப் பிரிவு (9-12) வகுப்பு)’, கல்லூரிப் பிரிவு என மூன்று பிரிவுகளில் திருக்குறள் பேச்சுப் போட்டியை 1988ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மாநில அளவில் நடத்தி வருகிறது. இதில் நடப்பாண்டில் மொத்தம் 4,838 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இடைநிலைப் பிரிவில்: முதல் பரிசு பா.வர்சா (சிதம்பரம்), இரண்டாம் பரிசு சி.மாதிரி ஓவியா (இரத்தினகிரி), மூன்றாம் பரிசு க.இலக்கியா (சென்னை).
மேல்நிலைப் பிரிவில்: முதல் பரிசு ப.மாதுளா (திருச்சி), இரண்டாம் பரிசு க.வினிசா (தஞ்சாவூர்), மூன்றாம் பரிசு ச.கவு.பாவேஷ் பிரசன்னா (திருவாரூர்).
கல்லூரிப் பிரிவில்: முதல் பரிசு க.சிறீநிதி (மயிலாடுதுறை), இரண்டாம் பரிசு சி.அஸ்வின் அண்ணாமலை (சத்தியமங்கலம்), மூன்றாம் பரிசு மு.மணிவாசகம் (மதுரை).
முதல் பரிசு வென்றோருக்கு தலா ரூ.10,000 ரொக்கமும், இரண்டாம் பரிசை தட்டிச் சென்றோருக்கு தலா ரூ.7,500 ரொக்கமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.5,000 ரொக்கமும் மற்றும் அனைவருக்கும் கோப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டன.