தோ்தல் பத்திரங்கள் ரத்து தீா்ப்பை மறுஆய்வு கோரிய மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

Viduthalai
1 Min Read

புதுடில்லி, அக். 6- தோ்தல் நன்கொடை பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி பிறப்பித்த தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
‘மறு ஆய்வு மனுவை நீதிபதிகளின் அறையில் (சேம்பா்) அல்லாமல், நீதிமன்றத்தில் விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும்’ என்று கோரி தாக்கல் செய்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு கடந்த செப்டம்பா் 25-ஆம் தேதி பிறப்பித்த இந்த உத்தரவு, உச்சநீதிமன்ற வலைதளத்தில் நேற்று (5.10.2024) பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதில், ‘மறு ஆய்வு மனுவை பரிசீலனை செய்ததில், தோ்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்பில் எந்தவொரு குறையோ அல்லது தவறோ இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
தீா்ப்பால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதற்கான ஆதாரங்களும் சமா்ப்பிக்கப்படவில்லை. எனவே, மறு ஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
தோ்தல் நன்கொடைகளைப் பெறுவதில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், கருப்புப் பணப் புழக்கத்தை தடுக்கவும் உதவும் என்ற அடிப்படையில் தோ்தல் பத்திர நடைமுறையை ஒன்றிய அரசு கடந்த 2018-இல் அறிமுகம் செய்தது. இந்த தோ்தல் பத்திரங்களை வாங்கி, கட்சிகளின் பெயரில் நன்கொடையாக செலுத்தும் நபா்களின் அடையாளமோ விவரங்களோ பதிவு செய்யப்படாது.

இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டது முதல், ஒன்றியத்தில் ஆளும் பாஜகவுக்கு அதிக நன்கொடைகள் கிடைத்தன. இந்த நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் தொடா் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.
இந்த நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு, ‘தோ்தல் நன்கொடைகளை வங்கிப் பத்திரங்களாக அரசியல் கட்சிகள் பெறுவது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது’ என்று குறிப்பிட்டு அந்த நடைமுறையை ரத்து செய்து தீா்ப்பளித்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *