புதுடில்லி, அக்.5- கைதிகளை ஜாதி ரீதியாக பிரிக்கும் சிறை விதிமுறைகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மராட்டிய மாநிலம் கல்யாண் பகுதியை சேர்ந்த சுகன்யா சாந்தா என்றபெண், உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் உள்ள சிறைகளில், கைதிகளை ஜாதி ரீதியாக பாரபட்சமாக நடத்தும் விதிமுறைகள் அமலில் இருப்பதாக அவர் கூறியிருந்தார். அதன்பேரில், கடந்த ஜனவரி மாதம், ஒன்றிய அரசும், 11 மாநிலங்களும் பதில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணை முடிவடைந்த இவ்வழக்கில், 3.10.2024 அன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
காலனி ஆட்சிக்காலத்தில்தான் சிறைகளில் கைதிகள் ஜாதிரீதியாக பாரபட்சமாக, கண்ணியக்குறைவாக நடத் தப்பட்டனர். அது காலனி ஆட்சிக் காலத்தின் நினைவுச்சின்னமாக இருக்கிறது.
அரசியல் சாசனத்துக்கு எதிரானது: ஆனால், நமது அரசியல் சாசனம், எஸ்.சி., எஸ்.டி. ஆகியோர் பாரபட்சத்தில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொல்கிறது. நலிந்த பிரிவினரை பாரபட்சமாக நடத்த ஜாதியை பயன்படுத்தக்கூடாது என்று சொல்கிறது. சிறைகளில், நலிந்த ஜாதிகளை சேர்ந்த கைதிகளுக்கு சிறையை பெருக்குவது, சுத்தம் செய்வது போன்ற இழிவான வேலைகள் அளிக்கப்படுகிறது. உயர்ந்த ஜாதி கைதிகளுக்கு சமையல் வேலை அளிக்கப்படுகிறது. இதுபோல், ஜாதி அடிப்படையில் வேலைகளை ஒதுக்குவது, ஜாதி அடிப்படையில் கைதி களை பிரித்து, தனித்தனி வார்டுகளில் அடைப்பது போன்ற வழக்கத்தை ஏற்க முடியாது. இத்தகைய பாரபட்சம் நிறைந்த சிறை விதிமுறைகள் ரத்து செய் யப்படுகின்றன. அவை அரசியல் சாச னத்தின் 15-ஆவது பிரிவுக்கு எதிரானவை.
தீண்டாமை: இந்த குழு சமைக்கலாம். இந்த குழு சமைக்கக்கூடாது என்று வகைப்படுத்துவது தீண்டாமையின் அடையாளம். அதை அனுமதிக்க முடியாது. யாரும் துப்புரவுத் தொழி லாளியாக பிறப்பது இல்லை. ஆபத்தான சூழ்நிலையில், கைதிகளை கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய வைக்கக் கூடாது. தொடர் குற்றவாளிகளாக இருந்தால், அவர்களுக்கென உள்ள சட்டங்களை பின்பற்ற வேண்டும். அதை விடுத்து, ஜாதி அடிப்படையில் அவர்களுக்கு வேலை ஒதுக்கக்கூடாது.3 மாதங்களுக்குள், ஜாதிய பாகு பாடு இல்லாத வகையில், சிறை விதி முறைகளில் மாநிலங்கள் திருத்தம் செய்ய வேண்டும்.
மாநிலங்களின் பொறுப்பு: பாரபட்சத்தை தடுக்க வேண்டிய கடமை மாநில அரசுகளுக்கு இருக் கிறது. கைதிகள் மனிதாபிமானமற்ற வேலைகளை செய்ய வைக்கப்பட் டாலோ, மனிதாபிமானம் இன்றி நடத்தப்பட்டாலோ அதற்கு மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மற்றும் நலிந்த பிரிவினருக்கு எதிரான பாரபட்சம் தொடர்கிறது. இவற்றை தடுக்க உரிய சட்டங்கள் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வது நீதிமன்றங்களின் கடமை. இந்த தீர்ப்புக்கு உடன்படுவதாக மாநிலங்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ‘சிறைகளில் ஜாதிரீதியான பார பட்சம்’ என்ற வழக்கை நாங்களாக முன்வந்து விசாரிக்கப் போகிறோம். 3 மாதங்களுக்கு பிறகு, அவ்வழக்கு விசா ரணைக்கு வரும்வகையில் பதிவாளர் பட்டியலிட வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.