சென்னை, அக். 5– வள்ளுவர் கோட்டம் புனரமைப்புப் பணிகள் வருகிற டிசம்பர் மாதம் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறினர்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் திருவள்ளுவருக்காக ஏறத்தாழ 1,600 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் எழுப்பப்பட்ட ஒரு பிரமாண்டமான நினைவு அரங்கம்தான் வள்ளுவர் கோட்டம். மேனாள் முதலமைச்சர் கலைஞரால் கடந்த 1976ஆம் ஆண்டு வள்ளுவர் கோட்டம், சுமார் 5ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டது.
கம்பீரமாகவும், சென்னையின் அடை யாளமாகவும் வள்ளுவர் கோட்டம் திகழ்கிறது. தற்போது வள்ளுவர் கோட்டம் கட்டடங்கள் பழு தடைந்து காணப்பட்டது. இதனை, புனரமைப் பதற்காக கடந்த நிதியாண்டில் முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டதற்கிணங்க பராமரிப்புப் பணிகள் ரூ.80 கோடி மதிப்பில் நடந்து வருகிறது.
நவீன உத்திகளைப் பயன்படுத்தி புனரமைப்புப் பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக, இங்குள்ள கலையரங்கம், குறள்மணி மாட கூரை புனரமைப்பு, தரைகள் புதுப்பித்தல், குறள் மணிமாட ஓவியம் சீரமைத்தல், வளாகச் சுற்றுச் சுவர் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.
கலைநயத்தோடு கட்டடம்
இதுவரை வாகனங்கள் தரை தளத்தில் மட்டும் நிறுத்தப்பட்டது. மீதியிருக்கக்கூடிய வாகனங்கள் நிகழ்ச்சி நடைபெறும் போது சாலைப்பகுதியில் நிறுத்தப்படும் சூழ்நிலை இருந்தது. இப்போது ஏறத்தாழ சுமார் 180 நான்கு சக்கர வாகனங்கள் உள்ளே நிறுத்துவதற்காக தனியாக அரங்கம் அமைக்கப்படுகிறது. இரு சக்கர வாகனங்களும் நிறுத்துவதற்கான வசதிகள் இருக்கிறது. வள்ளுவர் கோட்டம் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் தான் இருக்கிறது.
எனவே, இருக்கின்ற இடத்தை வைத்து அதிக மக்கள் வந்து செல்லும் வகையிலும், பயன்படுத்தும் வகையிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், புதுப் பொலிவோடு,கலைநயத்தோடு அமைக்கப் பட்டு வருகின்றது.
அதேபோல, பொதுமக்கள் தேநீர் அருந்துவதற்கான கடைகள் எல்லாம் உருவாக்கப்பட இருக்கிறது. இன்னும் கிடைக்கக்கூடிய ஆலோசனைகளை பெற்று பொதுமக்களுக்கு ஒரு பொழுது போக்கு மய்யமாக அமையக்கூடிய வகையில் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக லேசர் ஒளிக்காட்சி நடத்தப்பட இருக்கிறது.
பழைய வள்ளுவர் கோட்டத்தைவிட மாறுபட்ட அளவில் திருக்குறளைப் பற்றிய ஆய்வு மய்யம் அமைக்கப்பட இருக்கிறது. அதே நேரத்தில், இன்னும் பணிகள் நடைபெறும்போது கிடைக்கக்கூடிய நவீன கட்டமைப்புகளுடன் பொதுமக்களை கவரும் வகையில் வள்ளுவர் கோட்டம் அமையும்.
டிசம்பரில் திறக்க திட்டம்
வள்ளுவர் கோட்டத்தில் உள்ள கல்தேர் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் முடிவுறுகிற போது, ஒரு புதிய பொலிவோடு வள்ளுவர் கோட்டம் மக்களின் விருப்பமான இடமாக நிச்சயம் காட்சியளிக்கும். காட்சியளிப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு விதங்களில் இது மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
இந்தப் பணிகள் திட்டமிட்டபடி, வருகிற டிசம்பர் மாதம் பணிகள் முடிக்கப் பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.