மும்பை, அக்.5 கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் தற்போதுள்ள 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசை தேசியவாத காங்கிரஸ் (பவார்) தலைவா் சரத் பவார் வலியுறுத்தினார்.
மகாராட்டிர மாநிலம், சாங்லி யில் செய்தியாளா்களுக்கு பேட்டி யளித்த அவா், இது தொடா்பாக கூறியதாவது:
மகாராட்டிரத்தில் இடஒதுக்கீடு கோரி போராடிவரும் மராத்தா சமூகத்தினரின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே பொதுவான கருத்தாகும். அதேநேரம், அந்த இடஒதுக்கீடு மற்ற சமூகத்தினரின் வரம்பை பாதிக்காமல் இருப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
தற்போது இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு 50 சதவீதமாக உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு சமூகத்தினருக்கு மொத்தம் 78 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்போது, மகாராட்டிரத்தில் ஏன் 75 சதவீத இடஒதுக்கீடு இருக்க முடியாது? தற்போதுள்ள 50 சதவீத இட ஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை ஒன்றிய அரசு கொண்டுவர வேண்டும். அவ்வாறு சட்டத் திருத்தம் கொண்டுவந்தால், நாங்கள் ஆதரிப்போம் என்றார் சரத் பவார்.
தொகுதிப் பங்கீடு பேச்சு தொடரும்
மகாராட்டிரத்தில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், சிவசேனை (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (பவார்), காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை அடுத்த வாரமும் தொடரவுள்ளது என்று சரத் பவார் தெரிவித்தார்.
‘தொகுதிப் பங்கீட்டை கூடிய விரைவில் இறுதி செய்ய வேண்டும் என்பதே தலைவா்களுக்கு நான் வழங்கும் அறிவுரை’ என்று அவா் குறிப்பிட்டார்.
மகாராட்டிரத்தில் முதல மைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜக, துணை முதலமைச்சர் அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் இடம்பெற்ற கூட்டணி ஆட்சியில் உள்ளது. அண்மையில் நடைபெற்ற மக்கள வைத் தோ்தலில், மாநிலத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 30-இல் எதிர்க்கட்சிக் கூட்டணி வென்றது. இது, எதிர்க்கட்சி கூட்டணிக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிய அரசின் முடிவுக்கு பாராட்டு
மராத்தி மொழிக்கு ‘செம்மொழி’ தகுதி வழங்கும் ஒன்றிய அரசின் முடிவு பாராட்டுக்குரியது என்று சரத் பவார் தெரிவித்தார். அதேநேரம், மகாராட்டிரத்தில் மராத்தி பயிலும் மாணவா்களின் எண்ணிக்கை குறைவதோடு, மராத்தி வழி பள்ளிகள் மூடப்படு வது குறித்து மாநில அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.