தேனி, அக். 4- தமிழ்நாடு அரசால் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்காக ‘புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டப்படிப்பு, பட்டய படிப்பு, அய்.டி.அய்., தொழிற்கல்வி படித்தவர்கள் கடன் பெறலாம்.
இவர்களுக்கு 5 கோடி வரை கடன் வழங்கப்படும் . 75 லட்சம் வரை (மானியம்) திரும்ப கட்ட தேவையில்லையாகும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை சிறுகுறு தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள மாநிலம் ஆகும். சிறுகுறு தொழில் நிறுவனங்கள் தான் தமிழ்நாட்டின் ஜீவாதாரம். புதிய சிறுகுறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க ஒன்றிய அரசும், மாநில அரசும் பல்வேறு சலுகைகளை அள்ளித் தருகின்றன. குறிப்பாக மிகவும் பின்தங்கிய பகுதிகளில் தொழில் தொடங்க அரசு பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது.
வேலை வாய்ப்பு அதிகரிக்கவும், புதிய தொழில் முனைவோர்களை அதிகரிக்கவும் அவர்களுக்கு வேண்டிய கடன் உதவியை அரசே ஏற்பாடு செய்து தருகிறது. அந்த கடனுக்கு 25 சதவீத மானியமும் தருகிறது. இந்த கடன் உதவி என்பது 10 லட்சம் ரூபாய் முதல் 5 கோடி வரை அவர்களின் தொழிலுக்கு ஏற்ற கடன் உதவியை அரசு வங்கிகள் மூலம் ஏற்பாடு செய்து வழங்குகிறது. அதேநேரம் வட்டி மானியத்தை அரசு தருகிறது. அதிகபட்சமாக 5 கோடி வரை கடன் வாங்குவோருக்கு 75 லட்சம் வரை மானியம் தருகிறது. இதுதவிர மிகக்குறைந்த வட்டியில் கடன் உதவியாக தருவதால், தொழில் முனைவோர் ஆக விரும்புவோருக்கு அருமையான வாய்ப்பு ஆகும். தெளிவான திட்டமிடலுடன் விண்ணப்பித்தால் கடன் உதவியை யார் வேண்டுமானாலும் பெறலாம்.
இதுபற்றி தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: “தமிழ்நாடு அரசால் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்காக ‘புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்’ (நீட்ஸ்) மாவட்ட தொழில் மய்யம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீட்ஸ் திட்டத்தின் கீழ், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டப்படிப்பு, பட்டய படிப்பு, அய்.டி.அய்., தொழிற்கல்வி படித்தவர்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்.
நீட்ஸ் திட்டத்தின் கீழ், விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் 21 முதல் 45 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், மேனாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய சிறப்பு பிரிவினர் 21 முதல் 55 வயது வரை இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 3 ஆண்டுக்கு குறையாமல் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த பொருளாதார ரீதியாக சாத்தியப்படக்கூடிய தொழில்கள் தொடங்க ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை வங்கி கடனுதவி வழங்க பரிந்துரை செய்யப்படும். கடனுதவி பெற்று தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களுக்கு 25 சதவீதம் மானியமாக, அதிகபட்சம் ரூ.75 லட்சம் மானியம் வழங்கப்படும்.
தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற https://www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட தொழில் மய்யத்தை தொடர்பு கொள்ளலாம்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.