ஒரு கண்ணோட்டம் (3)
* பேராசிரியர்
ப. காளிமுத்து எம்.ஏ., பி.எச்டி.,
சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தில் தந்தை பெரியாருக்கு உறுதுணையாக நின்றவர்களில் முதன்மையானவர் முருகப்பா (மரகதவல்லி), (பலர் இதை அறிந்திருக்க வாய்ப்பில்லை)
1967ஆம் ஆண்டு சென்னை விக்டோரியா அரங்கில் நடந்த நீதிக்கட்சிக்கான முதல் அமைப்புக் கூட்டத்தில் டாக்டர் நடேசனார், டி.எம். நாயர் ஆகியோ ருடன் இணைந்து பங்கேற்றவர் அலர்மேலு மங்கைத் தாயாரம்மாள், தேவதாசி முறையை எதிர்த்து இடையறாது போராடிய முதல் போராளி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்,
அன்னை நாகம்மையார், அய்யாவின் தங்கை கண்ணம்மாள், பெரியாரின் அண்ணன் மகள் – திருச்சி மாநாட்டில் திராவிடர் கழகக் கொடியை ஏற்றி வைத்த மிராண்டா,
குஞ்சிதம், குருசாமி, சிவகாமி சிதம்பரனார், நீலாவதி, இராம. சுப்பிரமணியன், ஹிந்தி எதிர்ப்புப் போரில் தீவிரப் பங்காற்றிய மருத்துவர் தர்மாம்பாள், மலர் முகத்தம்மையார், தாமரைக் கண்ணி அம்மையார், நாராயணி அம்மையார் ஆகியோரைப் பற்றி வழக்குரைஞர் அருள்மொழி மிகச் சிறப்பாக – இவர்களெல்லாம் நின்று பயன் தரும் மலைமேல் பெய்த மாமழை – என்று குறிப்பிட்டிருப்பது அருமை!
ஹிந்தித் திணிப்புக்கு எதிராகத் திரண்ட பெண்கள் மாநாடு அய்யாவுக்குப் ‘பெரியார்’ என்ற பட்டமளித்துச் சிறப்பித்தது.
ஹிந்தி எதிர்ப்புப் போரில் வரிசை வரிசையாக அணி வகுத்துச் சிறை புகுந்த பெண் தலைவர்களின் எண்ணிக்கை நாட்டையே அதிர வைத்தது. இப்போராட்டத்தில் இரண்டு முறை கைதாகிக் குழந்தையுடன் சிறை சென்ற பட்டம்மாள் பாலசுந்தரம், மேனாள் அமைச்சர் என்.வி. நடராசனின் இணையர் புவனேசுவரி அம்மையார் இவர்கள் எல்லோரும் வரலாற்றில் நிலைத்து நிற்கும் தலைவர்கள்! இப்பெரு மக்களைப் பற்றிய வரலாற்றைத் தனி நூலாக ஆவணப்படுத்துமாறு அருள்மொழியை அன்போடு வேண்டுகிறோம்.
திராவிடர் இயக்கத் தோழர்கள் நடத்திய கோயில் நுழைவுப் போராட்டங்களை வரலாற்று முறைப்படி வரிசைப்படுத்துகிறார் தளபதிராஜ். சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் நுழைவில் கிடைத்த வெற்றி, திருவண்ணாமலைக் கோயிலில் ‘திராவிடன்’ இதழ் ஆசிரியர் கண்ணப்பரைப் பார்ப்பனர்கள் கோயிலுக்குள் பூட்டி வைத்த நிகழ்வு, கோயிலைப் பூட்டியவர்களை நீதிமன்றம் தண்டித்தது.
மயிலாடுதுறை மயூரநாத சாமி கோயிலில் கி.ஆ.பெ. விசுவநாதம் தலைமையில் நடந்த கோயில் நுழைவு, திருச்சி மலைக் கோயிலில் என். இராமநாதன் தாழ்த்தப்பட்ட தோழர்களுடன் படியேறிய போது குண்டர்களால் தாக்கப்பட்டு மலைமேலிருந்து உருட்டி விடப்பட்ட துயர நிகழ்ச்சி, ஈரோட்டில் ஈசுவரன் கோயிலில் சா. குருசாமி தாழ்த்தப்பட்ட தோழர்களோடு உள்ளே நுழைந்தபோது கோவிலுக்குள் வைத்துப் பூட்டப்பட்டது, முதலான கோயில் நுழைவுப் போராட்டங்களைத் தளபதி முறைப்படி வரைந்திருக்கிறார். கோயில் கொடுமைகளை எதிர்த்துப் பெரியார் தொண் டர்கள் எப்படியெல்லாம் போராடி யிருக்கிறார்கள் என்பதைத் தளபதி யின் கட்டுரை அருமையாக எடுத்துரைக்கிறது. ஈராயிரம் ஆண்டு அடிமை வாழ்விலிருந்து மீள்வதற்காகச் சுயமரியாதை இயக்கம் கண்ட களங்கள் எத்தனை எத்தனை! மறக்க முடியாத வரிகள் இவை.
அண்மையில் ஈழத்திற்குச் சென்று அமிர்தலிங்கம் அவர்களின் அறக்கட்டளை விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார் ஆசிரியர். அங்கு பல்வேறு நிகழ்வு களில் கலந்து கொண்டு தமிழ் ஈழத் தலைவர்களுடன் பயனுள்ள கலந்துரையாடல் நிகழ்த்தியுள்ளார் தமிழர் தலைவர். சிங்களர்களால் எரிக்கப்பட்ட யாழ் நூலகம், ஈழத் தந்தை செல்வா நினைவிடம் முதலான பல்வேறு இடங்களைப் பார்வையிட்டு மக்களோடு கலந்துரையாடி விட்டு ஆசிரியர் தாயகம் திரும்பியுள்ளார். ஆசிரியரோடு உடன் சென்று உதவிய பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் ஈழத்தில் ஆசிரியர் நிகழ்ச்சிகளையெல்லாம் நேரில் கண்டு பதிவு செய்திருக்கிறார். ‘ஈழப் போருக்குப்பின் தமிழ்நாட்டிலிருந்து சமூகத் தலைவர் ஒருவர் சென்று ஈழத்தில் உரையாற்றுவது இதுவே முதல் முறை அது புதிய மாற்றங்களுக்கு வழிகோலுவதாக இருக்கும்’’ என்று பிரின்சு என்னாரெசு பெரியார் ஒரு நன்னம்பிக்கையை நமக்குத் தருகிறார். அது வெற்றி பெற வேண்டும் என்று நாம் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.
சுயமரியாதை இயக்கமும் இலக்கிய ரசனையும் என்பதுபற்றிப் பேராசிரியர் அறவேந்தன், ‘தமிழரின் மனத்தைப் பக்குவப்படுத்துவதில், ரசனை மனோபா வத்தை மாற்றி அமைத்ததில் சுயமரியாதை இயக்க ஏடுகளுக்கும் மேடைப் பேச்சுகளுக்கும் தந்தை பெரியாருக்கும் முகாமையான பங்குண்டு என்கிறார் பேராசிரியர்.
பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவர் டாக்டர் சோம. இளங்கோவன் அவர்கள், ‘பெரியார் உலக மயம்’ எனும் தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை இளைஞர்களை ஊக்கப்படுத்தும் அருமருந்தாக அமைந்துள்ளது.
தந்தை பெரியார் நாள்தோறும் பேசப்படுகிறார். உலகப் பல்கலைக் கழகங்கள் எல்லாம் பெரியாரை ஆய்வு செய்கின்றன. பெரியாரை உலகமயமாக்கும் பணியில் தமிழர் தலைவர் அல்லும் பகலும் அயராது ஈடுபட்டு உழைத்துக் கொண்டிருக்கிறார். கணினி, அச்சுத்துறை, மண்புழு உரம், கட்டுமான முன்னேற்றம், கரோனாக் காலத்தில் தொடங்கப்பட்ட இணைய வழிக் கருத்துப் பரிமாற்றங்கள் முதலான பல்வேறு துறைகளில் ஆசிரியர் தலைமையில் திராவிடர் கழகம் முன் நிற்பதை உலகறியும் என்பதை டாக்டர் சோம. இளங்கோவன் அவர்கள் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார். உலகெங்கும் பெரியார் மய்யங்கள், நூலகங்கள், ஆராய்ச்சி அரங்குகள் முதலியவற்றைத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் உருவாக்குவோம் என்று டாக்டர் சோம. இளங்கோவன் அவர்கள் கூறுகிறார்.
சுயமரியாதை இயக்கம் தோன்றிய பத்தாண்டுக் காலத்திற்குள் அது எவ்வளவு பெரிய வேலையைச் செய்திருக்கிறது என்பதைத் தந்தை பெரியார் சொற்களின் மூலம் கவிஞர் கலி. பூங்குன்றன் எடுத்துக்காட்டுகிறார்.
‘சுயமரியாதை இயக்கம் தோன்றி, பத்து ஆண்டு காலத்திற்குள் தமிழ்நாடு, மலையாள நாடு, ஆந்திர நாடு ஆகியவற்றைச் சமுதாய இயலில் ஒரு கலக்குக் கலக்கி விட்டிருக்கிறது’’ என்று பெரியார் குறிப்பிடுகிறார். மேலும் ‘தோழர் காந்தியாரையே பல கரணங்கள் போடச் செய்து விட்டது. தோழர் காந்தியாரும் காங்கிரசும் இல்லாமல் இருந்திருக்குமானால் இந்தியாவையே ஒரு கலக்குக் கலக்கியிருக்கும்’ என்று பெரியார் குறிப்பிடுவதைக் கவிஞர் எடுத்துக்காட்டுகிறார்.
கவிஞர் மேலும் தொடர்ந்து எழுதுகிறார்: ‘பெரியாரியல் என்பது ஒரு வாழ்க்கை நெறி; அது மானிட சமுதாயம் முழுமைக்கும் உரியது; அதே நேரத்தில் திராவிட இனப் பார்வையும் உண்டு.’ ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகிலுள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற் போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன் என்னும் அய்யாவின் பொன்மொழியைக் கவிஞர் பொருத்திக் காட்டுகிறார்.
‘எந்த மனிதனும் எனக்குக் கீழானவன் அல்ல; அதைப் போலவே எவனும் எனக்கு மேலானவனும் அல்ல; ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் இருக்க வேண்டும்; இந்த நிலை ஏற்பட ஜாதி ஒழிய வேண்டும்’ என்று ஜாதி ஒழிப்பையும்,
‘பெண்களை ஆண்கள் படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்கு உலகப் படிப்பும் பகுத்தறிவும், ஆராய்ச்சிப் படிப்பும் தாராளமாய்க் கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் பெண்களைப் பெண் என்றே அழைக்காமல் ஆண் என்றே அழைக்க வேண்டும்.
ஆண்கள் பெயர்களையே வைக்க வேண்டும். உடைகளும் ஆண்கள் அணியும் உடைகளைப் போலவே பெண்கள் அணிய வேண்டும்; என்று ஆண் பெண் சமத்துவத்தையும்,
பெண்கள் கூந்தலைக் கத்தரித்துக் கொள்ள வேண்டும். ஆறடி ஏழடி என்று வளர்த்துக் கொள்வது அநாகரிகம்; ஆண்களைப் போலவே ‘கிராப்’ வெட்டிக் கொள்ளும் பெண்களுக்கு 500 ரூபாய் கூடத் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறேன்’ என்று பெண் விடுதலையையும் பெரியார் வலியுறுத்துவதைக் கவிஞர் எடுத்துக்காட்டுகிறார். ஆதலின் தந்தை பெரியார் படைத்தது புதுமைப் பெண் அல்ல; புரட்சிப் பெண்’ என்று கவிஞர் குறிப்பிடுகிறார். மேலும் பல அரிய செய்திகளைக் கவிஞர் கட்டுரையில் காணலாம்.
ஒரு பக்கக் கட்டுரைகள்: சுயமரியாதையைப் பற்றித் தந்தை பெரியார் கூறியுள்ள கருத்துரைகள், பெரியாரின் மலேசியப் பயணம் ஏற்படுத்திய எழுச்சியும், வளர்ச்சியும், அறிவியல் அறிஞர் ஜி.டி. நாயுடுவின் வீட்டில் அன்னை மணியம்மையாரும் பெரியாரும், வைக்கம் அறப்போர் நூற்றாண்டுச் சிறப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சரும் கேரள முதலமைச்சரும், மேனாள் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில்சிங் அவர்கள் பெரியாருக்கும் செலுத்தும் புகழாரம், சிந்துசமவெளி நாகரிகம் பற்றி ஜான்மார்சல் வெளியிட்ட கருத்து, ‘கோட்சே’ ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது என்று காந்தியாரின் உதவியாளர் கல்யாணம் எழுதிய கட்டுரை. ஆர்.எஸ்.எஸ். தனது பயிற்சிகளை நிறுத்த வேண்டும்’ என்று எம்.ஜி.ஆர். விடுத்த எச்சரிக்கை, தேவதாசி ஒழிப்புச் சட்டம் கடந்து வந்த பாதை. நீதிக்கட்சியின் ஆட்சிக் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆஸ்திரேலியாவில் தை முதல் நாள் தமிழ் மரபு நாள் குறித்த அஞ்சல்தலை வெளியீடு, தை மாதமே தமிழர் ஆண்டின் முதல் மாதம் என்பதனை உறுதிப்படுத்தும் இராமநாதபுரம் கல்வெட்டு, தந்தை பெரியாருக்குப் ‘பெரியார்’ என்ற பட்டத்தை வழங்கிய தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு, கீழடியும் கிருஷ்ணன் கட்டுக் கதையும் பற்றி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் கூறுவது, முதல் சுயமரியாதை மாநாட்டில் கலந்து கொண்ட முக்கியத் தலைவர்கள் பற்றிய செய்தி, குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா மாட்சி, 8 ஆண்டுகளில் சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி ரூ.1488 கோடி; தமிழ் வளர்ச்சிக்கு ஒதுக்கிய நிதி வெறும் ரூ.74 கோடி தந்தை பெரியாரின் பர்மா பயணம் பற்றிய செய்திகள், பெரியார் நடத்திய பெரும் போராட்டத்தின் காரணமாக முதன் முதலாக இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட்டு இடஒதுக்கீடு காப்பாற்றப்பட்டது, அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களைப் பற்றிய செய்தி, சுயமரியாதை வீரர்கள் சிவகங்கை இராமச்சந்திரனார், சர் ஏ.டி. பன்னீர்செல்வம், தாளமுத்து நடராசன் ஆகியோரைப்பற்றிய செய்திகள் என இந்த மலரில் நூற்றுக்கணக்கான சிறு சிறு கட்டுரைகளை இந்த மலர் தாங்கியுள்ளது. ஒரு வரலாற்றுப் புத்தகத்தைப் படிப்பதைப் போன்ற உணர்வு நமக்கு ஏற்படுகின்றது.
ஒருவரிச் செய்திகள்: தி.மு.க. நடத்திய திருச்சி மாநாட்டில் (மார்ச் 2006) திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்; அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும்.
பாடப் புத்தகத்தில் தலைவர்களின் பெயர்களுக்குப் பின்னால் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டார்.
‘தமிழுக்குத் துரோகமும் இந்தியின் இரகசியமும்’ என்றதலைப்பில் குடிஅரசு இதழில் (7.3.1926) தந்தை பெரியார் கட்டுரை ஒன்றை எழுதினார். ஆக 1926 முதலே பெரியார் ஹிந்தி எதிர்ப்பைத் தொடங்கி விட்டார் என்பது புலனாகும். இவற்றைப் போன்ற ஒரு வரிச் செய்திகள் பல மலரில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கவிதைகள்: இந்த மலரில் இரண்டு கவிதைகள் இடம் பெற்றுள்ளன. புரட்சிக் கவிஞர் ‘தீய இருளப்பன் விடை பெற்றான்; திருமுகத்தில் நிலா வீச ஒளிமங்கை எழுந்தாள் அந்த நேரிழை பேர் சுயமரியாதை இயக்கம்’ என்று உருவகப்படுத்தும் அழகே அழகு! மேலும் பேதமிலா அறிவுடைய அவ்வுலகத்திற்குப் பேசு சுயமரியாதை உலகு எனப் பெயர் வைப்போம்’ என்னும் தொடரில் சுயமரியாதை உலகு பேதமற்றத, அறிவுடையது என்று புரட்சிக் கவிஞர் விளக்குகிறார்.
திராவிட மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள் பெரியாரை அறநூற் பெரியார், தனித் தமிழ்ப் பெரியார், தன்மானப் பெரியார் என்று முப்பெரும் பெரியாராகத் தம் கவிதையில் காட்டுகிறார். அருமையான அகவற்பாவில் பாவாணரின் கவிதை அமைந்துள்ளது.
ஒளிப்படங்கள்: இந்த மலரில் இடம் பெற்றுள்ள ஒளிப்படங்கள் ஒவ்வொன்றும் ஒரு வரலாற்றைப் பேசுகின்றன. 1930இல் பெரியார் மலேயா சென்றபோது எடுத்தபடம்; மீண்டும் 1954இல் மலேயா சென்றபோது தோட்டத் தொழிலாளர்களுக்கு அறிவுரைக்கும் படம்; 1954இல் பினாங்குத் துறைமுகத்தில் அய்யாவுடன் தோழர்கள்;
1974இல் ‘இராவண லீலா’ நடத்தப்பட்டபோது அன்ை மணியம்மையாருடன் அதில் பங்கு பெற்ற தோழர்கள்.
வைக்கம் நூற்றாண்டு விழாவில் தந்தை பெரியார் நினைவிடத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் கேரள முதலமைச்சரும்; வைக்கத்தில்
புதுப்பிக்கப்படும் பெரியார் நினைவகம்;
முதல் சுயமரியாதை மாநாட்டில் (1929) கலந்து கொண்ட முக்கியத் தலைவர்கள்; குன்றக்குடி அடிகளாரும் அய்யாவும் தமிழர் தலைவர் ஈழத்தில் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தைக் காட்டும் படங்கள்.
தந்தை பெரியாரும் அன்னை மணியம்மையாரும் டாக்டர் அம்பேத்கரும் பர்மாவில் கலந்து கொண்ட நிகழ்ச்சி;
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் குடும்பத்தினருடன் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் (சென்னையில்) காட்சிதரும் ஹிந்தி எதிர்ப்பில் முதல் களப் பலியான போராளிகள் நடராசன் (படம்: தாளளமுத்து ஆகியோரின் படங்கள் என நூற்றுக்கணக்கான வண்ணப் படங்கள் நமக்கு வரலாற்றை எடுத்துரைக்கின்றன.
ஆசிரியர் அறிக்கைகள்: நாட்டில் நடக்கும் அரசியல் சமூக நிகழ்வுகளைக் குறித்துத் தலைவர்கள் தத்தம் கருத்துகளை அறிக்கைகள் வாயிலாகத் தெரிவிப்பது வழக்கம். அவ்வகையில் தமிழ்நாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ‘இந்தச் சிக்கலைப் பற்றி என்ன கருதுகிறார்? அவர் அறிக்கை வெளிவந்து விட்டதா?’ என்று எதிர்பார்த்து ஆசிரியர் அறிக்கை வெளிவந்தவுடன் தம் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். 1.9.2023 முதல் 29.8.2024 வரையிலான காலப் பகுதியில் ஆசிரியர் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் எண்ணிக்கை 260 ஆகும். இவை வரலாற்றுச் சிறப்புமிக்கவை.
ஆசிரியர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்: தமிழர் தலைவர் ஓய்வறியாது உழைக்கும் தலைவர் என்பதை நாடறியும். 2.9.2023 முதல் 31.8.2024 வரையிலான காலப் பகுதியில் ஆசிரியர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை 284 ஆகும். இத்தனை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்டு சிறப்பித்தவர் வேறு எவரும் இல்லை!
கடந்த பெரியாராண்டில் திராவிடர் கழகத் தோழர்கள் ஏறக்குறைய 75 நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்கள்.
நிறைவாகச் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரை அழகுற வடிவமைத்துக் கொடுத்த திருவாளர்கள் விசாலாட்சி, கிருஷ்ணமூர்த்தி, ஜெகன்நாதன் ஆகியோர்க்கும் முகப் போவியத்தை நன்முறையில் வரைந்து கொடுத்த ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களுக்கும் ஏனைய ஓவியர்களுக்கும், ஒளிப்படங்களை நேர்த்தியான முறையில் எடுத்து உதவிய பெரியார் கலையகம் பா. சிவகுமார் அவர்களுக்கும் பெரியார் வலைக்காட்சித் தோழர்களுக்கும், இவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து அழகிய மலரை ஆவணமாக உருவாக்கிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களுக்கும் நமது நன்றியும் வணக்கமும்.