வாரணாசி, அக்.4- உபியில் உள்ள பல கோவில்களில் இருந்த சாய்பாபாவின் சிலைகள் கடந்த 1.10.2024 அன்று ஸநாதன ரக்ஷக் தளம் என்ற குழு வால் அகற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி.யில் உள்ள பல ஹிந்து கோயில்களில் சாய்பாபா சிலை உள்ளது. இந்த நிலையில் நேற்று வாரணாசியில் உள்ள பல கோயில்களில் இருந்த சாய்பாபா சிலைகள் அகற்றப்பட்டன. ஸநாதன ரக்ஷக் தளம் என்ற அமைப்பு கோயில்களில் புகுந்து சாய்பாபா சிலைகளை அகற்றி, கோயில்களுக்கு வெளியே வைத்தனர்.
வாரணாசி படா கணேஷ் கோவிலில் இருந்தும் சாய்பாபா சிலை அகற்றப்பட்டது.
இதுகுறித்து கோயில் தலைமை அர்ச்சகர் ராம்மு குரு கூறுகையில்,
‘சாயிபாபாவை சரியான அறிவு இல்லாமல் வழிபடுகிறார்கள். இது சாஸ்திரப்படி தடைசெய்யப்பட்டுள்ளது’ என்றார். அன்னபூர்ணா கோயிலின் தலைமை அர்ச்சகர் சங்கர் பூரி கூறுகையில், ‘சாய்பாபாவை வழி படுவது குறித்து சாஸ்திரங்களில் குறிப்பிடப்படவில்லை’ என்றார்.
அயோத்தி ஹனுமன்கர்ஹி கோவிலின் மஹந்த் ராஜு தாஸ் கூறுகையில், ‘சாய்பாபா ஒரு மத போதகர், ஒரு பெரியநபர், ஆனால் அவரால் கடவுளாக இருக்க முடியாது. எனவே, அவரது சிலையை கோயிலில் இருந்து அகற்றியவர்களுக்கு நன்றி’ என்றார். அடுத்தடுத்து நடந்த இந்த நிகழ்வுகளால் உ.பி.யில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.