1925ஆம் ஆண்டு, தமிழ்நாடு வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய ஆண்டாகும். சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், வைக்கம் அறப்போர் ஆகியவற்றைத் தொடர்ந்து, காங்கிரசில் இருந்து வெளியேறிய பெரியார் 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். இதே ஆண்டில்தான் தமிழ் இதழியல் வரலாற்றில் புரட்சி மலர்கள் பூக்கின்ற பூந்தோட்டமாகக் ‘குடிஅரசு’ இதழைத் தோற்றுவித்தார். குடிஅரசும் சுயமரியாதை இயக்கமும் இரட்டைக் குழந்தைகள்!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மலர் 352 பக்கங்கள் கொண்ட ஒரு பொன்னேடாகக் காட்சியளிக் கிறது. முகப்பில் தந்தை பெரியார் கைத்தடியுடன் கம்பீரமாக அமர்ந்திருக்கும் காட்சி, நம் கண்களுக்கு விருந்தளிப்பதோடு, தலைசிறந்த ஒரு தத்துவ மேதையின் தோற்றத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
காங்கிரசின் இளந்தலைவர் இராகுல்காந்தி அவர்கள், ‘‘சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டில் தந்தை பெரியாரின் விழுமிய தியாகத்திற்கு மதிப்பளித்து வணங்குகிறேன்; தலைமுறை தலைமுறையாக ஒடுக்கப்பட்டுக் கிடந்த கோடிக்கணக்கான மக்கள் விடுதலை பெற்று மானமுள்ள வாழ்க்கை நடத்துவதற்குப் பெரியாரின் தலை சிறந்த அறிவு நுட்பமும் தலைமைத் தன்மையும் உதவி செய்துள்ளன. ஒரு நூற்றாண்டுக்குப் பிறகும் தந்தை பெரியாரின் தத்துவங்கள் நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கின்றன’’ என்று வாழ்த்துச் செய்தி அனுப்பியிருப்பது சிறப்புக்குரியதாகும். எந்த காங்கிரஸ் இயக்கம் அய்யாவின் வகுப்புரிமைக் கொள்கையைப் புறக்கணித்ததோ அதே காங்கிரசின் தலைவர் தந்தை பெரியாரின் தத்துவங்களைப் போற்றி வாழ்த்தியிருப்பது அய்யாவின் தத்துவங்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
‘பெரியார் உலக மயம்! உலகம் பெரியார் மயம்’ எனும் தலைப்பில் தமிழர் தலைவர், பெரியார் தத்துவங்கள் நாட்டு எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை விரிவான முறையில் ஆராய்ந்துள்ளார். மலேயா, சிங்கப்பூர், மியான்மா முதலான நாடுகளில் பெரியாரின் சுற்றுப் பயணங்கள் பற்றியும், அங்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு அவர் கூறிய அறிவுரைகளைப் பின்பற்றி அம்மக்கள் இன்று எப்படி முன்னேறியிருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் ஆதாரங்களோடு ஆசிரியர் விளக்குகிறார். இந்நாடுகளில் பெரியாரின் சுற்றுப் பயணம் பற்றி வெளி வந்துள்ள ஆய்வு நூல்களை ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார். அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டமைப்பு ஆற்றிவரும் பணிகளையும் ஆசிரியர் குறிப்பிட்டுப் பாராட்டுகிறார். ஆசிரியரின் கட்டுரையைப் படிக்கும்போது ஓர் ஆராய்ச்சிக்் கட்டுரையைப் படிப்பதைப் போன்ற உணர்வு நமக்கு ஏற்படுகின்றது.
‘‘சுயமரியாதை இயக்கம் உலகப் பார்வை கொண்ட ஓர் அதிசய இயக்கம்; அறிவே அதன் ஆயுதம்; மானிடப் பரப்பே அதன் எல்லைகள்; மாந்த நேயமே அதன் விழைவு’’ என்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ள வரிகள் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை விளக்கத்தைக் காட்டுவனவாக உள்ளன. ’பெரியார் விசன்’ எனும் ஓடிடி (OTT) ஊடகம் நமக்குப் பெருந்துணையாக அமைந்துள்ளது.
சுயமரியாதை இயக்கப் பொன்விழா மலரில் (1976) அன்னை மணியம்மையார் எழுதிய கட்டுரை இந்த மலரிலும் இடம் பெற்றுள்ளது.
‘‘நாளை நான் சாகும்போது எனக்கு உணர்வு இருந்தால் நிம்மதியாகத்தான் சாவேனேயொழிய, ஒரு குறையும் இருப்பதாக நான் கருத மாட்டேன்… ஜாதி மதமென்ற கொடுமை ஒழிவதும், கடவுள் என்ற மூடநம்பிக்கை ஒழிவதும் மனித சமூகத்திற்கு நன்மையானது என்கிற கருத்தில் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறேனோ அந்த வேலையைச் செய்கிறேன். இந்த எண்ணத்தின் மீதே சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தேன்’’ என்று தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததற்கான காரணத்தைக் கூறுவதை அன்னையார் எடுத்துக் காட்டுகிறார்.
தமிழ்நாட்டிலே சுயமரியாதை இயக்கம் தோற்று விக்கப்பட்டாலும் அதன் தத்துவங்கள் மனித வர்க்கத்திற்கே பொதுவானவை. உலகிலேயே ஓர் அதிசயமான இயக்கம் சுயமரியாதை இயக்கம். இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டின் இழிவைப் போக்குவதற்காகத்தான் தனக்கு வரும் இழிவைப் பற்றிக் கவலைப்படாதவர்கள். தன் வீட்டுச் சோற்றைத் தின்றுவிட்டு ஊருக்காக உழைக்கக் கூடிய உத்தமர்கள்; ‘தன்னல மறுப்புணர்ச்சி கொண்ட தற்கொலைப் பட்டாளங்கள்!’ என்று இயக்கத் தோழர்களின் மாண்புகளை அன்னையார் எடுத்துக்காட்டுகிறார். ‘இராவண லீலா’ வழக்கில் தண்டனை பெற்ற தோழர்களை மறக்காமல் குறிப்பிடுவது ஒரு மாபெரும் தலைவரின் தனித்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. ‘‘பெரியார் திடலில் கட்டப்பட்டுள்ள அய்யா பெயரில் அமைந்துள்ள ஏழடுக்குக் கட்டடத்தைத் திக்கற்ற குழந்தைகளைக் கொண்டு திறப்பது என்று முடிவு செய்து விட்டேன்’’ என்று அன்னையார் எழுதியிருப்பதைப் படிக்கும்போது நாம் தலை நிமிர்ந்து பெருமை கொள்கிறோம்.
முத்தமிழறிஞர் கலைஞர், திராவிடர் கழகத்திற்கும் தி.மு.க.வுக்கும் ஒரே லட்சியம்தான் என்பதை, ‘‘தி.க., தி.மு.க., என்று இரண்டாக’’ இருந்தாலும் இரண்டும் இரு வேறு இடங்களில் இருந்தாலும் ஒரே லட்சியத்திற்காகத்தான் பாடுபட்டு வருகிறோம். ஒன்று ஆட்சிப் பொறுப்பில் அரசியலில் இருந்து அந்தப் பணியைச் செய்கிறது. மற்றொன்று வெளியே இருந்து அந்தப் பணியைச் செய்கிறது. அவ்வளவுதானே தவிர, இரு வேறு அமைப்புகள் அல்ல’’ என்று ஆயிரக்கணக்கான தோழர்களின் கையொலிக்கிடையில் கலைஞர் முழக்கமிட்ட செய்தி குறிப்பிடத்தக்கதாகும்.
‘‘நந்தனைத் தீயில் இறக்கி உள்ளே அழைத்து வா’ என்று வேதியர் கனவில் தோன்றிக் கடவுள் உரைத் தாராம். கடவுள் யோக்கியராக இருந்தால், அவர் நந்தன் கனவில் தோன்றி அதைச் சொல்லி இருக்க வேண்டும். கடவுளே ஜாதி வெறி பிடித்ததாக இருந்தால் அந்தக் கடவுள் நமக்குத் தேவை இல்லை’’ என்று கலைஞர் பேசுகிறார்.
‘‘என்னைக் கைது செய்’’ என்று பெரியார் என்னிடம் கூறியபோது கண்ணீர் கசிந்து சொன்னேன்.
‘‘உங்களைக் கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் நான் ஆட்சிப் பொறுப்பில் இருக்க மாட்டேன்’’
‘‘தந்தை பெரியார் அவர்கள் நம்மை விட்டு என்றும் பிரிய மாட்டார்கள்; அவர் நம் ரத்தத்தின் ரத்தம். உணர்ச்சிகளின் உணர்ச்சி; நரம்பின் நரம்பு; நம் மூச்சுக் காற்று; அவரைப் பிரிக்க முடியாது’’ – கலைஞரின் இத்தகைய வரிகளைப் படிக்கும்போது எவரும் உணர்ச்சி வயப்படாமல் இருக்க முடியாது! அவர் பெரியாரின் பாசறையில் வார்த்தெடுக்கப்பட்ட போர்வாள் ஆயிற்றே!
சென்னைப் பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் நினைவு அறக்கட்டளை நிகழ்ச்சியில் இனமானப் பேராசிரியர் அன்பழகனார் ஆற்றிய உரை மலரில் இடம் பெற்றுள்ளது. ‘‘நெருக்கடிகள் இருக்கலாம். துன்பங்கள் இருக்கலாம்; தொல்லைகள் இருக்கலாம்; அரசியலில் தோல்விகள் இருக்கலாம்; ஆனால் தமிழன் உயர்ந்து கொண்டிருக்கிறான். இந்த உயர்வுக்குக் காரணம் தந்தை பெரியார்! பெரியாரை எதிர்த்துப் பேசி இருக்கலாம்; கண்டித்திருக்கலாம்; அரசியலில் நிற்க வேண்டிய இடம் மாறுபட்டிருக்கலாம்; ஆனால் அந்தப் பெரியார் இல்லாவிட்டால் இந்த அமைச்சரவை வந்திருக்காது. அதைத்தான் அண்ணா அவர்கள் சொன்னார்கள் – இந்த அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை!
அண்ணா சொன்ன அடிப்படை, ‘தமிழர்கள் என்றால்… அய்யா இல்லை என்றால் யாரும் இல்லை என்று பொருள்’ என்று சொன்னார். தந்தை பெரியார் அவர்கள் ஊட்டிய அந்த சுயமரியாதை உணர்வு, நீ யாருக்கும் தாழ்ந்தவன் அல்ல; நீ அடிமை அல்ல; உன்னைவிட உயர்ந்தவன் என்று சொல்வதற்குக் கூடத் தகுதி கிடையாது; பிறவியினாலே உன்னைவிட உயர்ந்தவன் எவனும் இல்லை; எவராக இருந்தாலும் அவர் மனிதர்தான்’’ என்று சுயமரியாதை இயக்கத்தின் பணிகளைப் பாராட்டுகிறார் பேராசிரியர்.
‘மானமிகு சுயமரியாதைக்காரரை நமக்கு வழங்கிய பெரியார் இயக்கத்தின் நூற்றாண்டு’ எனும் தலைப்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்அவர்கள், ‘இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் சிறை சென்ற பெரியாரை நீதிக்கட்சி, தனது தலைவராகத் தேர்ந்தெடுத்தது; பெரியார் தாமாக எந்தப் பதவியையும் தேடிச் செல்லவில்லை; தன்னைத் தேடி வந்த பதவிகள் அனைத்தையும் அவர் ஏற்றுக் கொள்ளவுமில்லை, தான் மேற்கொள்ளும் கடுமையான சமுதாயச் சீர்திருத்தப் பணிக்குப் பயன்படக் கூடியவற்றை மட்டுமே அவர் ஏற்றுக் கொண்டார்’ என்று மாட்சிமை மிக்க தலைமையை மாண்புமிகு முதலமைச்சர் அருமையாகப் படம் பிடித்துள்ளார்.
திருவையாறு இசைவிழா மேடையில் வெளிப்பட்ட ஜாதிப் பாகுபாட்டைக் கண்டித்து, ‘தீட்டாயிடுத்து’ என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க கலைஞரின் கட்டுரையை பெரியார் பாராட்டி மகிழ்ந்ததையும் முதலமைச்சர் குறிப்பிட்டு வரலாற்றை நமக்கு நினைவூட்டுகிறார். சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைக் கலைஞர் சட்டமாக்கியதையும் முதலமைச்சர் சுட்டிக் காட்டுகிறார்.
திராவிடர் இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு அவர்கள், சுயமரியாதை இயக்க ஏடுகளைக் கால முறைப்படி ஆய்வுக் கண்ணோட்டத்தில் அடுக்கி விளக்கி உரைத்திருப்பது இளம் ஆய்வாளர்களுக்குப் பெரிதும் வழிகாட்டி உதவுவதாகும். ‘குடிஅரசு’ ஏட்டைப் புரட்டிக் கொண்டே வந்தால் தமிழ்நாட்டின் வரலாற்றைத் தெரிந்து கொள்ளலாம் என்பது எவ்வளவு சிறப்புக்குரியது!
குடிஅரசு, புரட்சி, ரிவோல்ட், நீதிக்கட்சி ஏடாக விளங்கிய திராவிடன், பகுத்தறிவு, விடுதலை, ஜஸ்டிசைட் முதலான ஏடுகள் தந்தை பெரியாரால் நடத்தப்பட்டன. இவை எதிர்கொண்ட போராட்டங்கள், இவற்றின் எழுச்சி, தொய்வு முதலானவற்றைக் காலக் குறிப்போடு ஆய்வாளர் க. திருநாவுக்கரசு அவர்கள் குறித்திருப்பது ஆய்வுலகுக்கு அவர் அளித்த கொடையாகும். தமிழர் வாழ்வோடு இணைந்த விடுதலையின் பங்களிப்பு நெடியது; கோவைச் சிறையில் இதழ் தொடங்குவதுபற்றித் தங்கப் பெருமாள் பிள்ளையுடன் பெரியார் கலந்துரையாடிய காலத்திலிருந்து, மேலே குறிப்பிட்ட ஏடுகளின் ஆசிரியர்களாக இருந்தவர்கள், பொறுப்பாசிரியர்கள், பதிப்பாளர்கள், கருத்தாளர்கள், வெளியீட்டாளர்கள், இவர்கள் எல்லோரும் எதனையும் எதிர்நோக்கவும், தாங்கிக் கொள்ளவும் மனப்பக்குவம் பெற்றவர்கள். அறிவூறும் மணற்கேணிகள்! அந்த அறிவு நீர், தாகத்தைப் போக்கிச் ‘சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு’ எனும் உன்னத வாழ்நெறியைப் படைக்க இவ்வேடுகள் உதவின; உதவியும் வருகின்றன என்று திருநாவுக்கரசர் முடித்திருப்பது நம் முன்னோர்களின் ஈகத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. மேலும் திராவிடர் இயக்க ஏடுகள் சிலவற்றை அவர் பட்டியலிட்டுக் காட்டியிருப்பது அருமை! இக்கட்டுரையை விரிவுபடுத்தி ஒரு தனி நூலாக வெளியிட வேண்டும் என்று ஆய்வாளர் க. திருநாவுக்கரசு அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
‘சுயமரியாதை இயக்கத்தின் தாய்’ என்று போற்றப்படும் அன்னை நாகம்மையாரைப் பற்றிப் பேராசிரியர் மங்களமுருகேசன்,
‘வந்தவருக்கெல்லாம் வடித்துக் கொட்டியவர்;
சொந்தப் பணத்தைச் செலவழித்துச் சமூகநீதிக்கு
உழைத்த தாய்; மன்னர்கள் வந்தாலும் காந்தியார்
வந்தாலும் சமைத்துப் போட்ட பெண்மணி; வைக்கம்
போராட்டத்தில் போராளிகள் பசித்திருக்கக்
கூடாதென்று மடியேந்தி ‘ஒருபடி அரிசி போடு’
என்று பிச்சை எடுத்துச் சோறு போட்டவர்;
தாலியைப் புனிதமாகக் கருதிய காலத்தில் தாலி
கட்டாத புரட்சித் திருமணத்தைத் தந்தை பெரியாருக்கு
முன்பே நடத்திக் காட்டியவர்; கள்ளுக்கடை
மறியலை முன்னின்று நடத்தியவர்; அகில இந்திய
காங்கிரஸ் கமிட்டியின் முதல் பெண் உறுப்பினர்’’
என்று வரிசையாக அடுக்கிக் கொண்டே போகிறார். சங்க இலக்கியப் பாடல்களைப் படிப்பதைப் போன்ற உணர்வு மங்களமுருகேசன் கட்டுரையைப் படிக்கும்போது ஏற்படுகின்றது.
‘எங்கள் கல்விக்கு எத்தனைத் தடைகள்’எனும் கட்டுரை கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை பார்ப்பனரல்லாத மக்களின் கல்விக்குப் போடப்பட்டிருந்த தடைகளை வரலாற்று முறைப்படி விளக்குகிறது.
தமிழ்நாடு வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத் திய சுயமரியாதை இயக்கம் சாதித்த சாதனைகளை டாக்டர் நம். சீனிவாசன் கட்டுரை விளக்குகிறது.
‘இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் பெயருக் குப் பின்னால் ஜாதி இணைந்திருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இந்த முறையை அடியோடு ஒழித்துக் கட்டியது சுயமரியாதை இயக்கம்; சுயமரியாதை இயக்கத்தால் பெண்களுக்குக் கல்வி கிடைத்தது; சொத்தில் பங்கு கிடைத்தது; குழந்தைத் திருமணங்கள் தடை செய்யப்பட்டன. கைம்பெண் மறுமணம், ஜாதி மறுப்புத் திருமணம், சுயமரியாதைத் திருமணங்கள் பல்கிப் பெருகின. தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. இந்தியை எதிர்த்துச் சுயமரியாதை இயக்கம் நடத்திய போராட்டத்தால் இருமொழிக் கொள்கை தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்தது.
‘‘சுயமரியாதை இயக்கம் தொடக்கத்திலிருந்தே நீதிக்கட்சியை ஆதரித்து வந்தது. ‘இவர்களை விட்டால் நீதிக்கட்சியின் பெயர் சொல்வதற்குக்கூட நாட்டில் வேறெவரும் இல்லை. தந்தை பெரியார் அவர்கள் யாருடைய தூண்டுதலும் இல்லாமல் தாமே தனியாகத் தம் தோழர்களுடன் நீதிக்கட்சியின் சார்பாகத் தமிழ்நாடு முழுமையும் பயணம் செய்து சொற்பொழிவாற்றித் தமிழ் மக்களைத் தட்டியெழுப்பினார் என்று அரச வயவர் முத்தையா (செட்டியார்) கூறுவதிலிருந்து நீதிக்கட்சியைக் காப்பாற்றுவதில் பெரியார் எடுத்துக் கொண்ட பெரு முயற்சி புலனாகிறது’’ என்கிறார் சாமி. சிதம்பரனார்.
1938ஆம் ஆண்டு டிசம்பரில் சென்னையில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் பெரியார் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது பெரியார் பெல்லாரிச் சிறையில்! நீதிக்கட்சியின் வரலாற்றில் இதுவே தலைசிறந்த மாநாடு என்கிறார் சாமி. சிதம்பரானார். சர் ஏ.டி. பன்னீர்செல்வம் தனக்குப் போடப்பட்ட மாலையைப் பெரியார் உருவச் சிலையின் பாதங்களில் வைத்தார். இதைப் பார்த்த அனைவரும் கண்ணீர் சிந்தினர். பின்னர் மாநாட்டில் கூடியிருந்த மக்கள் அனைவரும் எழுந்து நின்று,
‘பெரியாரே எங்கள் மாபெருந் தலைவர்’ என்று கடலோசை பின்னடைய ஒரே குரலில் முழக்கமிட்டனர். பின்னர், ‘எங்கள் மாபெரும் தலைவரே! உங்கள் உடல் சிறைப்படுத்தப்பட்டிருந்தாலும் உங்கள் வீரத் திரு உருவத்தின் முன் நாங்கள் அனைவரும் எழுந்து நின்று ஒன்றுபட்டிருக்கிறோம். உங்கள் தலைமையில் நாங்கள் அனைவரும் சொல்வழி நின்று கட்சிவளர, மக்கள் வாழ நோக்கம் நிறைவேற ஓயாது உழைத்து வெற்றி பெறுவோம் என உறுதி கூறுகிறோம்’’ என்று உறுதிமொழி எடுத்துக் கொண்ட காட்சியைச் சாமி சிதம்பரனார், ‘தந்தை பெரியார் நீதிக்கட்சித் தலைவரானது எப்படி?’ என்ற கட்டுரையில் உளமுருக எழுதுகிறார்.
வைக்கம் அறப்போர் குறித்துப் பெரியாருக்கும் காந்தியாருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்களை முனைவர்
திருநீலகண்டன் விளக்குகிறார். வைக்கம் போராட்டத்தில் ‘கிறித்துவர்களும், சீக்கியர்களும், முகமதியரும் கலந்து கொள்ளக் கூடாது’ என்றார் காந்தியார். ஆனால் ‘சமூகக் கொடுமைகளை ஒழிப்ப தற்காக அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்’ என்றார் பெரியார். வருணாசிரமக் கொள்கையிலும் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையும் பேரா. திருநீலகண்டன் விளக்குகிறார்.
‘குடிஅரசு’ இதழ் தொடங்கப்படுவதற்கு முன்பாகப் பெரியாரின் அரசியல் செயல்பாடுகளை காங்கிரஸ் ஆதரவு இதழ்களிலிருந்தும் பொதுவான இதழ்களிலிருந்துமே அறிய முடிகிறது என்கிறார் பழ அதியமான். பெரியாரின் முதல் நேர்காணல் ‘நாடார் குல மித்திரன்’ என்ற இதழில்தான் வெளிவந்தது எனும் கருத்து நம் கவனத்தைக் கவர்கின்றது. தனது கருத்துகள் முழுமையாக மக்களிடம் சென்று சேர்வதற்குத் தனக்கென்று ஒரு தனி இதழ் தேவை என்று கருதிய பெரியார் கோவைச் சிறையிலிருந்த போதே ‘குடிஅரசு’ ‘கொங்கு நாடு’ என்று இரண்டு பெயர்களைத் தேர்வு செய்தார். ஆனால் 1925 மே 2ஆம் நாள் ‘குடிஅரசு’ மட்டுமே முதன் முதலாக வெளிவந்தது.
‘பெரியாருக்கென்று ஒரு தனித் தாளிகை (பத்திரிகை) இல்லாமற் போனமையால் 1925க்கு முன்னர் நிகழ்ந்த பல முக்கியச் சம்பவங்கள் பற்றிய பெரியாரின் பார்வைகள் நமக்குக் கிடைக்கவில்லை. குறிப்பாகத் தமிழ் நாட்டில் சேரன்மாதேவி, குருகுலப் போராட்டத்திலும், வைக்கம் அறப்போராட்டத்திலும் பெரியாரின் எழுத்துப் பூர்வமான கருத்துகளும் அவரது அன்றாடச் செயல்பாடுகளும் நமக்குக் கிடைக்கவில்லை என்று பழ. அதியமான் குறிப்பிடுவதைப் படிக்கும்போது பல வரலாற்று நிகழ்வுகளைப் பற்றிய அய்யாவின் கருத்தை நாம் அறிய முடியாமற் போயிற்றே என்று வருந்துகிறோம். ‘குடிஅரசு’ முன்பே தொடங்கப்பட்டிருந்தால் தமிழ்ச் சமூக வரலாற்றுக்குப் பெருத்த ஆதார பலம் கிடைத்திருக்கும் என்று பழ. அதியமான் குறிப்பிடுவது முற்றிலும் உண்மையே!
சேரன் மாதேவி வைக்கம் போராட்டங்களைப் பற்றிக் கிடைக்கும் தகவல்கள் எல்லாம் சுதேச மித்திரன் வாயிலாகவே நாம் பெற்றவை அவர் காலமெல்லாம் சாடிய சுதேசமித்திரன் தருபவையே அத்தகவல்கள்! அதாவது கடும் வடிகட்டலுக்குப் பிறகு வெளிவந்த தகவல்கள் மூலமாகவே இந்த இரண்டு போராட்டங்களிலும் பெரியாரின் பங்கும், பணியும் நமக்கு ஆதாரப் பூர்வமாகக் கிடைக்கின்றன. அவற்றை வைத்து வரையப்பட்ட சித்திரமே அந்த இரு போராட்டங்களின் வரலாறுகள். அவையே இவ்வளவு பிரமாண்டமாக இருக்கிறது எனில் இந்த இரண்டு போராட்டங்களின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆற்றிய பெரியாரின் எதிர்வினைகளும் செயல்பாடுகளும் தெரியும் பட்சத்தில் அது எவ்வளவு பிரமாண்டமாக இருந்திருக்கும்! அதைக் கற்பனை செய்ய முடியவில்லை!’ என்று அதியமான் கூறுவது முற்றிலும் உண்மையே!
(தொடரும்)