அகமதாபாத், அக்.1 1,200 ஆண்டுகள் பழைமையான தர்காவும்,– மசூதியும் இடித்துத் தள்ளப்பட்டுள்ளன. அசாமைத் தொடர்ந்து குஜராத்திலும் புல்டோசர் அராஜகம் நடத்தி வரு கின்றது ஆளும் பா.ஜ.க. அரசு.
உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில், “புல்டோசர் நடவடிக்கை” என்ற பெயரில் குற்றவாளிகளின் வீடுகள் இடிக்கப்பட்டு வந்தன. அதாவது முஸ்லிம், தாழ்த்தப்பட்டோர் சிறிய குற்ற நிகழ்வுகளில் தொடர்பு இருந்ததாக தெரியவந்தால் அவர்களின் வீடுகள் உடனடியாக இடிக்கப்பட்டன. ஆனால், குற்றம் சாட்டப்பட்ட உயர் ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பா.ஜ.க. குண்டர்களின் வீடுகளை பா.ஜ.க. அரசுகள் இடிப்பதில்லை.
குற்ற நிகழ்வு பிரச்சினை மட்டு மின்றி ஆக்கிரமிப்பு என்ற பெயரில் கூட முஸ்லிம் மக்களின் வீடுகளை இடிக்கும் நிகழ்வுகள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
இந்த புல்டோசர் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலை யில், கடந்த வாரம் அசாம் பா.ஜ.க. அரசு ஆக்கிரமிப்பு இடத்தில் வீடு கட்டப்பட்டுள்ளதாக கூறி, 450க்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கியது. இதனைத் தொடர்ந்து குஜராத் பா.ஜ.க. அரசும் உச்சநீதிமன்ற எச்சரிக்கையை மீறி 1,200 ஆண்டுகள் பழைமையான தர்காவையும், மசூதியையும் இடித்து மாநிலத்தில் வகுப்புவாத வன்முறையை தூண்டிவிட்டுள்ளன.
குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ளது சோமநாத் கோவில். இந்தக் கோவிலுக்கு அருகில் 1200 ஆண்டுகள் பழைமையான தர்கா மற்றும் மசூதி, கல்லறைகள் உள்ளன. ஹிந்து கோவிலுக்கு அருகில் எப்படி தர்கா, மசூதி இருக்கலாம் என பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா கும்பல்கள் மசூதி நிர்வாகத்துடனும், அப்பகுதி முஸ்லிம் மக்களுடனும் கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கைக் கடைபிடித்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், திடீரென குஜராத் பா.ஜ.க. அரசு கடந்த 28.9.2024 அன்று காலை அரசு ஆக்கிரமிப்பு நிலம் எனக் கூறி 58 புல்டோசர்கள், 52 டிராக்டர்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி 1200 ஆண்டுகள் பழைமையான தர்கா மற்றும் மசூதியை இடித்துத் தள்ளியது. 788 மாநில, ஒன்றிய காவல்துறையினர், மூன்று காவல் கண்காணிப்பாளர்கள், நான்கு துணை காவல் கண்காணிப்பா ளர்கள், 12 காவல் ஆய்வாளர்கள், 24 துணை ஆய்வாளர்கள் தர்கா மற்றும் மசூதி இருக்கும் பகுதியான வெராவல் பகுதியில் குவிக்கப்பட்டு இருந்தனர். புல்டோசர் நடவ டிக்கைக்கு முன்பு 135 பேரை குஜராத் காவல்துறையினர் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். சிலர் வீட்டுக்காவலிலேயே வைக்கப்பட்டு இருந்த நிலையில், அவர்களை இன்று வரை காவல்துறையினர் வெளியில் நட மாட அனுமதிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
உச்சநீதிமன்ற வழக்குரைஞர் கண்டனம்
உச்சநீதிமன்ற எச்சரிக்கையை மீறி 1200 ஆண்டுகள் பழைமையான ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமான தர்காவை குஜராத் பா.ஜ.க. அரசு இடித்ததற்கு, உச்சநீதி மன்ற வழக்குரைஞர் அனஸ் தன்வீர் கண்டனம் தெரிவித்துள் ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,‘‘1200 ஆண்டுகள் பழைமையான ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக இருந்த தர்கா மற்றும் மசூதியை குஜராத் அரசு இடித்துத் தள்ளியது. குஜராத் பாஜக அரசு மசூதி மற்றும் தர்காவை மட்டும் இடித்து தள்ளவில்லை, உச்சநீதிமன்ற உத்தரவையும் வெட்கமின்றித் தகர்த்துள்ளது. இந்தச் செயல் நீதித்துறையின் அதிகாரத்தை முற்றிலும் புறக்க ணிப்பதைக் குறிக்கிறது. இத்தகைய அலட்சியப் போக்கை மன்னிக்க முடியாது” என அவர் கூறினார்.
இந்நிலையில், இந்த விமர்ச னங்களை நீக்கக் கோரி குஜராத் அரசு சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதத்திற்குப் பின் உச்சநீதிமன்ற நீதிபதிகள், “உச்சநீதி மன்றம் தெரிவித்த கருத்தில் எந்தத் தவறும் இல்லை. எனவே கருத்துகளை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு எந்தத் தகுதியும் இல்லை என்பதில் நாங்கள் திருப்தி அடைகிறோம். குறிப்பாக விமர்சனத்தை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை. எனவே, குஜராத் அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டனர்.