பெங்களூரு, செப்.30 கர்நாடகாவில் ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் சிலர் கட்டுக் கட்டாக பணத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் புதிய விளக்கம் அளித்துள்ளது.
இந்தியா முழுவதும் பல்வேறு கோவில்கள் இருக்கின்றன. திருப்பதி ஏழுமலையான் கோயில், பழனி முருகன் கோவில் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் கருநாடக மாநிலம் பெங்களூரில் காலி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
காலி என்றால் காற்று என்று அர்த்தம். வாயு தேவனின் மகனான ஆஞ்சநேயரை குறிக்கும் வகையில் காலி ஆஞ்ச நேயா கோவில் இருக்கிறது. மைசூர் செல்லும் சாலையில் அமைந் துள்ள இந்த கோவில் அப்பகுதி யில் மிகவும் பிரசித்தி பெற்றது.
தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அந்த கோவிலில் வழிபாடு செய்வார்கள். குறிப்பாக சனிக்கிழமை உள்ளிட்ட விசேட தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
இந்த நிலையில் தற்போது அந்தக் கோயிலில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. காலி ஆஞ்சநேயர் கோயிலுக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலின் வளர்ச்சிக்கு தங்களால் ஆன நிதி உதவியை வழங்கி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் உண்டியல் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் பணம் வசூல் ஆகிறது.
இந்த நிலையில் காலி ஆஞ்ச நேயர் கோவிலில் உண்டியல் எண்ணும் பணியின் போது கோவில் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் பணத்தை கட்டுக் கட்டாக திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது. கோவிலின் ஊழியர் ஒருவர் முதலில் ஒரு கட்டுப் பணத்தை எடுத்து பாக்கெட்டில் வைக்கிறார். சிறிது நேரத்தில் மீண்டும் சில கட்டு பணங்களை எடுத்து பின்னால் மறைத்துக் கொண்ட நிலையில், அர்ச்சகர் ஒருவர் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் காணிக்கை செலுத்தும் நிலையில் கோயிலில் பணிபுரிபவர்கள் பக்தர்கள் கொடுக்கும் காணிக் கையை திருடுவது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக பக்தர்கள் கூறினர். மேலும் இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் இந்த காட்சிப் பதிவு ஓராண்டுக்கு முன்பு எடுக்கப்பட்டது என விளக்கம் அளித்திருக்கிறார் காலி ஆஞ்சநேயர் கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆன ராமச்சந்திரன். இது தொடர்பாக பேசிய அவர், கோயில் பணத்தை திருடியதற்காக இரண்டு செயற்குழு உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர். மேலும் பணத்தை திருடிய இரண்டு சமையல்காரர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டதோடு அவர்கள் இருவரும் கோயி லுக்குள் நுழைய தடை விதிக்கப் பட்டிருக்கிறது.
தற்போது பணம் எண்ணும் பணியில் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் முறைகேடுகளை தடுக்க கூடுதலாக சிசிடிவி கேமராக்களையும் பொருத்தி வருகிறோம். பக்தர்களின் காணிக் கையை மோசடி செய்யவோ திருடவோ வாய்ப்பில்லை” என விளக்கம் அளித்திருக்கிறார்.