புதுடில்லி, செப்.30 உண்மையான சமத்துவம் மற்றும் நீதிக்காக அதிக பெண்கள் அரசியலுக்கு தேவைப்படுகிறார்கள், என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
அரசியல் மற்றும் முடிவு எடுப்பதில் பெண்களுக்கும் சம பங்களிப்பு வழங்கும் வகையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ‘சக்தி அபியான்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதைப்போல அரசியல் அரங்கில் பெண்களின் குரலை வலுப்படுத்தவும், சமூகத்தில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்தவும் ‘இந்திரா தோழமை அமைப்பு’ என்ற திட்டத்தையும் காங்கிரஸ் கட்சி ஏற்படுத்தி உள்ளது.
இந்த அமைப்புகள் மூலம் அதிக அளவில் பெண்கள் அரசியலில் அடியெடுத்து வைக்குமாறு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அழைப்பு விடுத்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் கூறியிருப்பதாவது:-
அரசியலில் பெண்களின் குரலை வலுப்படுத்தும் நோக்கில் ஓராண்டுக்கு முன்பு இந்திரா தோழமை அமைப்பை தொடங்கினோம். இன்று, இந்த முயற்சி பெண்களின் தலைமைத்துவத்துக்கான சக்திவாய்ந்த இயக்கமாக வளர்ந்துள்ளது. உண்மையான சமத்துவம் மற்றும் நீதிக்காக அதிக பெண்கள் அரசியலுக்கு தேவைப்படுகிறார்கள்.
எனவே, உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஆர்வமாக இருக்கும் பெண்கள் அனைவரும் ‘சக்தி அபியான்’ திட்டத்தில் சேர்ந்து பெண்களை மய்யமாகக் கொண்ட அரசியலில் தீவிர பங்கேற்பாளர்களாக மாறுங்கள். இதன் மூலம், வலுவான அடிமட்ட அமைப்புகளை உருவாக்குவதற்கும், அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் நீங்கள் பங்களிப்பீர்கள். எங்களுடன் இணைந்து இன்றே https:shaktiabhiyan.in-இல் பதிவு செய்யுங்கள். கிராமம் முதல் ஒட்டுமொத்த தேசம் வரை இணைந்தே மாற்றத்தை ஏற்படுத்துவோம்.
இவ்வாறு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.