சென்னை, செப்.29– பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் டெக்னிக்கல் பிரிவில் காலியாக உள்ள 800 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பி.இ., பிடெக், எம்சிஏ, எம்டெக், எம்எஸ்சி படித்த 25 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் அக்டோபர் 4ஆம் தேதிக்குள் பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ரூ.48,480 முதல் ரூ.93,960 வரை மாத ஊதியம் கிடைக்கும்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) சிறப்பு கேடர் அதிகாரி (SCO) பணிக்கு தகுதி யானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த வங்கிக்கு இந்தியா முழுவதும் ஏராளமான கிளைகள் உள்ளன. பாரத ஸ்டேட் வங்கி கிளைகள் இந்தியாவின் கடைக்கோடி கிராமம் முதல் நாட்டின் தலைநகரான டில்லி வரை இல்லாத ஏரியாவே இருக்காது. இதனால் பாரத ஸ்டேட் வங்கியில் வேலை கிடைத்தால் எளிதாக பணியிட மாறுதல் வாங்கி சொந்த ஊர் போக வாய்ப்பு உள்ளது என்பதால், பலரும் விரும்பும் வங்கி வேலையாக உள்ளது.
இந்த நிலையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பல்வேறு பணிகளுக்கான சிறப்பு கேடர் அதிகாரி (SCO) பணிக்கான 800 காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. “ஸ்பெஷலிஸ்ட் கேடர்” அதிகாரி காலிப்பணியிடங்கள் என்பது தொழில் நுட்பப் பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் என்பதால், நன்கு படித்த மற்றும் உரிய தகுதி உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மொத்த பணியிடங்கள்: துணை மேலாளர் (சிஸ்டம்) மற்றும் உதவி மேலாளர் (சிஸ்டம்) ஆகிய இரு உயர் அதிகாரிகள் பணியிடங்கள் மட்டும் 798 இடங்கள் உள்ளன. இதுதவிர, துணைத் தலைவர் (IT Risk) மற்றும் உதவி துணைத் தலைவர் (IT Risk) ஆகிய இரு பிரிவுகளில் தலா ஒரு பணியிடங்கள் என இரண்டு உயர் அதிகாரி பணியிடங்களையும் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் பாரத ஸ்டேட் வங்கி நிரப்ப உள்ளது.