மதுரை, செப். 29– மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கழக வழக்குரைஞரணித் துணைச் செயலாளர் நா.கணேசன் அவர்களது தோட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பறந்த நாள் விழா கழக வழக்குரைஞரணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன் அவர்களின் வழிகாட்டுதலோடு மிக சிறப்பாக 14.9.2024 அன்று நடை பெற்றது.
தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவிற்கு கழக வழக்குரைஞரணி செயலாளர் முசித்தாத்தன் தலைமை தாங்கினார். வழக்குரைஞரணித் துணைச் செயலாளர் நா.கணேசன் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் ஏராளமான வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் கழகத் தோழர்களும், சோழவந்தான் பகுதியை சேர்ந்த பெரியார் பற்றாளர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
வரவேற்புரை ஆற்றிய நா.கணேசன் தந்தை பெரியார் பிறந்த நாளை எதிர்வரும் காலங்களில் வழக்குரைஞர்கள் பெரும் திரளாக கொண்டாட வேண்டிய அவசியம் குறித்தும், பெரியாரின சமூக நீதி போராட்டம், வரலாறு குறித்தும், சங்-பரிவார் மற்றும் இந்து அமைப்பினருக்கு எதிராக ஒன்று இணைந்து ஏன் போராட வேண்டும் என்ற அவசியம் குறித்தும் உரை ஆற்றினார்.
தலைமை உரையாற்றிய சித்தார்த்தன் தமது உரையில் தந்தை பெரியார் அவர்களின் நீண்ட நெடிய தொண்டினை குறிப்பிட்டுப் பேசியதோடு, தந்தை பெரியார் குறிப்பிட்ட இடதுசாரி தமிழ் தேசியம் என்பது ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட தமிழின மக்களின் விடியலுக்கானது என்றும், திராவிட மரபு என்றால் என்ன? ஆரிய மரபு என்றால் என்ன? இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன என்பது பற்றியும், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., சங்-பரிவார் அமைப்புகள் ஆரிய பண்பாடு, கலாச்சார மரபை நிலைநிறுத்துவதற்காக தொடர்ந்து மக்களை மதரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் பிளவுபடுத்தி வருகின்றனர். திராவிட மரபு என்பது தந்தை பெரியாரின் மானமும், அறிவும் மனிதருக்கு அழகு “எல்லாருக்கும் எல்லாம், அனைவருக்கும் அனைத்தும், பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்” என்ற பெரியாரின் உயரிய தத்துவத்தை அடிப்படையாக கொண்டதுதான் திராவிட மரபு. அதனால் வழக்குரைஞரான நாம் திராவிட மரபான தந்தை பெரியாரின் உயரிய கொள்கைகளையும், இலட்சியங்களையும் உயர்த்தி பிடிக்க முன்வரவேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அதன்பின் பேசிய தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம் இன்றைய தினம் தந்தை பெரியாரின் கொள்கைகளும், கோட்பாடுகளும் உலகளாவிய அளவில் செல்வதற்கு தமிழர் தலைவர் அவர்களின் ஓய்வு இல்லாத உழைப்பே முக்கிய காரணம். தமிழர் தலைவர் தனது 9 வயதில் தந்தை பெரியாரின் கொள்கைகளைச் சொல்லி பொது வாழ்விற்கு வந்து தந்தை பெரியார் மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பின்பும் அவர் விட்டு சென்ற கொள்கை, கோட்பாடுகளை அவர் போட்டுச் சென்ற பாதையில் எவ்வித சலனங்களுக்கும் ஆளாகாமல் வெற்றிக்கரமாக நிறைவேற்றுகிறார். அவரது உடல் நலத்தையும் பாராமல் தமிழ்நாடு மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் தந்தை பெரியாரின் கொள்கைகளை தொடர்ந்து பரப்பி வருகின்றார். இன்றயை தினம் அவரது கொள்கைகள், இளைஞர்களின் மத்தியில் மட்டுமில்லாமல் எங்கும் பரவி, நிலைத்து நிற்பதற்குக் காரணம், தமிழர் தலைவர் அவர்களின் தளராத உழைப்பே காரணம் என்று பேசினார்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வா.நேரு தந்தை பெரியாரின் கொள்கையில் அடிப்படையானது. ஜாதி ஒழிப்பும், பெண்ணடிமை ஒழிப்பும்தான். அதற்குத் தடையாக இருக்கக் கூடிய எதையும் தந்தை பெரியார் எதிர்த்து ஒழிக்கத் தயங்கியதே இல்லை. அந்த அடிப்படையில் தான் தந்தை பெரியார் புராண இதிகாச, இலக்கியம், காப்பியங்கள் என எதிலும் இருக்கின்ற பெண்ணடிமை தனத்தையும், ஜாதிய பாகுபாட்டையும் தொடர்ந்து எதிர்த்துப் போராடினார்கள். அவர் கொண்ட கொள்கையில் எவ்வித சமரசத்திற்கும் இடங்கொடுக்காமல் தனது 95 ஆண்டு காலம் வரை போராடி தந்தை பெரியார் வாழ்நாள் வெற்றியாளராகத் திகழ்ந்ததோடு, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகவும், மனித சமகத்தின் சரிபாதியாக இருக்கும் பெண் இனத்தின் உரிமைகளை மீட்பதற்கும் போராடிப் பெண்ணுரிமை போராளியாகத் திகழ்ந்தவர் என்று பேசினார்.
அதன்பின்பு வந்திருந்த அனைவருக்கும் பிரியாணியுடன், அருஞ்சுவை உணவு பரிமாறப்பட்டது. மதிய உணவு இடைவேளைக்குப் பின்பு வந்திருந்த அனைவரும் குழுவாக இருந்து படம் எடுத்து கொண்டனர். மதிய உணவு இடைவேளைக்குப் பின்பு மனித உரிமை பாதுகாப்பு மய்யத்தின் மாநில பொறுப்பாளர் வழக்குரைஞர் வாஞ்சிநாதன் தந்தை பெரியாரின் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் ஏன்? என்பதைப் பற்றியும், அதறகு பார்ப்பனர்களாலும் நீதிமன்றங்களினாலும் ஏற்பட்ட இடையூறுகள் பற்றியும், பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்ற சூழ்ச்சி அடிப்படையில் பார்ப்பனர்கள், பார்ப்பனர்களிலேயே தனி பிரிவினர், சிறப்பு பிரிவினர் என்றும் கூறி நாங்கள் மட்டும அர்ச்சகர் ஆக முடியும் என்ற தந்திரத்துடன் இன்றுவரை செயல்பட்டு வருகின்றனர். ஆகவே வழக்குரைஞர்கள் ஆகிய நாம் மிக விழிப்புடன் இருந்து தந்தை பெரியரின் சமூக நீதி கொள்கையை வென்றெடுக்க வேண்டும் என பேசினார்.
மேலும் பெரியார் பிறந்த நாள் விழாவில் பங்கு கொண்ட தோழர்கள், எழுப்பிய கேள்விகளுக்கும் விடையளித்து பேசினார்.
பெரியார் பிறந்த நாள் விழாவில் மதுரை மாவட்டத் தலைவர் முருகானந்தம், செயலாளர் சுரேஷ், உசிலம்பட்டி மாவட்டத் தலைவர் எரிமலை, செயலாளர் முத்து கருப்பன், வழக்குரைஞர்கள் செல்வம், சிறீதர், யாசின், வாசுகி சண்முகராஜா, கருப்புசாமி, கிரிபிரசாத், தம்பிதுரை, சேவியர், நாகராஜ், வினோத், வினோத்கமல், கனகராஜ், ராஜேஷ் டிஜாங்கோ, செந்தில், வெங்கடேஷ், கிருஷ்ணன், அம்பேத்குமார், சந்திரமோகன் என மொத்தம் 25 வழக்குரைஞர்களும், கழகத் தோழர்களும், பெரியார் பற்றார்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பெரியார் பிறந்த நாள் விழாவை சிறப்பித்தார்கள். கலந்து கொண்ட அனைவரும் தந்தை பெரியாரின் சீரிய தொண்டினை போற்றி வரவேற்று பேசினார்கள். வழக்குரைஞர் சிறீதர் நன்றியுரையுடன் பெரியார் பிறந்த நாள் விழா மாலை 5.30 மணிக்கு இனிதே முடிவடைந்தது.