அமெரிக்காவின் அட்லாண்டாவில் தந்தை பெரியாரின் 146ஆம் ஆண்டு பிறந்த நாள்
கொள்கை வழிக் கொண்டாட்டம்
தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளை, அட்லாண்டாவில் (ஜோர்ஜியா மாநிலம், அமெரிக்கா) உள்ள பெரியார் அம்பேத்கர் வாசிப்பு வட்டம் பெருமையுடனும் மகிழ்வுடனும் கொண்டாடியது, இந்நிகழ்வில் 30 குழந்தைகள் உள்ளிட்ட 90க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வு ஜோர்ஜியாவில் உள்ள அபலாச்சி உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்காகவும் மற்றும் மறைந்த சீதாராம் யெச்சூரி (சிபிஅய்-எம்) அவர்களுக்குமான மரியாதையுடன் தொடங்கியது.
சிறப்பு விருந்தினர்கள்
ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்து வரும் செல்வி. வெண்பாவின் பெற்றோர் மதிவாணன், பிரியவர்தினி ஆகியோர், இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள். குரலற்றவர்களின் குரலாக இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்திய வெண்பா, நம் வாழ்வில் பெரியாரின் கொள்கைகள் பற்றிய பார்வைகளைப் பகிர்ந்து கொண்டார். வெண்பாவின் கடின உழைப்பால் பெற்ற இந்த வெற்றியைப் பெருமையோடு பகிர்ந்த மதிவாணன் மற்றும் பிரியவர்தினி, அதற்குக் காரணமாகப் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பங்களிப்பையும் நினைவு கூர்ந்தது குறிப்பிடத்தக்கது. நிகழ்வின் போது வெண்பாவிற்குப் பெரியாரின் மார்பளவு சிலை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
கலை நிகழ்ச்சிகள்
நிகழ்வை மேலும் சிறப்பிக்கும் வகையில் பறை இசை நிகழ்ச்சி, குழந்தைகளின் நடனம் மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. அடக்குமுறைக்கு எதிரான வகையில் அமைக்கப்பட்டிருந்த பாடல் களுக்கான குழந்தைகளின் நடனமும், ஓங்கி ஒலித்த பறை இசையும் வந்திருந்த தோழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்தது. அதன் பின்னர் குழந்தைகள் தந்தை பெரியாரின் கொள்கைகள், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, மார்ட்டின் லூதர் கிங், ரோசா பார்க்ஸ், சூசன் பி. அந்தோணி மற்றும் சாவித்ரிபாய் பூலே போன்ற தலைவர்களைப் பற்றி உரையாடினார்கள். இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் பங்கேற்புச் சான்றிதழ் மற்றும் பெரியார் புதிர்கள் பரிசாக வழங்கப்பட்டது.
குழு கலந்தாய்வு
இந்நிகழ்வில் கலந்து கொண்ட தோழர்களுக்காக ஒரு குழு கலந்தாய்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தங்கள் வாழ்வில் பெரியார் மற்றும் அவருடைய கொள்கைகள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து தோழர்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக, ராஜ் முத்தரசன் (விஞ்ஞானி), திருமதி கற்பூரவள்ளி, திரு.ரங்கசாமி ஆகியோரின் கருத்துகள் சிறப்பாக அமைந்தது. இதில் திரு.ரங்கசாமி, இளமைப் பருவத்தில் பெரியாருடன் தனிப்பட்ட தொடர்பு கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்புப் பேச்சாளர்கள்
இதன் பின்னர், தந்தை பெரியாரின் கொள்கைகள் குறித்து தோழர்கள் பேசினார்கள்.
1. “பெண் ஏன் அடிமையானாள்” என்ற நூல் பற்றி தோழர் மிரிதுலா உரையாடினார்.
2. 31 ஆண்டுகள் சிறைவாசத்திலிருந்து தன் மகனை விடுவிக்க, திருமதி அற்புதம்மாள் நடத்திய போராட்டம் மற்றும் அவரின் வாழ்விலும் போராட்டத்திலும் பெரியாரின் கொள்கைகள் ஏற்படுத்திய மாற்றம் குறித்து தோழர் அன்பு கருத்துகளைப் பகிர்ந்தார்.
3. தோழர் கோகுல், பெரியாரின் கடவுள் மறுப்பு மற்றும் பகுத்தறிவுக் கொள்கைகள் குறித்துப் பேசினார்.
பொழுதுபோக்கு
இதன் பின் நடந்த இணைப்புகள் (Connections) விளையாட்டில் தோழர்கள் மகிழ்ச்சியாகக் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் பல நிகழ்வுகள் பெண் தோழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் சுவையான பகல் உணவுடன் மாட்டிறைச்சி கறி, சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியாக தோழர்கள் அனைவரும், தந்தை பெரியாரின் கொள்கைகளை வீரவணக்கத்துடன் முழக்கமிட்டார்கள். இந்நிகழ்வானது பெரியாரின் போர்ப்படை தளபதி அறிஞர் அண்ணாவின், 116ஆவது பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி நடைபெற்றது பொருத்தமாக அமைந்தது. நிகழ்ச்சியில் அண்ணாவிற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
எதிர்காலத் திட்டம்
அட்லாண்டாவின் வாசிப்பு வட்டம் வாயிலாக, பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கிணைக்கத் தோழர்களிடம் ஆலோசனைகள் பெறப்பட்டது. நூல் பகிர்வு, சமூக நீதி பற்றிய உரையாடல்கள், அறிவியலை ஊக்குவித்தல், குழந்தைகளுக்கான நிகழ்வுகள் ஆகியவற்றை அடுத்த கட்டமாக ஒருங்கிணைப்பதென்று முடிவெடுக்கப்பட்டது. அயல்நாட்டு மண்ணில் சித்தாந்த அடிப்படையில் ஒத்த கருத்துள்ளவர்கள் ஒன்று கூடி, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை நினைவு கூர்ந்தது, குழுமியிருந்த அனைத்துத் தோழர்களுக்கும் மகிழ்வைத் தந்தது. தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் இருவரின் மரபையும் கொள்கைகளையும் தொடர்ந்து போற்றுவோம்! அடக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்போம்! என்று அட்லாண்டாவில் உள்ள – பெரியார் அம்பேத்கர் வாசிப்பு வட்டத் தோழர்கள் உறுதியேற்றுள்ளனர்.