திருச்சி, செப். 27- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக மருந்தாளுநர் நாள் விழா 25.09.2024 அன்று மாலை 3 மணி யளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை வரவேற்புரையாற்றினார். இவ்விழாவின் சிறப்பு விருந்தினரும் கல்லூரியின் மேனாள் பட்டயப் படிப்பு மாணவியுமான (1990-1992) புதுக்கோட்டை அரசு மருத்துவமனையின் சிறப்புநிலை மருந்தாளுநர்
ஆர். கலைவாணி கலந்து கொண்டு மருந்தாளுநர்களின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.
அவர் தமது உரையில், மருந்துகளை கையாளும் மருந்தாளுநர்கள் என்ற பெயரை நம்முடைய தமிழ்நாட்டில் முதன்முதலில் அறிவித்தது அறிஞர் அண்ணா அவர்கள் என்றும் அதற்கான படிப்பினை துவங்கிய மாவட்டம் பெருமைக்குரிய திருச்சி என்றும் கூறினார். மேலும் முந்தைய காலங்களில் மாணவர்களுக்கு தம்முடைய கல்வி சார்ந்த அறிவினை பெறுவதற்கு ஆசிரியர்களைத் தவிர வேறு யாரும் கிடையாது. ஆனால் இன்றைய நவீன காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஊடகங்களின் மூலம் எந்தத் துறையை தேர்ந்தெடுக்கலாம், எதில் வேலைவாய்ப்புக்கள் அதிகம் என்பதனை மாணவர்கள் நன்கு அறிந்து கொள்ள முடிகிறது. அதில் வேலைவாய்ப்புக்களில் மிகச்சிறந்த எதிர்காலம் இருக்கக்கூடிய துறை மருந்தியல் துறை என்றும் இதனை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு முதலில் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
படிக்கும் காலங்களில் தாம் ஒரு சராசரி மாணவியாக இருந்தபோதிலும் இக்கல்லூரியில் பெற்ற தந்தை பெரியார் அவர்களின் பெண்ணுரிமை சிந்தனைகளும் மனிதநேய கொள்கைகளும் பணியிடங்களில் சிறப்பாக செயல்பட உதவியாக இருந்தது. அரசு மருத்துவமனைக்கு பெரும் வேதனையோடும் வலியோடும் வரும் பொதுமக்களை மனிதநேயத்தோடும் பொறுப்புணர்வோடும் அணுகுவதால்தான் சிறப்புநிலை மருந்தாளுநர் என்ற அளவிற்கு தம்மால் உயர முடி்ந்தது என்றும் மருந்தாளுநர்கள் அரசுத்துறையில் இருந்தாலும் மற்ற எந்த துறையில் இருந்தாலும் கடமையுணர்வோடும் அர்ப்பணிப்புணர்வோடும் செயல்பட வேண்டும் என்றும் உரையாற்றினார். எந்த இடத்திலும் நமக்கான வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நம்முடைய கடமையை நாம் சரியாக செய்தால் நாம் எவருக்கும் அடிபணிய தேவையில்லை என்றும் உரையாற்றினார். ஒரு மனிதன் நோயினால் துயரடையும் போது அவருக்கு அந்நோயிலிருந்து நிவாரணத்தை அளிப்பது மருந்துகள்தான். அத்தகைய மருந்துகளை கையாளும் மருந்தாளுநர்கள் நலவாழ்வுத்துறையின் முக்கிய அங்கம் வகிப்பவர்கள் என்றும் அவர்கள் சமூக பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு அனைவருக்கும் உலக மருந்தாளுநர் நாள் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியின் நிறைவாக பட்டயப்படிப்பின் முதன்மையர் பேராசிரியர் கே. சக்திவேல் அவர்கள் நன்றியுரையாற்ற விழா இனிதே நிறைவுற்றது. முன்னதாக அனைவரும் மருந்தாளுநர்களுக்கான உறுதிமொழியினை ஏற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.