திருப்பதி பாலாஜி கோயில் லட்டு பிரசாதம் குறித்த சர்ச்சைக்கு மத்தியில், நாடு முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை விடுவிக்க வலியுறுத்தி விசுவ ஹிந்து பரிஷத் மாபெரும் ஹிந்து ஏக்தா தர்ணாவை (ஹிந்து ஒற்றுமைப் போராட்டம்) அறிவித்துள்ளது
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஊழல் நடப்பதாக குற்றஞ்சாட்டிய வி.ஹெச்.பி. அரசுக் கட்டுப்பாட்டில் கோயில்கள் இருப்பது முசுலிம் படையெடுப்பாளர்கள் மற்றும் காலனித்துவ ஆங்கிலேயர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது என்றும் கூறியுள்ளது.
வி.ஹெச்.பி இணைப் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், ‘‘அரசானது கோயில் செல்வங்களைக் கொள்ளையடிக்கிறது. ஆட்சியில் இடம் பெற முடியாத அரசியல்வாதிகளுக்கு இடமளிக்க கோயில்களைப் பயன்படுத்துகின்றனர்’’ என்று கூறியுள்ளார்.
பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாகக் கூறப்படுவது “ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தையும் கோபப்படுத்தியது” என்றும், ‘‘இது போன்ற முறைகேடு நிகழ்வு கேரளாவின் சபரிமலை உள்பட பல கோவில்களில் இருந்து வருகிறது. இது இந்து சமுதாயத்தின் உணர்வுகளை காயப்படுத்துவதாகும்” என்கிறார். வி.ெஹச்.பி.யின் இணைப் பொதுச் செயலாளர்.
‘‘கோவில்களை அரசாங்க கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து மக்களிடம் வழங்க வேண்டும். இதுவே பிரச்சினைக்கான ஒரே நிலையான தீர்வு’’ என்று கூறினார். ‘‘கோயில்களை அரசு நடத்துவது அரசியலமைப்புக்கு எதிரானது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
‘‘முன்பு முசுலீம் படையெடுப்பாளர்கள் கோவில்களை அழித்து கொள்ளையடித்தனர். அதே சமயம் ஆங்கிலேயர்கள் புத்திசாலிகள், அவர்கள் கோவில்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தனர். இதன் மூலம் கோவில்களைக் கொள்ளையடிக்க ஒரு நிறுவன அமைப்பை நிறுவினர்.
சுதந்திரம் கிடைத்த போதிலும் கெட்ட வாய்ப்பாக நமது அரசியல்வாதிகளால் இந்தக் காலனித்துவ மனநிலையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முடியவில்லை’’ என்றார்.
தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் மட்டும் 400க்கும் மேற்பட்ட கோயில்கள் இருப்பதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் இந்தக் கோயில்களில் 50,000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
யார் இந்த வி.ெஹச்.பி.? சிறுபான்மை மக்களின் உயிர்களைக் குடிக்க கொலைக் கருவிகளை வெளிப்படையாக வழங்கி வருகிறது இந்த அமைப்பு. சங்பரிவார்க் கூட்டத்தின் சாமியார்கள் அமைப்பு என்று கூறப்படுகிறது.
திரிசூலத்தில் ஒரு சூலம் இசுலாமியர்களையும், இன்னொரு சூலம் கிறித்தவர்களையும், மற்றொரு சூலம் மதச் சார்பின்மைப் பேசுபவர்களையும் தீர்த்துக் கட்டும் என்று வெறித்தனமாக வெளிப்படையாகப் பேசியும், திரிசூலங்களை வழங்கியும் வருகிறது.
இந்துக் கோயில்கள் அரசு வசம் ஆவதற்கான காரணம் என்ன? கோயில்கள் பார்ப்பனர்களின் சுரண்டல் கூடமாகவும், கோயில் நிலங்களை விற்பதும் – நகைகளை ஏப்பமிடுவதும் வழமை யானதாக இருந்தது. இன்னும் சொல்லப் போனால் ஒரிஜினல் விக்ரகங்களை (அய்ம்பொன்னால் செய்யப்பட்டதுகூட உண்டு) விற்றுவிட்டு, அந்த இடத்தில் வேறு சிலைகளை (டூப்ளிகேட்) வைத்த அர்ச்சகப் பார்ப்பனர்களும் உண்டு.
சிதம்பரம் நடராஜன் கோயிலுக்குச் சொந்தமான 2000 ஏக்கர் நிலங்களை விற்று ஏப்பமிட்டுள்ளனர் கோயில் தீட்சதர்கள் – என்ற செய்தி ஊடகங்களில் (20.9.2024) சிரிப்பாய் சிரிக்கவில்லையா? சிதம்பரம் கோயில் அரசுக் கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்தானே!
வி.எச்.பி.யின் சூட்சமம் புரிகிறதா?