கண்ணுக்குத் தெரியாத கிருமிகளுடன் அன்றாடம் மனித இனம் போராடிக் கொண்டிருக்கிறது. இந்தக் கிருமிகளுக்கு எதிரான முதல் மருந்து பெனிசிலின் கண்டுபிடிக்கப்பட்டது 1928ஆம் ஆண்டில். அதைத் தொடர்ந்து கிருமிகளைக் கொல்லும் பலவித மருந்துகள் தற்போது வந்துவிட்டன. அவை ஆன்டி பயாடிக்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றைச் சமாளித்து வளரும் யுக்தியைத் தற்போது கிருமிகள் பெற்றுவிட்டன.
மருந்தின் வீரியத்தை அதிகரிக்க, அதிகரிக்கக் கிருமிகளும் வலிமை பெற்ற ‘சூப்பர்பக்ஸ்’ ஆக மாறி வருகின்றன. எனவே நேரடியாகக் கிருமிகளைத் தாக்காமல் அவற்றைச் செயலிழக்கச் செய்யக்கூடிய, அவற்றின் இனப்பெருக்கத்தைத் தடுக்கக்கூடிய மருந்துகளை உருவாக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
உதாரணமாக எசரிக்கியா கோலி எனும் பாக்டீரியா, குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான வயிற்றுப்போக்கை உருவாக்கும். இது குடலில் ஒட்டி இருந்து நோயை ஏற்படுத்தும். நாம் தரும் மருந்து குடலில் பாக்டீரியா ஒட்டாமல் தடுக்கும். இதன்மூலம் நோய் தடுக்கப்படுகிறது. அத்துடன் மருந்துக்கு எதிராகப் பாக்டீரியா வீரியம் அடைவதும் தவிர்க்கப்படுகிறது.
நார்வே, பின்லாந்து நாட்டைச் சார்ந்த ஆய்வாளர்கள் இப்படியான இரு சேர்மங்களைக் கண்டறிந்துள்ளனர். இவற்றை மருந்தாகப் பயன்படுத்தலாம். ஒரு சேர்மம் அய்ஸ்லாந்தில் வாழ்கின்ற ஒருவகை நத்தையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் T091-5. T160-2 எனும் மற்றொரு சேர்மம் நார்வேயில் வாழும் ஒரு கடற்பாசியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இவை எசரிக்கியா கோலை பாக்டீரியாவின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி, வலுவிழக்கச் செய்தன.
முக்கியமாக சாதாரண கிருமியை ‘சூப்பர்பக்ஸ்’ ஆக மாற்றும் வேலையை இவை செய்யவில்லை. இந்த ஆய்வு எதிர்காலத்தில் கிருமிகளுக்கு எதிரான மருத்துவத்தில் பெரிய மாற்றம் நிகழ்வதற்கான தொடக்கப்புள்ளியாகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.