மகளிரே முதன்மையானவர்கள்!
நான்கு நாள்கள் திட்டமிடப்பட்ட பயணத்தில், மூன்று நாள்கள் காலை உணவு தோழர்களின் இல்லத்தில் நடை பெற்றது. அங்கே இருந்த தோழர்களின் இணையர்களிடம் அவர்களின் பெயர், ஊர் போன்றவற்றை விசாரித்து அறிந்தார் ஆசிரியர். அவரவர் ஊரின் சிறப்புகள், தனக்கும், அந்த ஊருக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும் கூறிய போது அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். அதேபோல ‘‘பரபரப்பான சூழலில், பல்வேறு உணவுகளைச் சிரமத்தோடும், அன்போடும் வழங்கினீர்கள், நன்றி!’’ எனத் தலைவர் கூறியபோது மெய்சிலிர்த்துப் போனார்கள்.
“ஜப்பானில் ஈரோட்டுப் பூகம்பம்” எனும் தமது நன்றி அறிவிப்பு அறிக்கையில் கூட தோழர்களின் பெயர்களோடு, அவர்களின் வாழ்விணையர்கள் பெயரையும் இணைத்து எழுதி இருந்தார் ஆசிரியர். எல்லோருக்கும் உரிய பெரு மையும், அங்கீகாரமும் போய் சேர வேண்டும் என்கிற உயரிய எண்ணத்தில்! அதேபோல குழந்தைகளின் கல்வி, அவர்களின் எதிர்காலத் திட்டம் போன்றவற்றையும் விசாரித்து அறிந்தார். அப்படியான சூழலில் காயத்ரி – செந்தில்குமார் வீட்டிற்குச் சென்ற போது அவர்களின் மகன் கவின் அவர்களிடம் படிப்பு இல்லாமல், கூடுதலாக என்ன கற்று வருகிறீர்கள் என ஆசிரியர் கேட்டார். “மிருதங்கம் பழகி வருகிறேன்” என்றார் கவின்.
மிருதங்க கச்சேரி!
மகிழ்ந்து போன ஆசிரியர், மிருதங்கத்தை இசைக்கச் சொல்லிக் கேட்டார். சில நிமிடங்களில் அந்த இடமே அழகிய கச்சேரி மேடை ஆனது. “ஒரு பெரிய தலைவர், தம் மகனை அழைத்து, அவன் பயின்று வரும் மிருதங்கத்தை வாசிக்கச் சொல்லிக் கேட்கிறாரே”, என அவரின் அம்மா காயத்ரி நெகிழ்ந்து போனார். உடனே அருகில் இருந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா அவர்களிடம், ‘‘நீங்கள் அறிஞர் அண்ணா குறித்து ஒரு பாடல் பாடுங்கள், பிரின்சு, தந்தை பெரியார் குறித்து ஒரு பாடல் பாடட்டும், கவின் மிருதங்கம் இசைத்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கட்டும்’’ எனக் கூறி, ஒரு பத்து நிமிடத்தில் சூழலையே அழகாக்கி விட்டார் ஆசிரியர்!
ஆசிரியரின் கலகலப்பான நகைச்சுவைகள்!
அதேபோல திமுக மாநிலங்களவை உறுப்பினர்
எம்.எம்.அப்துல்லா, அவரின் வாழ்விணையர், ஜப்பான் வாழ் தோழர்கள் என அனைவருமே வியந்த ஒன்றும் இந்த நான்கு நாள்களில் இருந்தது. ஆசிரியருடன் நடைபெற்ற உரையாடலில் அரிய பல நினைவுகள், வரலாற்றுக் குறிப் புகள், சாதனை நிகழ்வுகள், சரித்திரம் படைத்த தலைவர்கள் என எண்ணற்ற மலரும் நினைவுகளை ஆசிரியர் பகிர்ந்து கொண்டார். இயல்பாக உரையாடும் போது ஆசிரியரின் பேச்சில் நகைச்சுவை அதிகமாக இருக்கும். அந்த அனுபவத்தை அவர்கள் அனைவரும் பெற்றனர்.
இந்த ஜப்பான் பயணத்தின் நான்கு நாள்கள் திட்டமிடல் தவிர, ஆசிரியரின் வழக்கமான எழுத்துப் பணிகள், வாசிப்புகள் என அதுவும் நள்ளிரவு கடந்து போனது!
பெரியார் – அண்ணா விழாக்கள்!
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் 15.09.2024 அன்று, ஃபுனாபொரி டவர் ஹால், இரண்டாவது மாடியில், Heian எனும் அரங்கில் தொடங்கியது. ‘அவர்தாம் பெரியார்’, ‘காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்’ ஆகிய பாடல்களுக்குக் கவின் செந்தில்குமார் மிருதங்கம் இசைக்க நிகழ்ச்சி தொடங்கியது. ஜப்பான் மகளிர் குரோகவா சான் தம் குழுவினருடன் மிகச் சிறப்பாகப் பறை இசைத்தார். தோழர் வி.குன்றாளன் வரவேற்புரை நல்கினார். ‘மெல்லிசை மொட்டுகள்’ குழுவினர் குழுப்பாடல் பாடினர். சிவ வருண்யா மற்றும் நிருத்யா நாட்டியப்பள்ளி மாணவர்கள் குழு நடனமும், கருவி இசையும் வாசித்தனர்.
‘மறக்க முடியாத ஜப்பான் நினைவுகள்’ எனும் தலைப்பில் வி.சி.வில்வம், ‘தமிழ்நாட்டில் உருவாகி வரும் பெரியார் உலகம்’ குறித்து ச.பிரின்சு என்னாரெசு பெரியார் பேசினர். தொடர்ந்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா அவர்களைக் குறித்து தோழர் ச.கமலக்கண்ணன், ஆசிரியர் அவர்களைக் குறித்து தோழர் இரா.செந்தில்குமார் அறிமுகவுரை ஆற்றினர்.
ஆசிரியர் கி.வீரமணி –- எம்.எம்.அப்துல்லா உரைகள்!
நிகழ்வில் “அண்ணா கண்ட கனவு” எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றிய எம்.எம்.அப்துல்லா அவர்கள், ‘‘அறிஞர் அண்ணாவிற்கு என்று தனி கனவு எதுவும் இருந்ததில்லை; பெரியாரின் கனவு தான், அண்ணாவின் கனவு! அதை நிறைவேற்றும் பொருட்டே அவர் பாடுபட்டார், வெற்றியும் பெற்றார்”, எனப் பல்வேறு வரலாற்றுத் தகவல்களோடு உருக்கமாகப் பேசினார்.
“பெரியாரின் சமூகப் பார்வை” எனும் தலைப்பில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், “இந்தப் பிறந்தநாள் விழாக்கள் என்பது வேருக்கு விழுதுகள் எடுக்கும் நன்றிப் பெருவிழா”, என முத்தாய்ப்பாய் குறிப்பிட்டார். பெரியாரின் உழைப்பால் விளைந்த ஜப்பான் வாழ் தோழர்களை வெகுவாகப் பாராட்டினார். ஜாதிச் சங் கங்களை உருவாக்காமல், சாதிக்கும் சங்கங்களை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மகளிரின் சிறப்பு குறித்தும், பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் எவ்வளவு மகத்தானவை என்பதையும் நினைவு கூர்ந்தார். பழைமையை உரமாக்கி, புதுமையை உணவாக்குவோம்!”, எனப் பலத்த கரவொலிக்கிடையே ஆசிரியர் உரையை நிறைவு செய்தார்!
பாராட்டுப் பெற்றோர்!
2021 ஆம் ஆண்டு ‘‘பெரியார் வாழ்க்கைக் குறிப்புகள்’’, ‘‘வைக்கம் போராட்டம்’’ ஆகிய இரண்டு நூல்கள் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. இந்தப் பணியைச் செய்தவர்கள் இரா.செந்தில்குமார், ச.கமலக்கண்ணன்! இந்தப் பணிக்கு இவர்களுக்கு உதவிய ஜப்பானியர் “நகானோ” அவர்களுக்கு ஆசிரியர் பாராட்டிச் சிறப்பு செய்தார்.
அதேபோல பெரியார், அண்ணா பிறந்தநாள் விழாக்கள் சிறக்க நன்கொடை வழங்கிய உகானந்த் (சன்வெல் சொல்யூஷன்ஸ்), மோகன், ராஜேஷ் (நெக்ஸ்ஜென்), சுரேஷ் (கேரளா உணவகம்), சரவணன் (சரண் கார்ப்பரேஷன்), நடராஜன் (சோவாப்ளூ ஜப்பான்), ஜெயசீலன் (டெக் கான்சாஃப்ட்). கே.கே.செந்தில்குமார் (சங்கம் சாஃப்ட்வேர்),
இரா. செந்தில்குமார் (சில்வர்ஸ்கை ஜப்பான்), கோவிந்தபாசம் (ஜப்பான் தமிழ் ஸ்போர்ட்ஸ் கிளப்), குறிஞ்சி செல்வன்
(சிறீ பாலாஜி தென்னிந்திய உணவகம்), கண்ணன் (ருசி இந்திய பிரியாணி உணவகம்) ஆகியோரும் மேடையேற்றி சிறப்பு செய்யப்பட்டனர். இறுதியில் நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஒரு நிகழ்வும் நடந்தேறியது. ஆம்! குடும்பம், குடும்பமாக ஆசிரியருடன் படம் எடுத்துக் கொண்டனர். சற்றொப்ப 1 மணி நேரத்தைக் கடந்துபோனது அது! நிறைவாக மோ.விஜய் நன்றி கூறினார்.
விழா ஒருங்கிணைப்பாளர்கள் வி.குன்றாளன்,
இரா.செந்தில்குமார், ச.கமலக்கண்ணன், அ.கோவிந்தபாசம், க.சரவணன், வெ.சீனிவாசன், கு.பிரதிக், மோ.விஜய், ஜெ.ஆண்ட்ரூ, கணேஷ் ஏழுமலை, வி.ராஜா, இரா.அய்ஸ் வர்யாதேவி ஆகியோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
தோமோ அரிகாத்தோ குசைமாஸ்!
நான்கு நாள்கள் போனதே தெரியவில்லை என்பது ஒருபுறம்; நான்கு நாள்களில் நான்காண்டுகள் பழகிய தோழமை உணர்வு மறுபுறம்! மொத்த அன்பையும் அனுபவித்த நிலையில், தோழர்கள் சூழ் பட்டாளம் 16.09.2024 இரவு ஜப்பான், நரிட்டா விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தார்கள்! ஆசிரியர் எவ்வளவு பெரிய தலைவர் என்பதை அவர்கள் அறிவார்கள். எனினும் ஒரு குழந்தையைப் போல அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் சொல்வது ஒன்றே ஒன்றுதான்! “பெரியார்” இளைஞர்கள் ஜப்பான் சென்று நீண்ட காலங்கள் ஆகிவிட்டது. எனினும் இந்த நான்கு நாட்கள் ஜப்பானே பெரியார் மயம் என்றுதான் சொல்ல வேண்டும்! நன்றி தோழர்களே! ஜப்பானிய மொழியிலும் எங்கள் உணர்ச்சிப் பெருக்கை வெளிப்படுத்துகிறோம்!
“மின்னாசான் கோன்னிச்சுவா! ஹஜ்மெமஸ்தே! தோமோ அரிகாத்தோ குசைமாஸ்!”