முதலீட்டுக்கு மேலும் பல அமெரிக்க நிறுவனங்கள் தயார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

2 Min Read

சென்னை, செப்.25- முதலீட்டுக்கு மேலும் பல அமெரிக்க நிறுவ னங்கள் தயாராக இருப் பதாக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா்.

முதலமைச்சா் மு.க.ஸ்டாலினின் அமெரிக்கப் பயணம் குறித்து, எக்ஸ் தளத்தில் அமைச்சா் ராஜா வெளியிட்ட பதிவு:
அமெரிக்க பயணத்தின் மூலமாக கிடைத்த முதலீடுகளும், அதன் வழியே கிடைக்கும் வேலைவாய்ப்புகளும் ஒரு தொடக்கம் மட்டும்தான். இந்தப் பயணத்தின்போது முதலீடுகள் செய்ய முன்வந்த அனைவருடனும் நாம் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடவில்லை. யாா் யாா் உறுதியாகப் பணியைத் தொடங்குவாா்கள் என்பதைப் பல வகைகளில் உறுதி செய்து, அதன்மூலம் தமிழ்நாட்டுக்குப் பரவலாக்கப்பட்ட வளா்ச்சி உறுதி செய்யப்படுமா என்பதையும் கவனத்தில் கொண்டுதான் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

முதலீடாக மாறும் உறுதித்தன்மை கொண்ட நிறுவனங்களுடன் மட்டுமே ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் பல நிறுவனங்கள் முதலீடுகள் செய்யத் தயாராக இருந்த நிலையிலும் அவற்றின் உறுதித்தன்மை குறித்த கூடுதல் விவரங்களைப் பெற்று அதன்பிறகு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் போடலாம் எனப் பரிசீலனையில் வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க பயணத்தில் சான்ஃபிரான்சிஸ்கோ, சிகாகோவில் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாட்டில் 100 சதவீதம் முதலீடாக மாறி, மாநிலத்தில் பரவலான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவது நிச்சயம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

சென்னையில் செப்டம்பர் 27ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

சென்னை, செப். 25- சென்னையில், அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் சார்பில் வரும் செப்.27ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மய்யங்களிலும், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர் களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.

அந்த வகையில், சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யங்களும் இணைந்து, வரும் செப். 27ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன. கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங் கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, அய்.டி.அய் , டிப்ளமா, கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் பங்கேற்கலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.

இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடும் இளைஞர்களும் இம்முகாமில் பங்கேற்க எந்தவித கட்டணமும் செலுத்தத் தேவை இல்லை.

இம்முகாமில் பங்கேற்கும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணைய தளத்தில் www.tnprivatejobs.tn.gov.in பதிவு செய்ய வேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம், என்று அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *