சென்னை, செப்.25- வள்ளுவர் கோட்டம் புதுப்பிப்பு ஜனவரி மாதம் இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதுப்பிப்பு பணிகள் மற்றும் நவீன முறையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை, நுங்கம்பாக்கம் பகுதி யில் உள்ள அய்யன் வள்ளுவர் கோட்டத் தினை புனரமைப்பதற்காக கடந்த நிதி யாண்டில் முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டதற்கிணங்க பராமரிப்புப் பணிகள் சிறப்பாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் ஜனவரி மாதம் இறுதியில், இந்தப் பணிகள் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கலைஞர் முதலமைச்சராக இருந்த போது,வள்ளுவருக்காக ஏறத்தாழ 1600 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் எழுப்பப் பட்ட ஒரு பிரமாண்டமான நினைவு அரங்கம்தான் வள்ளுவர் கோட்டம். அந்த வகையில், கம்பீரமாக சென்னையின் அடையாளமாக திகழும் வகையில் அது மீண்டும் புதுப்பிக்கப்படயிருக்கிறது.
ஏறத்தாழ சுமார் ரூ.80 கோடி மதிப்பில், இந்த பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிவுறுகிற போது, ஒரு புதிய பொலிவோடு திருவள்ளு வர் கோட்டம் மக்களின் விருப்பமான இடமாக நிச்சயம் காட்சியளிக்கும். காட்சியளிப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு விதங்களில் இது மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். இந்தப் பணிகள் திட்டமிட்டபடி, ஜனவரி மாத இறுதிக்குள் முடிக்கப்படும். பழைய வள்ளுவர் கோட் டத்தை விட மாறுபட்ட அளவில் திருக்குறளைப் பற்றிய ஆய்வு மய்யம் அமைக்கப்பட இருக்கிறது. இதுவரை வாகனங்கள் தரைதளத்தில் மட்டும் நிறுத்தப் பட்டது.
மீதியிருக்கக்கூடிய வாகனங்கள் நிகழ்ச்சி நடைபெறும் போது சாலைப்பகுதியில் நிறுத்தப்படும் சூழ்நிலை இருந்தது. இப்போது ஏறத்தாழ சுமார் 180 நான்கு சக்கர வாகனங்கள் உள்ளே நிறுத்துவதற்காக தனியாக அரங்கம் அமைக்கப்படுகிறது. இரு சக்கர வாகனங்களும் நிறுத்துவதற்கான வசதிகள் இருக்கிறது. வள்ளுவர் கோட்டம் சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பில் தான் இருக் கிறது.
எனவே, இருக்கின்ற இடத்தை வைத்து அதிக மக்கள் வந்து செல்லும் வகையிலும், பயன்படுத்தும் வகையிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், புதுப்பொலிவோடு, கலை நயத்தோடு அமைக்கப்பட்டு வருகின்றது.
அதேபோல, பொதுமக்கள் தேநீர் அருந்துவதற்கான கடைகள் எல்லாம் உருவாக்கப்பட இருக்கிறது. இன்னும் கிடைக்கக்கூடிய ஆலோசனைகளை பெற்று பொதுமக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு மய்யமாக அமையக் கூடிய வகையில் நிச்சயமாக உருவாக்கப்படும். லேசர் ஷோ நடத்தப்பட இருக்கிறது. அதேநேரத்தில், இன்னும் பணிகள் நடைபெறும்போது கிடைக்கக்கூடிய நவீன கட்டமைப்புகளுடன் பொதுமக்களை கவரும் வகையில் வள்ளுவர் கோட்டத்தை ஏற்படுத்துவதற்கு நிச்சயமாக துறை தயாராக இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.
இந்த ஆய்வின் போது, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வைத்திநாதன் மற்றும் செய்தித்துறை, பொதுப்பணித் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.