சென்னை, செப்.25- கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 21 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் முனைவர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.
அறிவியல் அறிஞர் விருது
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில், ‘தமிழ்நாடு அறிவியல் அறிஞர் விருதுகள்’ வழங்கும் நிகழ்ச்சி சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் (23.9.2024)நடைபெற்றது.
இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று 43 பேருக்கு விருதுகளை வழங்கி பேசியதாவது:-
21 கல்லூரிகள் திறப்பு
மாணவர்கள் அறிவியல் துறை மட்டுமல்லாது, கலைப் பாடப்பிரிவிலும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஆராய்ச்சி மனப் பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 21 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
கல்வியை வளர்க்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு ரூ.1,000 மாதந்தோறும் வழங்கப்படுகிறது. தற்போது, ‘உயர்வுக்கு படி’ திட்டத்தின் வாயிலாக இடைநிற்றலை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
-இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் முனைவர் க.பொன்முடி செய்தியாளர் களிடம் கூறுகையில்,
“துணைவேந்தர் பதவி காலியாக உள்ளதால் நடைபெறாமல் இருந்த சென்னை பல்கலைக்கழகத்தின் பட்ட மளிப்பு விழா இன்று (24.9.2024) நடைபெ றுகிறது. இதில், நானும், ஆளுநரும் பங்கேற்போம். பல்கலைக் கழகத்தின் நிர்வாகக்குழு ஒருங்கிணைப்பாளராக உள்ள உயர் கல்வித்துறை செயலாளர் பட்டமளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டப் படிப்பு சான்றிதழில், பல்கலைக்கழகத்தின் நிர்வாகக்குழு ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திடுவதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பல்கலைக் கழகத்தின் சிண்டி கேட் குழுவும் இதற்கான ஒப்புதல்களை வழங்கி உள்ளது. அதனால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது’ என்றார்.
விழாவில், உயர்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ், தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் ஆபிரகாம், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர் செயலாளர் வின்சென்ட் உள்பட பலர் பங்கேற்றனர்.