‘‘ஊசிமிளகாய்’’
உலக மக்களுக்கெல்லாம் தொல்லையும், துன்பமும் தரக்கூடிய சிற்சில நாடுகளிடையே நடக்கும், மனித வாழ்வைப் பலி பீடத்தில் ஏற்றும் மகாகொடுமையான ரஷ்யா – உக்ரைன் போரோ, இஸ்ரேல் – பாலஸ்தீன பயங்கரப் போரோ அல்லது மக்களை வாட்டி வதைக்கும் பற்பல வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற வாழ்வாதாரப் பிரச்சினைகளோ, நமது ‘ஞானபூமியான’ பாரத நாட்டில் எதுவுமே முக்கியமே இல்லை!
எல்லாவற்றையும்விட ‘மிக, மிக மிக‘ முக்கிய(‘க்’கை அழுத்துங்கள்) பிரச்சினை எது தெரியுமா?
திருப்பதி வெங்கடாஜலபதியின் லட்டுதான், Top Priority!
அதில் இறைச்சிக் கொழுப்புள்ள நெய் கலப்படத்தால் ‘புனிதம்’ போய்விட்டதாம்! புலம்பாதவர்களே இல்லை ஆந்திர அரசியல் வட்டாரத்தில்! அதையொட்டிய காவிகளும்!
புயலுக்கும், பூகம்பத்திற்குமே ஏற்படாத பரபரப்பை இந்த லட்டு ஏற்படுத்தி, அங்கும் ‘பூணூல் பூேதவாளுக்கு’ இரட்டை வருமானத்தை ஏற்படுத்தியது! அவாளுக்கு கொண்டாட்டம்! எப்படி இன்ப நிகழ்ச்சியான கல்யாணம் என்றாலும், துன்ப நிகழ்ச்சியான கருமாதி என்றாலும் அவாளுக்கு வரவோ வரவு கிட்டுதே – அதுபோன்று பரிஹார பூஜை, இந்த லட்டுப் பிரச்சினையும்கூட – ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் அறிக்கை கேட்கிறார் அந்த மாநில அரசிடம்.
ஆந்திர மாநிலத்திலோ இதைவிட ஓர் அரசியல் போர் – அங்குள்ள கட்சிகளுக்கிடையே பரஸ்பர அறிக்கை யுத்தம்!
ஊடகப் பெருமாள்களுக்கு இதுவே சில நாட்கள் பசி தீர்க்கும் பரபரப்புத் தீனி!
யாராவது வெளிநாட்டவர் வந்து இவற்றை விசாரித்து அறிந்தால், எப்படி சிரிப்பார்கள்? எண்ணிப் பார்த்தால், தலைகுனிவே ஏற்படும்!
பக்திப் போதையுடன், மதத்தை அரசியல் ஆயுத மாக்கி, களத்தில் அறிக்கைப் போர் நடத்துவது பெருமையா? தேசிய அவமானமா?
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51–ஏ(எச்) பிரிவின்கீழ் ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டிய அறிவியல் மனப்பான்மை (Scientific Temper, Spirit of Enquiry), கேள்வி கேட்கும் ஊக்கம், மனிதநேயம், சீர்திருத்தக் கடமை பரப்பும் லட்சணமா இது?
இதை வைத்து தென் மாநிலங்களில் மதவெறியைப் பரப்பி, மதக்கலவரத்தையும் பரப்பத் திட்டம் என்ற செய்தியும் மற்றொரு புறத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறது, இந்த லட்டுப் பிரச்சினை ஆன்மிகப் பாதுகாப்புக்காகவா?
மதவெறியைப் பரப்பி, கலவரங்களை உருவாக்குவது என்பது ஒருபுறமிருக்கட்டும்!
இதுபற்றி முழு உரிமையுடன் பக்தர்களுக்குக் கருத்துச் சொல்ல வேண்டியவர் – திருப்பதி ஏழு கொண்டல வாடுதானே!
பக்தகோடிகள் பதறினால் போதுமா?
பாதிக்கப்பட்டவர் பகவானாக சும்மா இருக்கிறாரே, அவரல்லவா, ‘‘அய்யோ, இப்படி எனக்குத் தந்து ‘புனித’த்தைப் பறிமுதல் செய்துவிட்டீர்களே, அடப்பாவிகளா!’’ என்று புகார் கூறி, சபித்திருக்க வேண்டும்! அதைவிடுத்து, இவ்வளவு ஆர்ப்பாட்டம், ‘சாந்தி ேஹாமம்‘, ‘பஞ்சாங்கப் பரிஹாரம்’ என்ற ‘பிராமண பிசினஸ்’ தழைத்தோங்க வேண்டுமா?
இதிலிருந்து ஒன்று புரிந்துகொள்ளலாம் புத்தியை பறிகொடுத்தவர்கள்?
ஏழுமலையான் எப்போதாவது விற்பனையாகும் லட்டுகளில் ஒரு சிறு துண்டையாவது வாயில் போட்டு மென்னிருப்பாரா? தின்னிருப்பாரா?
அப்புறம் இது யாருக்கு? என்ன தேவை? முழுக்க முழுக்க வியாபாரத் தந்திரம்தானே!
தமிழ்நாட்டில் ஒரு ஹிந்து முன்னணி பிரகஸ்பதி, ’அனுமாரிடம் முறையிடுகிறேன்’ என்கிறார்! அவருக்குப் படைத்த வடை மாலையை ஒரு நாளும் அவரே (நாமக்கல் ஆஞ்சநேயரே) சாப்பிட்டதே இல்லை அவர் சார்பில் வீடுகளில், பலகாரக் கடைகளில் படையெடுக்கும் ஆஞ்சநேயக் குட்டிகளையும் விரட்டி, விரட்டி அடித்து, தடுப்புகளைத்தானே உண்டாக்கினர். பல ஊர்களுக்கும் சுற்றுலா செல்பவர்களுக்கு இது நன்றாகப் புரியுமே!
அடடா, என்னே விசித்திரம்!
‘எங்கள் நாட்டுக்கு எந்த நாடு ஈடு?’
என்று பாடு, பாடு!
லட்டும் கசக்குதம்மா,
மெட்டும் மாறியதம்மா!
உலக நாடுகளின் அறிவியல், உச்சம் இங்கே எப்படி பார்த்தீர்களா?
‘தீராத வினையெல்லாம் தீர்த்து வைக்கும் கோவிந்தனுக்கு இப்படி ஒரு சோதனையா?
‘‘எல்லாம் அவன் செயல் என்றால்,
லட்டில் கலந்தது எவன் செயல்?’’