புதுடில்லி, செப்.22 டில்லியின் புதிய முதலமைச்சராக ஆதிஷி சிங் மர்லேனா நேற்று (21.9.2024) பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சவுரவ் பரத்வாஜ் உள்ளிட்ட 5 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
டில்லி மாநில மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான முறைகேடு வழக்கில் திகார் சிறையில் 155 நாட்களாக இருந்த முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 13-ஆம் தேதி பிணையில் விடுதலையானார். இதையடுத்து நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் பேசும்போது, “முதலமைச்சர் பதவியிலிருந்து 2 நாட்களில் விலகி விடுவேன். மக்கள் எனக்கு மீண்டும் வாக்களித்த பிறகு மீண்டும் அப்பதவியில் அமர்வேன்’’ என்று அறிவித்தார்.
அதனை தொடர்ந்து கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூடி விவாதித்தது. முன்னதாக, “அர்விந்த் கேஜ்ரிவாலைப் போலவே நானும் மக்கள் மன்றத்திடம் போக இருக்கிறேன். தேர்தலில் மக்கள் என் நேர்மையை அங்கீகரித்தால், மீண்டும் நான் பதவியில் அமர்வேன்” என்று மணீஷ் சிசோடியாவும் தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர் ஆதிஷியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. பின்னர் முதலமைச்சர் பதவிக்கு ஒருமனதாக அவரது பெயர் அறிவிக்கப் பட்டது.
இதைத்தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் புதிய முதலமைச்சராக கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த ஆதிஷி சிங் மர்லேனா, முறைப்படி தேர்வு செய்யப் பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த 17.9.2024 அன்று அர்விந்த் கேஜ்ரிவால் தனது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இந்நிலையில் டில்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவை சந்தித்து ஆட்சி அமைக்க ஆதிஷி உரிமை கோரினார்.
இதையடுத்து முதலமைச்சராக பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் நேற்று (21.9.2024) மாலை 4.30 மணிக்கு டில்லி முதலமைச்சராக ஆதிஷி சிங் மர்லேனா பதவியேற்றார். டில்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் இதற்கான விழா நடைபெற்றது. அவருக்கு துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
முதலமைச்சர் ஆதிஷியுடன், 5 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அமைச்சர்களாக சவுரவ் பரத்வாஜ், கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ரான் ஹுசைன், முகேஷ் அஹ்லாவத் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். டில்லியில் தொடர்ந்து 4-ஆவது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது.
இளம் வயது முதலமைச்சர்
தற்போது முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஆதிஷி டில்லியின் இளம் வயது முதலமைச்சர் ஆவார். அவரது வயது 43 ஆகும். மேலும், மேற்கு வங்கத்தின் மம்தாவைத் தொடர்ந்து, நாட்டின் தற்போதைய இரண்டாவது பெண் முதலமைச்சராகவும் ஆதிஷி தேர்வாகியுள்ளார். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக்காலம் நிறைவடையவுள்ளது. எனவே, வரும் பிப்ரவரி மாதம் வரை ஆதிஷி சிங் மர்லேனா தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சிப் பொறுப் பில் இருக்கும்.