ஜார்க்கண்ட் தேர்தல் பா.ஜ.க.வுக்கு காத்திருக்கும் நெருக்கடி

2 Min Read

ராஞ்சி, செப்.21 ஜார்க்கண்ட்டில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பாஜகவுக்கு பழங்குடி மக்களின் வாக்குகளை திரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
சமீப நாட்காளாக ஜார்க்கண்ட் தொடர்பான செய்திகள், தேசிய அளவில் பெரும் கவனம் பெற்றிருந்தன. அம்மாநில முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதிலிருந்து, அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது. ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட பின்னர், தற்காலிக முதலமைச்சராக சம்பாய் சோரன் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், ஹேமந்த் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர், அவர் மீண்டும் முதலமைச்சராக பொறுப் பேற்றுக்கொண்டார்.
இதில் அதிருப்பதியடைந்த சம்பாய் சோரன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவிலிருந்து விலகி, பாஜகவில் அய்க்கியமானார். நடப் பாண்டு இறுதியில் இம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த கட்சி தாவல் தேர்தல் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. மட்டுமல்லாது, இம்மாநிலத்தில் பழங்குடி மக்களின் வாக்குகளை பாஜக சிந்தாமல் சிதறாமல் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

மற்ற மாநிலத்தை ஒப்பிடுகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங் குடியினரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இது வாக்கு சதவிகிதத்திலும் பிரதிபலிக்கிறது. கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாநிலத்தில் பழங்குடி மக்களின் எண்ணிக்கை 21.5% ஆக இருந்தது. இது கடந்த 20 ஆண்டுகளில் மேலும் அதிகரித்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த வாக்குகளை சிதறாமல் பெறுவதில் பாஜக திணறி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். என்னதான் சம்பாய் சோரனை பாஜக தன்வசப்படுத்தியிருந்தாலும், தற்போது வரை இந்து பழங்குடி மக்களைதான் பாஜக அங்கீகரித்து வருகிறது. அதாவது, இந்து பழங்குடியினர் மட்டும்தான் உண்மையான பழங்குடியினர் என்றும், கிறிஸ்தவ பழங்குடியினரை, பழங்குடியினர் பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் பாஜக வின் அகில் பாரதிய வனவாசி கல் யாண் ஆசிரமம் கூறி வருகிறது.

இதற்காக போராட்டங்களையும், பேரணிகளையும் இந்த அமைப்புகள் நடத்தியுள்ளன. மட்டுமல்லாது இன்றுவரை இந்த அமைப்புகள், பழங்குடி மக்களை, பழங்குடியினர் என்று அழைக்காமல் ‘வனவாசிகள்’ என்று அழைத்து வருகின்றன. வனவாசி எனில், காட்டில் வாழும் இந்துக்கள் என அர்த்தம் என்று இவ்வமைப்புகள் விளக்கமளித்துள்ளன.
இந்த அரசியல் கணக்குகளை எல்லாம் உணர்ந்த, ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, பழங்குடியினர் இந்துக்கள் அல்ல என்கிற அரசியலை முன்னெடுத்து வருகிறது. பழங்குடியினர் எந்தவொரு ஒழுங்கமைக்கப்பட்ட மதத்திற்கும் எதிரானவர்கள் என்று சோரன் கூறியுள்ளார். மட்டுமல்லாது ‘சர்னா குறியீடு’ தொடர்பாக சட்டமன்றத்தில் தீமானம் ஒன்றையும் கடந்த 2021ஆம் ஆண்டு சோரன் நிறைவேற்றினார். இந்த தீர்மானம் பழங்குடியினரின் பழக்கவழக்கங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கிறது.

இதற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்டவை ஒப்புக் கொள்ளவில்லை. இந்த தீர்மானம், பழங்குடியினரை பிளவுப்படுத்துவதாக இருப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தன. அதேபோல இந்த தீர்மானத்திற்கு ஒன்றிய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
இதெல்லாம் இந்தத் தேர்தலில் பிரதிபலிக்கும் என்று சொல்லப்படுகிறது. முன்னதாக சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினருக்கு என ஒதுக்கப்பட்டிருந்த 4 மக்களவைத் தொகுதிகளிலும் பா.ஜ.க. தோல்வி யடைந்திருந்தது. இது சட்டமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *