சென்னை, செப். 21- தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு ஏன் தேவை என்று விளக்கம் கேட்டு ஒன்றிய அரசு 4 முறை கடிதம் எழுதியுள்ளதாகவும், இதற்கு தமிழ்நாடு அரசு அளித்துள்ள பதில்கள் மூலம், நீட் விலக்கு தரவேண்டிய சூழல் ஒன்றிய அரசுக்கு நிச்சயம் ஏற்படும் என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித் துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், முதுநிலை சட்டப்படிப்பில் சேர தேர்வாகி யுள்ள மாணவர்களுக்கு, ஒதுக்கீட்டு ஆணைகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று (20.9.2024) வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா குறித்து குடியரசுத் தலைவரிட மிருந்து மனித வள மேலாண்மைத் துறை மற்றும் சுகாதாரத்துறைக்கு விளக்கம் கேட்டு கடிதம் வந்துள்ளது. அதன் அடிப்படையில், உள்துறை அமைச்சகம் தமிழ்நாடு அரசுக்கு இதுவரை நான்கு முறை கடிதம் அனுப்பியுள்ளது. அனைத்துக் கடிதங்களுக்கும் உரிய விளக்கத்துடன் பதிலளித்துள்ளோம்.
தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்ச கத்துக்கு அனுப்பியுள்ள பதில்களால் தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு தர வேண்டிய சூழல் ஒன்றிய அரசுக்கு நிச்சயம் ஏற்படும்.
குறிப்பாக, 4ஆவது முறையாக ஒன்றிய அரசு விளக்கம் கேட்டு அனுப்பிய கடிதத்தில் 2 கேள்விகள் இருந்தன. முதலில், “நீட் தேர்வை பல மாநிலங்கள் ஏற்றுள்ளபோதும் தமிழ் நாடு மட்டும் விலக்கு கேட்பது ஏன்? நீட் தேர்வு இல்லை என்றால் கல்வித் தரம் குறைந்து விடும். நீட் தேர்வு மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்தால்தான் கல்வித்தரம் உயர்வாக இருக்கும்” என்று குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு தமிழ்நாடு அரசு, “நீட் இல்லாமலேயே இந்தியளவில் தலை சிறந்த மருத்துவர்களை தந்துள்ள மாநிலம் தமிழ்நாடு என்றும், நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப் படுகின்றனர்.
நகரப் பகுதி மாணவர்களுக்கு கிடைக்கும் பயிற்சி மய்யம் போன்ற வாய்ப்பு கிராமப்புறத்தில் இருக்கும் மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. நீட் தேர்வால் பயிற்சி மய்யம் நடத்துபவர்கள் தான் பயனடைகின்றனர். தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் கல்வித்தரம் உயர்வானது. எனவே நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு தேவையில்லை. 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்” என பதிலளித்துள்ளோம்.
அடுத்ததாக, “தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதா, நீட் தேர்வை அமல் படுத்துவது குறித்த ஒன்றிய அரசின் சட்டத்திற்கு முரணாக இருக்கிறதே” என கேட்டுள்ளனர்.
அதற்கு அரசு சார்பில், “ஒன்றிய அரசின் நீட் சட்டத்தில் எங்களுக்கு முரண்பாடுகள் உள்ளன. அந்தச் சட்டம் மூலம் எங்களது மாணவர்கள் பாதிக்கப்படக் கூடும். நீட் தேர்வு குறித்து எங்களுக்கு முரண்கள் இருப்பதால்தான் நீட் எங்களுக்கு தேவை இல்லை என்று கூறியுள்ளோம். மேலும், தமிழ்நாடு அரசின் மசோதா தமிழ்நாடு மாணவர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைதான்” என்றும் தெரிவித்துள்ளோம்.
இந்நிலையில், டில்லி செல்லும்போது, பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் விலக்கு குறித்தும், தமிழ்நாட்டிற்கு உரிய மானியத் தொகைகளை முறை யாக வழங்க வேண்டும் என்பது குறித்தும் வலியுறுத்துவார்.
கூடுதலாக தராவிட்டாலும் தர வேண்டிய தொகையையாவது ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.