சென்னை, செப்.20 “சென்னையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் போது மழைநீர் தேங்கும் இடங்களை கண் டறிந்து முன்கூட்டியே படகுகள், மற்றும் மீட்பு சாதனங்கள் கொண்டு போய் நிறுத்தப்படும்,” என தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் அமுதா தெரிவித்துள்ளார்.
பேரிடர் காலங்களில் ஒன்றிய மாநில பேரிடர் முகமைகள் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மற்றும் பயிற்சி சென்னையில் நேற்று முன்தினம் (18.9.2024) தொடங்கியது. தக்ஷிண பாரத் ராணுவ தலைமை அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு, கேரளா, கருநாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றை சேர்ந்த 35 முகமைகளின் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத் தில், தென்பிராந்திய ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் தீரஜ் சேத், தென் மாநில ராணுவ தளபதி கரன்பீர் சிங், தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் உறுப்பினர் லெப்டினென்ட் ஜெனரல் சையத் அட்டா ஹஸ்னைன், தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் அமுதா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர், அய்ஏஎஸ் அதிகாரி அமுதா செய்தி யாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக, அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்டத்தில் அதிகாரிகள் அல்லது தொலைபேசி எண்கள் மாறியிருந்தால் அது குறித்த விவரங்களை புதிதாக சேர்க்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மே ற்கொள்வது குறித்து கடந்த 14.9.2024 அன்று தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சென்னை நகரில் வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், சென்னை நகருக்கு அதிக கவனம் செலுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டம் தாழ்வான பகுதியாக உள்ளதோடு, கடலோர மாவட்டமாகவும் உள்ளது. இதனால், கடந்த மழையின் போது கிடைத்த அனுபவத்தைக் கொண்டு வரும் மழைக் காலத்தில் எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சென்னையில் கடந்த மழையின் போது பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் பட குகள் உள்ளிட்ட மீட்பு சாதனங்கள் கொண்டு செல்லப்பட்டு மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், இந்த ஆண்டு மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து முன்கூட்டியே படகுகள் மற்றும் மீட்பு சாதனங்கள் கொண்டு போய் நிறுத்தப்படும். 15.10.2024 ஆம் தேதிக்குப் பிறகு வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்பதால், அக்டோபர் 2-வது வாரத்துக்குள் மீட்பு சாதனங்கள் கொண்டு போய் நிறுத்தப்படும்.மழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மய்யம் மற்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தரும் தரவுகளின் அடிப்படையில் பொதுமக்களுக்கு முன் கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்படும். ‘டிஎன் அலர்ட்’ என்ற செயலி மூலம் பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் எந்த இடத்தில் மழை நீர் தேங்கும், உடனடியாக அருகில் உள்ள நிவாரண மய்யத்துக்கு செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அதில் தெரிவிக்கப்படும். இவை தவிர, கைப்பேசி மூலமாகவும் எஸ்எம்எஸ் தகவல் அனுப்பப்படும். அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.