மதத்தால் ஜாதிகளும், ஜாதிகளால் மதங்களும் ஊட்டம் பெற்று வாழுகின்றன என்பதால் இரண்டையும் மறுத்து சமூக சீர்திருத்தம் கொண்டு வந்த புரட்சியாளர்கள் ஏராளம். அதே சமயம், மதத்துக்கூடாக மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதைத் தாண்டி மத, ஜாதி மாச்சரியங்களற்ற புதிய பாதையை அமைத்தவர்கள் உண்டு
தந்தை பெரியார், வள்ளலார், அயோத்திதாசர், அண்ணல் அம்பேத்கர், ஸநாதன எதிர்ப்பின் முன்னோடி மாவீரர் அய்யன்காளி ஆகியோர் வரிசையில் நாராயணகுரு வும் முக்கியமானவர்
ஈழவ சமுதாயத்தில் விவசாயம் செய்து வந்த மாடன் ஆசான் – குட்டி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தவர்தான் நாராயணன். இவர் பெற்றோர்களால் நாணு என்று சுருக்கமாகவும் செல்லமாகவும் அழைக்கப் பட்டார்.
ஈழவர் சமுதாயம் அந்த சமயத்தில் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளான சமுதாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
15 வயதில் தனது தாயை இழந்த நாராயணன் அதிகமான நேரம் தனது தந்தையின் ஆசிரியப் பணியி லும், மாமாவின் ஆயுர்வேத மருத்துவப் பணியிலும் இருந்தார்.
கருநாகபள்ளி எனுமிடத்தில் பிரபலமான பண்டி தராக விளங்கிய கும்மம்பிள்ளி ராமன் பிள்ளை என்பவரிடம் கல்வி கற்று, அங்கு சமஸ்கிருதத்தை முழுமையாகக் கற்றுக் கொண்டார். விளைவாக, அவர் வேதங்களையும், உபநிடதங்களையும் கற்றுத் தேர்ந்தார். அதன் பிறகு அருகிலுள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியர் பணி செய்தார்.
இதற்கிடையில், கோயில்களில் ஈழவ ஜாதி உள்பட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் நுழையக் கூடாது வேதங்களைக் கற்கவும் பூஜைகள் செய்யவதும் பார்ப்பனர்கள் மட்டுமே என்ற நிலை எங்கும் நிறைந்திருந்ததை அவர் கண்டார்.
சமூகச் சிக்கல்களின் தோற்றுவாயாக ஜாதிய முறை இருப்பதைக் கண்டுணர்ந்த நாராயண குரு, அதை ஒழித்துக்கட்ட முடிவு செய்தார்; உறுதி பூண்டார்.
அதற்கு இரண்டு செயல் திட்டங்களை வகுத்தார்.
1. ஜாதிக் கொடுமைகளை – உணர்வுகளை மக்கள் மத்தியிலிருந்து களைதல்.
2. அவர்களிடம் நிலவும் மூட நம்பிக்கைகளை அகற்றுதல்.
நாயர்கள் தங்களைத் தீண்டுவதில்லை; இழி வாக, தீண்டத்தகாதவர்களாக நடத்துகிறார்கள் என்று ஈழவர்கள் இவரிடம் சொன்னபோது, “முதலில் நீங்கள் உங்களுக்குக் கீழாக நினைக்கும் புலையர்களைச் சமமாக நடத்துங்கள்; உங்களோடு அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்’’ என்றார்.
தீண்டாமையிலிருந்து, ஜாதி அழிவிலிருந்து தங்களைக் கீழ் ஜாதியார் உயர்த்திக் கொள்ள, இக்கொடுமைகளை ஒழிக்க ஒரே வழி, அம்மக்கள் தங்களையும் கல்வி, செல்வம், ஆன்மிகம் ஆகிய தளங்களில் மேம்படுத்திக் கொள்வதும், ஆதிக்கச் சக்திகளைவிட கல்வி, செல்வம், ஆன்மிகம் வல்லமை மிக்கவர்களாக ஆக்கிக் கொள்வதுமேயாகும் என்பது நாராயண குருவின் கொள்கையாக இருந்தது.
உயர்ஜாதியினர் வணங்கும் பொதுக் கோவில்களில் இவர்களை விடமாட்டார்கள். எனவே, இவரே பொதுக் கோவில்களை உருவாக்கினார்.
1888ஆம் ஆண்டு, திருவனந்தபுரம் அருகிலுள்ள அருவிபுரம் என்னும் சிற்றூரில், ஆற்றிலிருந்து ஒரு கல்லை எடுத்து வந்து, சிவலிங்கமாக (பிரதிஷ்டை) பிரதிட்டை செய்தார். ஈழவர்களுக்குப் பிரதிட்டை செய்ய உரிமை இல்லையே என்று உயர்ஜாதியார் உரிமைக்குரல் எழுப்பியபோது, ‘‘நான் நிறுவியது (பிரதிஷ்டை செய்தது) நம்பூதிரிகளின் சிவன் அல்ல’’ என்று அவர்கள் வாயை அடைத்தார். கோவிலின் முன், ‘‘ஜாதி, மத பேதமில்லாமல் மக்கள் அனைவரும் வழிபடலாம்’’ என்று அறிவிப்பை எழுதி வைத்தார் 2006- ஆம் ஆண்டில் நாராயண குருவிற்கு இந்திய அரசு சிறப்பு நாணயங்களையும், அஞ்சல் தலையையும் வெளியிட்டு சிறப்பித்தது.