புதுடில்லி, செப்.20- ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் மலிவான தந்திரம், திசைதிருப்பும் முயற்சி. 3 மாநிலங்களுக்குக்கூட ஒன் றாக தேர்தல் நடத்த முடியவில்லை என்று எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
மல்லிகார்ஜுன கார்கே
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது பற்றி எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறியதா வது:- ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நடைமுறைக்கு சாத்தியமற்றது. அதை செயல்படுத்த முடியாது. சட்டமன்றத் தேர்தல்கள் நடப்பதாலும், வேறு எந்த பிரச்சினையும் இல்லாததாலும், உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் தந்திரமாக இதை செய்துள்ளனர்.
-இவ்வாறு அவர் கூறினார்.
ஹரிஷ் ரவத்
காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிஷ் ரவத் கூறியதாவது:- ஒன்றன்பின் ஒன்றாக தேர்தலில் தோல்வி அடைந் தால், பா.ஜனதாவின் கூட்டணி அரசு கவிழும் அபாயம் உருவாகும். எனவே, அவர்கள் இந்த திட்டத்தை பிடித்துக்கொண்டுள்ளனர்.
-இவ்வாறு அவர் கூறினார்.
பினராயி விஜயன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவரும், கேரள முதலமைச்சருமான பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தின் பின்னணியில், கூட்டாட்சி முறையை பலவீனப்படுத்தும் சங்பரிவாரின் மறைமுக செயல்திட்டம் உள்ளது. தற்போதைய தேர்தல் அரசியலை 5 அதிபர் ஆட்சிமுறைக்கு மாற்ற அவர்கள் ரகசிய முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு சூழ்நிலை, பின்னணி உள்ளது. அதை கருத்தில் கொள்ளாமல், எந்திரத்தனமாக, சில மாநிலங்களில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தி. மக்கள் தீர்ப்பைநாசமாக்குவது ஜனநாயகத்தை அழித்துவிடும்.
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டெரிக் ஓ பிரையன்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் கூறியதாவது:- ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம்,பா.ஜனதாவின் மலிவான தந்திரம். அப்படியானால், காஷ்மீர், அரியானா தேர்தல்களுடன் மராட்டிய மாநிலத்துக்கு ஏன் தேர்தல் அறிவிக்கவில்லை?
3 மாநிலங்களுக்கு ஒன்றாக தேர்தல் நடத்த முடியாத நீங்கள், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை பற்றி ஏன் பேசுகிறீர்கள்? இதற்காக எத்தனை அரசமைப்புச் சட்டத் திருத்தம் தேவைப்படும்? எத்தனை சட்டமன்றங்களின் பதவிக்காலத்தை முன்கூட்டியே முடிக்க வேண்டி இருக்கும் என்று சொல்லத் தயாரா?. இவ்வாறு அவர் கூறினார்.
அசாதுதின் ஓவைசி
அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதின் ஓவைசி கூறியதாவது:- ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம், கூட்டாட்சி முறையை அழித்து விடும். பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் உள்ளாட்சிதேர்தல்களில் கூட பிரச்சாரம் செய்ய வேண்டிய கட்டாய தேவை இருப்பதால், அவர்களுக்குத்தான் அடிக்கடி தேர்தல் நடத்துவது பிரச் சினை. மற்றவர்களுக்கு பிரச்சினை இல்லை. அவர்களுக்காக நாங் கள் ஏன் இத்திட்டத்தை ஏற்க வேண்டும்?
-இவ்வாறு அவர் கூறினார்.
சந்தீப் பதக்
ஆம் ஆத்மி எம்.பி. சந்தீப் பதக் கூறியதாவது:- காஷ்மீர், அரியானா, மராட்டியம், ஜார்கண்ட் ஆகிய 4 மாநிலங்களுக்கு ஒன்றாக தேர்தல் நடத்தக்கூட பா.ஜனதாவுக்கு திறமை இல்லை. பிறகு எப்படி நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியும்?
-இவ்வாறு அவர் கூறினார்.
ஜார்கண்ட் முக்திமோர்ச்சா எம்.பி.மகுவா மஜி கூறுகையில், “ஒரே கட்சிதான் நாட்டை ஆள வேண்டும் என்று பா.ஜனதா விரும்புகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை பயன்படுத்தி, மாநில கட்சிகளை அழிக்க பா.ஜ.க. முயற்சிக்கும்” என்றார்.