திருப்பதி லட்டில் மீன் எண்ணெய், மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு!
ஆய்வில் வெளியான தகவல்!
திருப்பதி, செப்.20 திருப்பதி லட்டில் மீன் எண்ணெய், மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பது குறித்து ஆய்வில் வெளியான தகவல் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
தெலுங்கு தேசம் கட்சி, நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்குப் பிறகு, எதிர்க்கட்சியான ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.
இதில் திருப்பதி கோயில் விவகாரங்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன.
இது தொடர்பாக நேற்று (19.9.2024) நடந்த என்.டி.ஏ. சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் (ஒய்.எஸ்.ஆர்) இருந்தபோது திருமலையின் ‘புனித’த்தைக் கெடுத்துவிட்டனர் என்றும் ‘புனித’மான திருமலை லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியும் மாசுபடுத்தியுள்ளனர் என்றும் பரபரக்கும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சைகளைக் கிளப்ப, திருப்பதி லட்டில் மீன் எண்ணெய், மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பது குறித்து ‘தேசிய பால் வள மேம்பாட்டு நிறுவனம்’ ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருந்தது. அந்த ஆய்வில் மீன் எண்ணெய், சோயா பீன், சூரிய காந்தி எண்ணெய், மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு உள்ளிட்டவை திருப்பதி லட்டில் சேர்க்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.